ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுப் போட்டிகளுடன் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் நடந்தேறியுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் ஐந்தாவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 07ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, பழைய விமான நிலையம் பகுதியில், அல்நூர் மருத்துவமனை அருகில் அமைந்துள்ள கே.எஃப்.சி. பூங்காவில் சிறப்புற நடந்தேறியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்!
இரத்தப் பரிசோதனை இலவச முகாம்:
அன்று 10.00 மணி துவங்கி, ஜும்ஆ தொழுகைக்கு முன்பு வரை, டாக்டர் எஸ்.செய்யித் அஹ்மத், டாக்டர் எச்.எம்.ஹமீத் யாஸிர் ஆகியோரடங்கிய மருததுவர் குழு ஒருங்கிணைப்பில் இரத்தப் பரிசோதனை இலவச முகாம் நடைபெற்றது.
பொதுக்குழுக் கூட்டம்:
ஜும்ஆ தொழுகைக்குப் பின், மன்றத்தின் 5ஆவது பொதுக்குழுக் கூட்டம், மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ தலைமையில், கவுரவத் தலைவர் ஹாஜி ஐ.இம்தியாஸ் அஹ்மத் முன்னிலையில் நடைபெற்றது.
எஸ்.ஏ.சி.ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
அழைப்பையேற்று இந்நிகழ்வில் பங்கேற்க வருகை தந்திருந்த மன்றத்தின் அனைத்து நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள், சிறப்பழைப்பாளர்கள் அனைவரையும், மன்றத்தின் மக்கள் தொடர்பு செயலர் ஏ.ஆர்.ரிஃபாய் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ தலைமையுரையாற்றினார்.
அனைவரையும் வரவேற்று தனதுரையைத் துவக்கிய அவர், மன்றச் செயல்பாடுகளில் உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் கூடிய ஈடுபாட்டைப் பாராட்டிப் பேசியதோடு, ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
இதர காயல் நல மன்றங்களுடன் இணைந்து அபூதபீ காயல் நல மன்றம் நடத்திய ரமழான் இலவச உணவுப் பொருட்கள் விநியோகம், இரத்த சோகை பரிசோதனை இலவச முகாம் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசிய அவர், கடந்த ஆண்டைப் போல நடப்பாண்டும் உறுப்பினர்கள் சிறப்புற செயலாற்றிடவும், சந்தா தொகை நிலுவையிலுள்ளோர் உடனடியாக அளித்து மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொடர ஒத்துழைக்குமாறும், மன்றத்தால் நடத்தப்படும் கூட்டங்களில், அழைக்கப்படுவோர் குறித்த காலத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
சிறப்பழைப்பாளர் உரை:
இக்கூட்டத்தில், துபை காயல் நல மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, தனக்கேயுரிய நகைச்சுவையுடன் உரையாற்றினார்.
உறுப்பினர்களின் மகத்தான ஒத்துழைப்போடு இன்று நகர்நலப் பணிகளில் முனைப்புடன் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அபூதபீ காயல் நல மன்றம் துவக்கப்படுவதற்கு தான் காரணியாக இருந்ததை நினைவுகூர்ந்துப் பேசிய அவர், அதன் பணிகள் மென்மேலும் சிறப்புற தான் வாழ்த்திப் பிரார்த்திப்பதாகக் கூறி, தனதுரையை நிறைவு செய்தார்.
நினைவுப் பரிசு:
சிறப்பு அழைப்பாளர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ அவர்களுக்கு, அபூதபீ காயல் நல மன்றத்தின் கவுரவ தலைவர் ஐ.இம்தியாஸ் அஹ்மத், மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, துணைத்தலைவர் எம்.மக்பூல் ஆகியோரினைந்து நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினர்.
ஆண்டறிக்கை:
இதுநாள் வரையிலான கடந்த ஓராண்டின் மன்ற நடவடிக்கைகளையும், கடந்த கூட்ட நிகழ்வறிக்கையையும், துணைச் செயலாளர் கே.ஹுபைப் ஆண்டறிக்கையாக வாசித்தார்.
மருத்துவ வினா-விடை நிகழ்ச்சி:
நிகழ்வில் பங்கேற்றோரின் மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கு, ‘மருத்துவ முன்னோட்டம்’ எனும் தலைப்பின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில், டாக்டர் எச்.எம்.ஹமீத் யாஸிர் விளக்கமளித்துப் பேசினார்.
மதிய உணவு விருந்துபசரிப்பு:
14.10 மணிக்கு அனைவருக்கும் மதிய உணவாக - ஹைதராபாத் பிரியாணி பரிமாறப்பட்டது.
2ஆவது அமர்வு:
மதிய உணவுக்குப் பின்பான சிறிது நேர ஓய்வைத் தொடர்ந்து, 15.00 மணிக்கு, இரண்டாம் அமர்வு துவங்கியது.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
அல்லாஹ்வின் பேரருளால், நடப்பு நிர்வாகம் தனது மூன்று ஆண்டு பொறுப்புக் காலத்தை சிறப்புற நிறைவேற்றி முடித்துள்ளதையடுத்து, புதிய நிர்வாகிகள் ஜனநாயக முறையில் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
கவுரவ தலைவர்:
ஹாஜி ஐ.இம்தியாஸ் அஹ்மத்
தலைவர்:
மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ
துணைத்தலைவர்:
எஸ்.ஏ.சி.ஹமீத்
செயலாளர்:
வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை
இணைச் செயலாளர்:
கே.ஹுபைப்
பொருளாளர்:
பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன்
இணைப் பொருளாளர்கள்:
எம்.ஓ.அன்ஸாரீ
நோனா அபூஹுரைரா
மக்கள் தொடர்பு செயலர்:
ஏ.ஆர்.ரிஃபாய்
செய்தி தொடர்பாளர்:
எம்.இ.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
செயற்குழு உறுப்பினர்கள்:
எல்.டீ.இப்றாஹீம்
சாளை தாவூத் நெய்னா
இவ்வாறு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. மன்றத்தின் நடப்பு நடவடிக்கைகள், வருங்கால செயல்திட்டங்கள், தாயகம் காயல்பட்டினத்தின் பொது நடப்புகள் குறித்து இந்நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
அபூதபீயில் பணியாற்ற வேலைவாய்ப்பு பெற்று, புதிதாக வந்துள்ள காயலர்கள், மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக இக்கூட்டத்தில் தன்னறிமுகம் செய்துகொண்டனர்.
வினாடி-வினா போட்டி:
அஸ்ர் தொழுகைக்குப் பின், அனைவரையும் கவர்ந்த அழகிய வினாடி-வினா போட்டி நடைபெற்றது. அணிக்கு 10 பங்கேற்பாளர்கள் வீதம் 7 அணிகள் பிரிக்கப்பட்டு, மார்க்கம், பொது அறிவு தொடர்பான கேள்விகளை உள்ளடக்கி, 6 சுற்றுகளாக இப்போட்டி நடத்தப்பட்டது.
மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ மார்க்கம் தொடர்பாகவும், டாக்டர் எஸ்.செய்யித் அஹ்மத் மருததுவம் தொடர்பாகவும், காயல்பட்டினத்தில் வினாடி-வினா போட்டிகளை நடத்தி புகழ்பெற்ற எல்.டீ.இப்றாஹீம் பொது அறிவு தொடர்பாகவும் கேள்விகளைக் கேட்க, பங்கேற்பாளர்கள் விடையளித்தனர்.
நிறைவில், ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ தலைமையிலான அணி முதற்பரிசையும், ‘துணி’ உமர் தலைமையிலான அணி இரண்டாவது பரிசையும் பெற்றன. ஏ.ஆர்.ரிஃபாய், எஸ்.ஏ.சி.ஹமீத் ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.
சிறார் விளையாட்டுப் போட்டிகள்:
வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை ஒருங்கிணைப்பில், சிறுவர்-சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்புற நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவு:
மன்றத்தின் புதிய இணைப் பொருளாளர் நோனா அபூஹுரைரா நன்றி கூறினார்.
அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்புற நடந்தேற அருள் புரிந்த அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றி கூறிய அவர், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற - சிறப்பழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பரிசுப் பொருட்கள் - வாகன வசதிகள் செய்து தந்தோருக்கும், நிகழ்ச்சிகளை வழமை போல தன் அழகுத் திறமையால் படப்பதிவு செய்த ‘ஃபோட்டோக்ராஃபர் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத், நாகர்கோயில் அலெக்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் துஆ இறைஞ்ச, ஸலவாத் - கஃப்பாராவுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் இறையருளால் இனிதே நிறைவுற்றன, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
சிற்றுண்டியுபசரிப்பு:
நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவருக்கும், மாலையில் சுவையான இஞ்சி தேனீர், சமோஸா சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
அனைவரும் இணைந்து குழுப்படம் எடுத்துக்கொண்டவர்களாக வசிப்பிடம் திரும்பினர்.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளின்போது பதிவுசெய்யப்பட்ட படங்களை, கீழ்க்காணும் இணைப்புகளில் சொடுக்கி தொகுப்பாகக் காணலாம்:-
தொகுப்பு 1
தொகுப்பு 2
தொகுப்பு 3
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
A.R.ரிஃபாய்
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
மற்றும்
நாகர்கோயில் அலெக்ஸ்
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
கடந்தாண்டு அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 22:59 / 20.11.2014] |