காயல்பட்டினத்தில் பெய்துள்ள கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நகராட்சி கண்டுகொள்ளவில்லை என்றும், அதனைக் கண்டித்து நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டத்தை, இம்மாதம் 18ஆம் நாளன்று நடத்தப்போவதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
நமதூர் காயல்பட்டினத்தில் கடந்த ஒரு மாத காலமாகப் பெய்த மழையின் காரணமாக, நமதூரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி, நகரில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நோய்களால் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து, வாழ வழியில்லாமலும், பள்ளிவாசல்கள், கொயில்கள், கல்விக் கூடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதாலும், பொதுமக்களும் - மாணவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த அவல நிலையை, காயல்பட்டினம் நகராட்சி கண்டுகொள்ளாமல், பொதுமக்கள் படும் வேதனையைக் கண்டு பாராமுகமாக இருந்து வருவதைக் கண்டித்து, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 18.11.2014 செவ்வாய்க்கிழமையன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான ‘தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் மன்ஸில்’ கட்டிடத்தில், நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூ்டத்தில் கலந்துகொள்ளக் கோரி, அவற்றின் பிரதிநிதிகளுக்கு முறைப்படி அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |