காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று (நவம்பர் 14 வெள்ளிக்கிழமை) 07.00 மணி துவங்கி, 10.45 மணி வரை கனமழை பெய்தது. இடி, மழையுடன் பெய்த இம்மழை காரணமாக பெரும்பாலும் நகரின் அனைத்து வீதிகளிலும் மழை நீர் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது.
காயல்பட்டினம் எல்.எஃப். வீதியில் - செய்கு ஹுஸைன் பள்ளியோடு ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதி, தாழ்வாக உள்ளதால், முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் செல்லவும், வீட்டிலிருந்து வெளியே செல்லவும் மிகவும் அவதிப்படுகின்றனர்.
ஏற்கனவே பெய்த தொடர்மழையால் மழைநீர் தேங்கியபோது, காயல்பட்டினம் நகராட்சியில் முறையிட்டதாகவும், அப்பகுதியில் நெடுஞ்சாலை குறுக்கே செல்வதால் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி பெறாமல் சாலையை வெட்டி மழை நீரை வழிந்தோடச் செய்ய இயலாத நிலையுள்ளது என்று கூறியதாகவும் அப்பகுதி மக்கள் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்தனர்.
செய்கு ஹுஸைன் பள்ளிக்கு மேற்கே இந்த நெடுஞ்சாலைக்கு அடியில் ஒரு பாலமும், பேருந்து நிலையத்தின் கீழ்ப்பகுதி நுழைவாயில் அருகே ஒரு பாலமும் பராமரிப்பின்றி அடைபட்டுக் கிடப்பதாகவும், அவற்றிலுள்ள கல், மண் உள்ளிட்ட அடைப்புகளை அகற்றினாலே தமது பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீர் பெருமளவு வழிந்தோடி, மூப்பனார் ஓடை வழியாக கடலில் கலக்க வாய்ப்புள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அதையேனும் செய்து தர வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
ஏற்கனவே பெய்த மழையால் தேங்கிய மழை நீரை, அப்பகுதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் பெருமுயற்சியெடுத்து மோட்டார் மூலம் உறிஞ்சி அகற்றிட ஏற்பாடு செய்தார் என்றும், இந்தப் பணியையும் அவர் முயற்சித்து செய்து தர வேண்டுமென்றும் அவர்கள் மேலும் கூறினர்.
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |