தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பதுக்கி வைத்திருந்த 23 மூட்டை மருத்துவம் குணம் வாய்ந்த தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டைகளை ஆறுமுகனேரி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் தெரிவிப்பதாவது:
காயல்பட்டினம் பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக ஆறுமுகனேரி போலீஸாருக்கு திங்கட்கிழமை தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆறுமுகனேரி உதவி ஆய்வாளர் மாடசாமி, தனிப்பிரிவு தலைமைக்காவலர் ரகு, காவலர்கள் செல்வமுருகன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் காயல்பட்டினம் காட்டு தைக்காத் தெருவிலுள்ள காஜாமொகிதீன் மகன் அல்அமீன் (37) வீட்டில் சோதனையிட்டு வேகவைத்து ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த 23 மூட்டை கடல் அட்டைகளை கைப்பற்றினர்.
மேலும் அல் அமீனையும் பிடித்து கடல் அட்டைகளையும், அல் அமீனையும் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பகத்திடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து அல் அமீன் தப்பிவிட்டார் என காப்பகத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமைதான் தூத்துக்குடியில் 2 மூட்டை கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காயல்பட்டினத்தில் கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 1 கோடி மதிப்புள்ளது என்றும் வெளிநாடுகள் மதிப்பில் சுமார் ரூபாய் 3.5 கோடி எனவும் கூறுகின்றனர்.
இந்த கடல் அட்டைகள் இந்தோனிஷியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய வெளிநாடுகளுக்கு மருத்துவ பயன்பாட்டிற்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. |