மும்பை தொடர் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், இன்று 17.30 மணியளவில் - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) நகர கிளை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அவரது கருத்துக்கள் வருமாறு:-
2009ஆம் ஆண்டு மனித நேய மக்கள் கட்சி தொடக்கப்பட்ட நாள் முதல், தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் தமுமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எங்களது முதல் போராட்டமே மதுக்கடைகள் முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்தான். தமிழகம் தழுவிய அளவில், மது ஆலைகள் முன்பும், மதுக்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கிகள் முன்பும் போராட்டம் நடத்தி இருக்கிறோம். சட்டமன்றத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் முழுமையான மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என பேசியிருக்கிறோம்.
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் பல்வேறு சமூக நல அமைப்புகளும் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. தமிழக அரசு உடனடியாக முழுமையான மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மதுக்கடை விற்பனை மூலம் அரசுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கிரானைட் குவாரியை அரசே ஏற்று நடத்துவது போன்ற மாற்று வழிகளைக் கையாள்வதன் மூலம் மதுவிலக்கு காரணமாக இழக்கப்படும் வருவாயை விட பன்மடங்கு ஈட்ட முடியும். பெரியோர் முதல் சிறியோர் வரை மதுவினால் பாதிக்கப்பட்டு சீரழித்து வருகின்றனர். வளமான தமிழகம் அமைய மதுவிலக்குக் கொள்கையை அமுல்படுத்தியே ஆக வேண்டும்.
உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை தொடர்பான வழக்கில் மாநில போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுத்த வழக்குகளில், ஆயுள் தண்டனை பெற்றவர்களை மாநில போலீசாரே விடுவிக்கலாம் என்று கூறியிருக்கிறது. இதனடிப்படையில், தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாகூப் மேமனுக்கு இந்த மாத இறுதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய சட்டப் புத்தகங்களில் தூக்கு தண்டனை என்பதே இருக்கக் கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், தானாக முன்வந்து சரணடைந்தவர்தான் யாகூப் மேமன். அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவான முறையில் நிரூபிக்கப்படவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. தூக்குத் தண்டனை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் முரண்பாடாக உள்ளதாக உச்சநீதிமன்ற பெஞ்ச் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகவாவது குறைக்கலாம்.
பொதுவாக தூக்குத் தண்டனை என்பது முஸ்லிம் பிரமுகர்களுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டு வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், அவசர அவசரமாக அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்போது யஃகூப் மேமனுக்கும் அதே நிலைப்பாடுதான் எடுக்கப்பட்டுள்ளது. எனவே தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழகத்தின் நலனுக்குப் பாடுபடக்கூடிய - சமூக நல்லிணக்கத்திற்கு வழிகாட்ட கூடிய கட்சியுடன்தான் தேர்தலில் கூட்டணி வைப்போம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்புதான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அதிமுகவின் 4 ஆண்டு ஆட்சியில் பல்வேறு நன்மையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மக்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இன்னும் அதிக சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும்.
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதலே மின் பற்றாக்குறையைப் போக்க சூரிய ஒளி மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம்.
மத்தியில் வளர்ச்சியை மட்டுமே கூறி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு பல்வேறு ஊழல்களில் சிக்கித் தவித்து வருகிறது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டும் 2 மாதங்களும் ஆகிறது. மத்திய ஆட்சியிலும், பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர்.
பொருளாதாரக் குற்ற வழக்கில் தேடப்பட்ட நபருக்கு வெளியுற துறை அமைச்சரே அபயமளிக்கும் வகையில் உதவியிருக்கிறார். இது மிகவும் கண்டிக்கதக்கது. இந்தப் பிரச்சனையில் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகள் நியாயமானதே. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இதை விட அற்ப விஷயங்களுக்கெல்லாம் பாராளுமன்றத்தை பாஜக முடக்கியது.
இவ்வாறு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் கூறினார்.
படம்:
A.R.ஷேக் முஹம்மத்
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:15 am / 28.7.2015] |