சிங்கப்பூரில், ஜூலை 17 வெள்ளிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அங்கு வசிக்கும் காயலர்கள், அந்நாட்டின் பல்வேறு பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின், ஒன்றுகூடி மகிழ்ந்ததோடு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், மறுநாள் - ஜூலை 18 வெள்ளிக்கிழமையன்று இன்பச் சிற்றுலாவும் சென்று வந்துள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் சங்கை மிகு ரமலானைப் பூர்த்தி செய்து ஈகைத் திரு நாளைக் கொண்டாடி மகிழ்ந்த நிலையில் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறுப்பினர்களின் ஒன்றுகூடல் மற்றும் சிற்றுலாப் பயணம் வெகு சிறப்புடன் நடைபெற்றது.
முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் குறித்த விபரங்களை உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பெருநாளுக்கு மறுதினம் சனிக்கிழமை 18/072015 அன்று மதியம் 15:30 மணிக்கு பீச் ரோட்டிலிருந்து புறப்பட்ட பேருந்து பெடூக் பகுதியில் வசிக்கும் உறுப்பினர்களையும் ஏற்றிக்கொண்டு மாலை 16:30 மணிக்கு அலோஹா லோயங் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சுற்றுலா மாளிக்கைக்கு வந்தடைந்தது, பெண்கள் குழந்தைகளுக்கு கட்டிடத்தின் மேல் தளத்தில் இரண்டு பெரிய அறைகளும், ஆண்களுக்கு கீழ்த்தளத்தில் மூன்று அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.
முதல் கட்டமாக அனைவரும் சேர்ந்து கூட்டாக அஸர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றினர். உறுப்பினர்களுக்கு மாலை சிற்றுண்டியாக தேநீர் மற்றும் சமூசா பரிமாறப்பட்டது. சுற்றுலா மாளிகையின் உட்புற வளாகத்தில் பிரம்மாண்டமான நீச்சல் குளம், குழந்தைகளுக்கான உள் விளையட்டு அரங்கம், டென்னிஸ் கோர்ட், நடைபயிற்சி தளம், உடற்பயிற்சிக்கூடம் போன்ற ஏராளமான வசதிகள் நிறைந்து காணப்பட்டது.
சிங்கை காயல் நல மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள் தலைமையில் சமையல் குழுவினர் இரவு உணவுக்கான ஆயத்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
குழந்தைகள் அனைவரும் குதூகலத்துடன் ஓடியாடி விளையாடினர். பின்னர் நீச்சல்குளத்தில் நீராடி மகிழ்ந்தனர். நோன்பு வைத்திருந்தவர்களுக்காக கஞ்சி மற்றும் சிற்றுண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நோன்பு திறந்த பின்னர் கூட்டாக அனைவரும் ஜமாஅத்துடன் மஃரிப் தொழுகையை நிறைவேற்றினர், இரவு எட்டு மணிக்கு இளைஞர் பட்டாளம் இரு அணிகளாகப் பிரிந்து நீச்சல்குளத்தில் இறங்கினர். அவர்கள் ஆரவாரத்துடன் தண்ணீர்ப் பந்து விளையாடினர்.
இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றிய பின்னர் அனைவருக்கும் காயலின் பாரம்பரிய உணவான சஹன் சாப்பாடு எனும் கலறிச்சோறு பறிமாறப்பட்டது. நெய்ச்சோறு கறி, கத்திரிக்காய் மாங்காய், வெறுஞ்சோறு மற்றும் புளியணமும் வழங்கப்பட்டன.
இரவு உணவுக்குப் பின்னர் வெறுந்தேயிலை எனும் இஞ்சி டீ குடித்ததுடன் உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர். நேரம் போவதே தெரியாமல் நள்ளிரவு மூன்று மணி வரை இது தொடர்ந்தது.
இதன் இடையில் மன்றத்தின் நல திட்டப்பணிகளுக்காக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வெற்று கடித உறைக்குள் அவரவர் தத்தம் விருப்பம் போல் நன்கொடைகளை வைத்து திரும்பப் பெறப்பட்டது. உறுப்பினர்களின் இல்லங்களிலிருந்து பெறப்பட்ட உண்டியல் மற்றும் கடித உறை நன்கொடைகள் பிரித்து எண்ணப்பட்டன. இதில் அனைத்து மழலைகளும் நாணயங்களைப் பிரித்து எடுக்கும் பணியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.
உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடித உறை மூலம் நன்கொடையாக முப்பத்தி ஓராயிரம் ரூபாயும். உறுப்பினர்களின் இல்லங்களிலிருந்த பெறப்பட்ட உண்டியல் தொகை எழுபத்தி இரண்டாயிரம் ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாய் பெறப்பட்டது. இத்தொகையை மன்றத்தின் ஆக்கப்பணிகளுக்கான வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டது.
அன்றிரவு நோன்பு வைப்பவர்களுக்கான சஹர் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு சிலர் நோன்பு நோற்றனர். அதிகாலை சுப்ஹ் தொழுகைக்குப் பின்னர் தேநீர் பரிமாறப்பட்டு ஊர் நடப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். காலை ஒன்பது மணிக்கு ஹிஜாஸ் மைந்தனின் கை வண்ணத்தில் காயல் இறால் சேமியா சுடச்சுட பரிமாறப்பட்டு காலை உணவை முடிந்ததும் அனைவரும் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் தத்தம் இருப்பிடம் திரும்பினர்.
அன்றாடம் பணி நிமித்தம் ஓய்வின்றி உழலும் உறுப்பினர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும், குழந்தைகளுக்கும் இந்த இன்பச் சிற்றுலாப் பயணம் நெஞ்சில் இனிக்கும் இனிய நினைவாக அமைந்திருந்தது. இதில் சிங்கைக்கு வந்திருந்த உறுப்பினர்களின் உறவினர்கள் சிலரும் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தித் தொடர்பாளர் - KWAS
சிங்கை காயல் நல மன்றம் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |