“காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிச்சாலைக்கு எதிராக, சென்னையிலுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகைப் போராட்டம் ஏன்?” எனும் தலைப்பில், SDPI கட்சியின் சார்பில், காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில், திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஆறுமுகநேரியில் DCW ராசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களின் நச்சுக் கழிவுகள் காற்றிலும், கடலிலும் கலக்கப்படுகிறது. இதனால் இதனைச் சுற்றியுள்ள காயல்பட்டினம், ஆறுமுகநேரி, தலைவன்வடலி, ஆத்தூர், புன்னக்காயல், பழையகாயல் உள்ளிட்ட இன்னும் பல்வேறு கிராமங்களிலுள்ள மக்கள் உயிர்கொல்லி புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளனர். எனவே இந்த DCW ரசாயன ஆலையை இழுத்து மூடக்கோரி பல்வேறு அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டும் அரசு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக SDPI கட்சி இந்தப் பிரச்சனையை முன்னெடுத்து இதனை சுற்றியுள்ள கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம், கிராமத் தலைவர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் சந்திப்பு, நோயினால் இறந்தவர்களின் குடும்பங்கள் சந்திப்பு, மேலும் காயல்பட்டினத்தில் 2014 டிசம்பர் 30ம் தேதி DCW ஆலைகு எதிராக மாபெரும் முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தியது.
இதன் அடுத்த கட்டமாக எதிர்வரும் ஆகஸ்டு 21 ஆம் தேதி சென்னையில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகம் முற்றுகைப் போராட்டத்தை SDPI கட்சி நடத்துகிறது. இதன் விளக்கப் பொதுக்கூட்டம் காயல்பட்டினத்தில் ஜூலை 20ம் தேதி நடைபெற்றது.
காயல்பட்டினம் சீதக்காதி திடலில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்துக்கு SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஷேக் அஷ்ரப் அலி ஃபைஜி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சம்சுதீன் வரவேற்புரையாற்றினார்.
SDPI கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக், ‘மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகம் முற்றுகை ஏன்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
DCW ஆலை இழுத்து மூடப்படும் வரை SDPI கட்சியின் போராட்டம் தொடரும் எனவும் அவர் சூளுரைத்தார். மேலும், நமது தலைமுறை சந்ததியினரை காப்பாற்ற ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்குபெற அழைப்பு விடுத்தார்.
இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் உஸ்மான் கான், அணு சக்திக்கெதிரான மக்கள் கூட்டமைப்பு தோழர் முகிலன், உடன்குடி PSV மீன் அரவை ஆலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜ மார்த்தாண்டன் ஆகியோரும் DCW ரசாயன ஆலைக்கு எதிராக உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் SDPI செயல்வீரர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். இறுதியாக நகர துணைத் தலைவர் முகம்மது உமர் நன்றியுரையாற்றினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SDPI கட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |