தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், DCW ஆலையின் தீங்குகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் பேசப்போவதாகவும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) காயல்பட்டினம் நகர கிளையின் சார்பில் நடத்தப்பட்ட – 122ஆவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டத்தில், இராமநாதபுரம் சட்டன்றத் தொகுதி உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் பேசியுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சகல வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம், 25.07.2015 சனிக்கிழமையன்று 19.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், மர்ஹூம் வாவு எஸ்.புகாரீ நினைவரங்கில், அதன் மாவட்ட தலைவர் எஸ்.ஆஸாத் தலைமையில் நடைபெற்றது. மாநில வர்த்தக அணி செயலாளர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத், மமக மாநில அமைப்புச் செயலாளர் பி.ஜோஸஃப் நொலாஸ்கோ, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் கே.முஹ்ஸின் (முர்ஷித்), நகர செயலாளர் எம்.ஏ.ஆஸாத், மமக நகர செயலாளர் எஸ்.ஏ.கே.ஐதுரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் எம்.ஹஸன் வரவேற்புரையாற்றினார்.
தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஏ.தைமிய்யா, அதன் மாநில செயலாளர் கோவை செய்யித் ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான பேராசிரியர் எம்.ஜவாஹிருல்லாஹ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சகல வசதிகளுடன் கூடிய - தமுமுகவின் 122ஆவது ஆம்புலன்ஸ் வாகனத்தை, காயல்பட்டினம் நகர கிளை சார்பில் அர்ப்பணித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 1995இல் துவங்கப்படுவதற்கு முன்பே பல அமைப்புகளும் பல்வேறு சேவைத்திட்டங்களைச் செய்து வந்துதான் இருக்கின்றன. ஆனால், ‘இழந்த உரிமைகளை மீட்போம்! இருக்கும் உரிமைகளைக் காப்போம்!!’ எனும் முழக்கம் அக்காலகட்டத்தில் மிகவும் அவசியமாக இருந்தது. முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பல இக்கட்டான சூழல்கள் ஆளும் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட நேரத்தில் அதை எதிர்க்கக் கூட துணிவற்ற நிலையில் சமுதாயம் இருந்த நேரத்தில் பிறந்ததுதான் தமுமுக. அதன் துணிச்சலான எதிர்ப்புக் குரலைத் தொடர்ந்துதான் இன்று அது பலராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒருபுறம் இந்தியாவில் ஆளும் அரசாங்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சதிவலைகளைப் பிண்ணிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் முஸ்லிம் சமூகத்தின் மனிதநேயமிக்க செயல்கள் அனைவராலும் போற்றத்தக்க அளவிலேயே உள்ளது என்பதற்கு பல்வேறு வரலாற்று உண்மைகளைச் சொல்ல இயலும்.
இந்த நாட்டில் துணிந்து தவறு செய்தவர்களெல்லாம் ஆட்சியில் அமர்ந்திருக்க, அப்பாவி பொதுமக்களோ ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது எல்லாக்காலமும் தொடராது, தொடர விட மாட்டோம்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தமுமுக துவக்கப்பட்ட நாள் முதல் அதன் தொடர் குரலாக ஒலித்து வருகிறது. இன்று முழு மதுவிலக்கை பல கட்சிகளும் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன. ஒரு பெரிய கட்சியும் தான் ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
2016இல் நடைபெறும் தேர்தலையடுத்து அவர்கள் ஆட்சிக்கு வரலாம், வராமலும் போகலாம். இன்று ஆட்சியிலிருக்கும் அதிமுகவிடம் நாங்கள் இரண்டு விஷயங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். ஒன்று, தமிழகத்தில் நீங்கள் ஆட்சியிலிருக்கும்போதே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள். மீண்டும் நீங்கள் ஆட்சிக் கட்டிலில் அமரவும் அது முக்கிய காரணமாக இருக்கும்.
அதுபோல, எங்கள் தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தில் ஒரு சிறந்த விளைநிலமாகத் திகழ்ந்தது. இங்கு விளையாத பொருட்களே இல்லை என்னுமளவுக்கு எல்லாம் விளைந்து வளமாகக் காட்சியளித்தது. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இந்த DCW தொழிற்சாலை என்று உருவானதோ அன்றிலிருந்து இம்மாவட்டம் பயிர் விளைச்சலுக்குத் தகுதியற்றதாக மாறிவிட்டது.
இந்த ஆலையின் சுற்றுச்சூழல் மாசுகளுக்கு எதிராக ஏராளமான ஆதார ஆவணங்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டும், இன்றளவும் மக்கள் குரலுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்பதோடு மட்டுமின்றி, அதன் விரிவாக்கத்திற்கும் அனுமதியளித்துக்கொண்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த ஆலைக்கு எதிராக சட்டமன்றத்தில் விரிவாகப் பேசவுள்ளேன் என்பதையும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக அறியத் தருகிறேன்.
இவ்வாறு, பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் பேசினார். தமுமுக நகர தலைவர் எம்.கே.ஜாஹிர் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், தமுமுக - மமக தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளைச் சேர்ந்த அங்கத்தினரும், காயல்பட்டினம் நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, எம்.ஐ.ஏ.காதர், எஸ்.டீ.இப்றாஹீம், எஸ்.எம்.ஜிஃப்ரீ, ஏ.நஜீப், மவ்ஜூத், ஏ.ஆர்.ஷாஹுல் ஹமீத், தமுமுக தம்மாம் கிழக்கு மண்டல துணைத்தலைவர் தம்மாம் இஸ்மாஈல், ரியாத் மண்டல தலைவர் ஃபைஸல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முன்னதாக, 25.07.2015 சனிக்கிழமையன்று 17.00 மணியளவில், தமுமுக உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
படங்களுள் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 14:32 / 26.07.2015]
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |