காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன் என்ற மும்பை மொஹிதீன் தலைமையில் நாளை (ஜூலை 27; திங்கள்)
காலை 10:30 மணியளவில் - நகர்மன்ற வளாகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில், தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில்
தெரிவித்திருப்பதாவது:
எல்லாப்புகழும் இறைவனுக்கு; வல்லோன் அவனே துணை நமக்கு!
காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் மே 29, 2015 அன்று நடத்தப்பட்டது. அந்த கூட்டத்திற்கான அஜெண்டாவினை பெற்றுக்கொண்ட
உறுப்பினர்கள் பெரும்பாலானோர், அந்த கூட்டத்தினை புறக்கணித்தனர்.
இது போல பிப்ரவரி 27, 2015 அன்று அழைக்கப்பட்ட கூட்டத்திற்கான அஜெண்டாவினை பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள், அந்த கூட்டத்தினையும்
புறக்கணித்தனர்.
இடைப்பட்ட மாதங்களில் - முறையான பட்ஜெட், முழுமையான நிதி நிலை அறிக்கை போன்ற விபரங்களை அஜெண்டாவில் ஆணையர்
இணைக்காததால், உரிய காலத்தில் கூட்டம் நடத்த முடியவில்லை. இது குறித்த விரிவான பதிவினை நான் ஏற்கனவே முகநூலில் செய்துள்ளேன்.
இம்மாதம் 8ம் தேதி அன்று, நகர்மன்ற உறுப்பினர்கள் 15 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று தபால் மூலம் எனக்கு கிடைத்தது. அதில் 43 சாலைப்
பணிகள் குறித்து கோரிக்கை இடம்பெற்றிருந்தது.
7வது வார்டு, 13 வது வார்டு உறுப்பினர்கள் சம்பந்தமான கோரிக்கைகள் அதில் இல்லை. 15வது வார்டு உறுப்பினரின் இதர சாலை கோரிக்கைகள்
விடப்பட்டு, அந்த வார்டு சார்ந்த அக்பர்ஷா தெரு சாலை கோரிக்கை மட்டும் இடம்பெற்றிருந்தது.
பொதுவாக, உறுப்பினர்கள் கோரிக்கை - சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் கோரி மட்டுமே இருக்கும். அதனை தொடர்ந்து, அதிகாரிகள் மதிப்பீடு
தயாரித்து, அந்த தொகைக்கான ஒப்புதல் பெறுவார்கள். வழக்கத்திற்கு மாறாக - உறுப்பினர்கள் கோரிக்கையிலேயே மதிப்பீடு தொகையும்
இடம்பெற்றிருந்தது. மதிப்பீடு தயாரிக்க உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை.
மேலும் - உறுப்பினர்கள் கடிதத்தில், 10 நாட்கள் காலக்கெடு விதித்து, கூட்டத்தை நடத்தவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு நடத்த வில்லை
என்றால், துணைத் தலைவர் கொண்டு கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
உறுப்பினர்கள் கடிதம் இணைத்துள்ளேன்.
3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 43 பணிகள் குறித்த கூட்டத்தினை துணைத் தலைவர் கொண்டு நடத்த சட்டம் அனுமதிக்கவில்லை என்றாலும்,
உறுப்பினர்களின் கடிதம் கிடைக்கப்பெற்ற மறுநாளே, அந்த கடிதத்தினை ஆணையருக்கு அனுப்பி வைத்தேன்.
மேலும் எனது இணைப்பு கடிதத்தில் - ஆணையரிடம், ஜூலை 24 அன்று கூட்டம் நடத்த அஜெண்டா தயாரிக்கும்படியும்,
--- அந்த அஜெண்டாவில் உறுப்பினர்கள் மனுவில் இடம்பெறாத சி-கஸ்டம்ஸ் சாலை மதிப்பீட்டையும்,
--- 7வது வார்டு, 13வது வார்டு, 15வது வார்டு உறுப்பினர்களின் மன்றப் பொருட்களையும் இணைக்கும்படியும்,
--- இது தவிர நகருக்கு அவசியமான வேறு சில பணிகளையும் இணைக்கும்படியும் கூறி கடிதம் எழுதினேன்.
அந்த கடிதத்தின் நகல் - திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மற்றும் சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை
இயக்குனருக்கும் அனுப்பப்பட்டது.
ஆணையருக்கு 9-7-2015 அன்று கடிதம் அனுப்பியப் பின் அது குறித்த தகவலை, 18 நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் - பதிவு தபால் மூலம்
அனுப்பினேன்.
அந்த தபாலில் - ஆணையருக்கு நான் அனுப்பிய கடிதத்தின் நகலையும், நான் ஆணையரிடம் பல மாதங்களாக கோரி வரும்
தகவல்கள் எனக்கு தரப்படாமல் இருப்பது குறித்தும் தனியாக கடிதமும் அனுப்பியிருந்தேன்.
ஜூலை 17 அன்று 100 கூட்டப் பொருட்கள் அடங்கிய அஜெண்டா - எனது ஈமெய்லுக்கு ஆணையரால் அனுப்பப்பட்டது. உறுப்பினர்களின் 43
பொருட்களும் அதில் இருந்தது.
ஜூலை
17 அன்று ஆணையரால் அனுப்பப்பட்ட 100 பொருட்கள் அடங்கிய மாதிரி அஜெண்டா: பார்க்க இங்கு அழுத்தவும் >>
ஆனால் - எனது 9-7-2015 தேதிய கடிதத்தில் கோரப்பட்டிருந்த பல தகவல்கள் இல்லை.
7வது வார்டு, 13வது வார்டு, 15வது உறுப்பினர்கள் கோரிக்கை இடம்பெறவில்லை.
சி கஸ்டம்ஸ் சாலை மதிப்பீடு இல்லை (மதிப்பீடு தயார் செய்ய அனுமதி கோரி மட்டும் பொருள் இருந்தது).
மேலும் - கூட்ட அஜெண்டாவில் உள்ள பொருட்கள் குறித்த ஆவணங்கள் எனக்கு தரப்படவில்லை.
ஜூலை 18, 19 விடுமறை. ஜூலை 20 - அன்று ஆணையர் ஊரில் இல்லை. ஜூலை 21 அன்று ஆணையருக்கு - அஜெண்டா சம்பந்தமாக
விபரங்கள் கோரியும், ஆவணங்கள் கோரியும் மெயில் அனுப்பினேன்.
ஆவணங்கள் அலுவலகத்தில் இருப்பதாக அவரிடம் இருந்து பதில் வந்தது. ஜூலை 21 அன்று நகராட்சி சென்றேன்.
சாலைகள் குறித்து மதிப்பீடு கோப்புகள் ஒன்றும் நகராட்சியால் தயாரிக்கப்படவில்லை என்றும், உறுப்பினர்கள் தகவல் அடிப்படையில் அந்த
மதிப்பீடுகள் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட பணியாளர் தெரிவித்தார்.
அஜெண்டா தொடர்பான வேறு கோப்புகளையும் என்னிடம் தர அதிகாரிகள் மறுத்தார்கள்.
ஜூலை 22 அன்று மீண்டும் ஆணையரிடம் இருந்து அஜெண்டா ஈமெயில் மூலம் வந்தது. தற்போது - கூடுதலாக 5 பொருட்கள் இணைக்கப்பட்டு 105
பொருட்களாக அந்த அஜெண்டா இருந்தது.
ஜூலை 22 அன்று ஆணையரால் அனுப்பப்பட்ட 105 பொருட்கள் அடங்கிய மாதிரி அஜெண்டா: பார்க்க இங்கு அழுத்தவும் >>
அஜெண்டா முழுவதையும் பார்த்தப்பிறகு, ஜூலை 23 நகராட்சி சென்றேன். அங்கு - அஜெண்டா புத்தகத்தில் ஒட்டப்பட்டிருந்த, மாதிரி
அஜெண்டாவில் தேவையான விபரங்களை பதிவு செய்தேன்.
உதாரணமாக - தற்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ள 43 சாலைகள் கடைசியாக எப்போது போடப்பட்டது என்ற விபரம் கோரியிருந்தேன்.
ஏன் என்றால் - உறுப்பினர்களின் 43 சாலைப் பணிகளில், சமீபத்தில் போடப்பட்ட அப்பப்பள்ளி தெருவும் இடம்பெற்றிருந்தது.
11 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை போடப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள் அது பழுதானது. ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள், அந்த
சாலையை 5.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க ஆணையர் கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த சாலையை புனரப்பைப்பது -
ஒப்பந்ததாரரின் பணி என நான் கருத்து பதிவு செய்திருந்தேன். தற்போது அதே சாலையின் 100 மீட்டர் பகுதியை 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்
புனரமைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்னும் பல விபரங்களும் கேட்டிருந்தேன்.
அஜெண்டா புத்தகத்தில் நான் எழுதிய பதிவுகளை, கடிதத்திலும் எழுதி, நான் கோரிய தகவல்களை உடனடியாக தரும்படியும், (மறு தினம் ஜூலை
24 என்பதால்) அதிலிருந்து 7 நாட்கள் கழித்து கூட்டம் நடத்தலாம் என்றும் ஆணையருக்கு ஜூலை 23 அன்று பதிவு தபால் அனுப்பினேன். அதன்
நகலை - துணைத் தலைவருக்கும் தபால் மூலம் பின்னர் அனுப்பினேன்.
ஜூலை 24 அன்று உறுப்பினர்கள் சார்பாக தபால் ஒன்று எனக்கு வந்தது. அதில் ஜூலை 24 அன்று கூட்டம் கூட்டப்படவில்லை என்றும், அதனால்
43 பொருட்களை கொண்டு, ஜூலை 27 அன்று - துணைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
(உறுப்பினர்கள் கடிதம் எனக்கு கிடைத்த அன்றே), ஜூலை 24 மாலை ஆணையர் எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதில் நான் கேட்ட
ஆவணங்கள் தயாராக இருப்பதாகவும், அவற்றை நான் பார்வையிட்டு - ஜூலை மாத கூட்ட தேதியினை தரும்படியும் தெரிவித்திருந்தார்.
வேடிக்கை என்ன வென்றால், அந்த ஈமெயில் அனுப்பப்பட்ட ஒரு சில நிமிடங்கள் கழித்து, நகராட்சி ஊழியர் வாயிலாக - துணைத் தலைவர் மூலம்
ஜூலை 27 அன்று கூட்டம் நடத்த அஜெண்டா - உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. என்னிடமும் ஆணையர் கொடுக்க சொன்னதாக - அந்த
ஊழியர் என் வீட்டிற்கு வந்தார். நான் அதனை வாங்கவில்லை.
சில உறுப்பினர்களும், ஆணையரும், சில உயர் அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள் என்பது தெளிவு.
இந்த முறையில், துணைத் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்த நகர்மன்ற சட்டங்கள் அனுமதிக்கவில்லை; எனவே அவ்வாறு கூட்டத்தினை நடத்த
தடை விதிக்க கோரி - மாவட்ட ஆட்சியருக்கும், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கும், திருநெல்வேலியில் உள்ள நகராட்சி
நிர்வாக இயக்குனருக்கும் அனுப்பியுள்ளேன். அக்கடிதத்தின் நகலையும் மாண்புமிகு தமிழக முதல்வர் உட்பட அரசின் உயர் அதிகாரிகள்
அனைவருக்கும் அனுப்பியுள்ளேன்.
ஜூலை 27 அன்று துணைத் தலைவர் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கூட்டம் சட்டப்படி முறையானதா, யாரின் தூண்டுதலின் பெயரில்,
எந்த ஆதாயத்திற்காக நடத்தப்படுகிறது என்ற கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும்.
சாலைகளை வழங்குவது மட்டும் நகர்மன்றத்தின் கடமையில்லை; அவை தரமானதாக இருக்க வேண்டும் என்ற உணர்வோடு செயல்படுவதும்
ஒவ்வொரு மக்கள் பிரதிநிக்கும் உள்ள பொறுப்பு. அந்த அடிப்படையில் தான் - ஜூலை 27 கூட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் செயல்
புரிகிறார்களா?
(1) நெய்னார் தெரு சாலை, அப்பாப்பள்ளி தெரு சாலை உட்பட பல பணிகளை முறையாக செய்யாத ஒப்பந்ததாரரை நகராட்சியில் இருந்து தகுதி
நீக்கம் செய்ய நான் தீர்மானம் கொண்டுவந்தப்போது அதனை ஏன் ஆதரிக்கவில்லை?
(2) விதிமுறைகள்படி சாலைகளுக்கான உத்தரவாத காலம் 3 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட வேண்டும் என்று நான்
கொண்டு வந்த தீர்மானத்தை ஏன் ஆதரிக்கவில்லை?
(3) போன ஆண்டு வேலை ஆணை வழங்கப்பட்ட ஆரம்பபள்ளி தெரு சாலை ஏன் இது வரைக்கும் போடப்படவில்லை? யார் தடுக்கிறார்கள்?
இது போன்ற பல கேள்விகள் உள்ளன. காலம் பதில் சொல்லும்.
ஒரு தவறான செயலுக்கு - இன்றல்ல, என்றும் என் கைகள் துணைப் போகாது என்ற மன திருப்தி, என் ஆயுள் வரை துணை நிற்கும்.
இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் பதிவு செய்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|