காயல்பட்டினத்தில், ஜூலை 18 சனிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அன்று காலையில் காயல்பட்டினத்தின் அனைத்து பள்ளிவாசல்கள் - பெண்கள் தைக்காக்களில் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரைகள் நடைபெற்றன. நிறைவில், அனைவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களாக மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
அவர்கள் தம் நெருங்கிய - தூரத்து உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்கிருந்தோருக்கு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, சிறுவர் - சிறுமியருக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தனர்.
நேற்று மாலையில், தம் நண்பர்கள் புடைசூழ காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்தவாறு, ஊர்க்கதைகள் பேசி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி, இணைந்தமர்ந்து கொறித்தனர்.
கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி இருப்பதற்காக, ஆறுமுகநேரி காவல்துறையினர் ஸீ-கஸ்டம்ஸ் சாலை – சொளுக்கார் தெரு சந்திப்பு மற்றும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை – கொச்சியார் தெரு சந்திப்பில் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, சொளுக்கார் மற்றும் கொச்சியார் தெருக்களுக்குள் அவற்றை நிறுத்துமாறு பணித்தனர். இதனால், போக்குவரத்து சீராக இருந்தது.
இயலாநிலை குழந்தைகளுக்காக இயங்கி வரும் காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி, தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் ஆகியவற்றுக்காக கடற்கரை நுழைவாயிலில் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் சேகரிக்கப்பட்டன. பெருநாளன்று மாலையில் கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
பெருநாள் மாலையில் கடற்கரையில், மட்டன் கபாப், பஞ்சு மிட்டாய், மசாலா போலி, வடை - கறி கஞ்சி, மஞ்சள் மிட்டாய் (ஜாங்கிரி) உள்ளிட்ட கடைகளும், பெண்கள் அழகு பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்பை விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய விற்பனைக் கடைகளும் நிறைய அமைக்கப்பட்டிருந்தன.
கூட்டம் ஓரளவுக்குக் கலைந்து சென்ற பிறகு, அவரவர் உட்கொண்ட தின்பண்டக் கழிவுகளை அங்கங்கேயே விட்டுச் சென்றதால், கடற்கரை கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதி போல காட்சியளித்தது.
கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டதையடுத்து, கடற்கரை தொழுமிடத்தில் மஃரிப் ஜமாஅத் சுமார் 8 முறை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படங்களுள் உதவி:
நோனா உவைஸ்
யூஸுஃப் (DHL)
ஹஸன் சுலைமான் (SIM காலனி)
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நோன்புப் பெருநாளன்று மாலை கடற்கரை காட்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |