தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் - நேற்றோடு நிறைவுற்றது. செப்டம்பர் 28 அன்று நடந்த
சுற்றுச்சூழல் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின்
ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமிழகத்தின் பல இடங்களில்
உள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி பேசினார்.
அவரின் உரையில் - கொடைக்கானல் யூனிலீவர் - மெர்குரி பிரச்சனை, உடன்குடி பி.எஸ்.வி. மீன்
அரைவை தொழிற்சாலை பிரச்சனை, ஒ.என்.ஜி.சி. பாறை வாயு பிரச்சனை ஆகியவை உட்பட பல்வேறு பிரச்சனைகள்
இடம்பெற்றிருந்தன.
காயல்பட்டினம் DCW தொழிற்சாலை குறித்து பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கீழ்க்காணுமாறு பேசினார்:
மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்த அரசு முனைப்பான
நடவடிக்கைகளை எடுத்து வருவதை கொள்கை விளக்கக் குறிப்பிலே படிக்க முடிந்தது. தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரத்திலே,
DHRANGADHRA இரசாயன ஆலை - DCW என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் - அந்த ஆலை தொடர்ச்சியாக அந்த
பகுதியினுடைய சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய வகையிலே, மாசு கழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.
அந்த ஆலை - நாங்கள் மெர்குரி பாதரசத்தை பயன்படுத்தவில்லை, அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதாக சொன்னாலும்
கூட, இப்போது கூட அந்த ஆலையினுடைய கழிவு நீரிலிருந்து மெர்குரி வெளியேறி, அங்கே கடலில் பாதரசம் கலந்து, அதன்
காரணமாக மீன்களினுடைய வயிற்றிலும் கூட பாதரசம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அந்த பகுதி மக்கள் மத்தியிலே இந்த ஆலையினுடைய கழிவு நீரின் காரணமாக புற்று நோய், தோல் அரிப்பு போன்ற
பல்வேறு நோய்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடிய ஒரு சூழலையையும் பார்க்கின்றோம். இது மட்டுமல்லாமல், இந்த
DHRANGADHRA அமைந்திருக்கூடிய சாகுபுரத்தின் அருகிலே, காயல்பட்டினம் என்ற ஊர் இருக்கின்றது. பக்கத்திலே -
திருச்செந்தூர் இருக்கின்றது. திருசெந்தூரிலே, கடலிலே குளிக்கக்கூடிய பக்தர்களுக்குக்கூட இதனுடைய பாதிப்பு இருக்கக்கூடிய
நிலை இருக்கின்றது.
எனவே - இந்த ஆலையினை முழுமையாக ஆய்வு செய்து, இந்த DHRANGADHRA CHEMICAL WORKSனுடைய மாசிலிருந்து
அந்தப் பகுதி மக்களைக் காப்பாற்றுவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், சட்டசபையில் பேசினார்.
பேராசிரியர் பேச்சுக்கு பதில் கூறிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், இவ்விஷயங்கள் குறித்து அரசு
கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.
தகவலில் உதவி:
என்.ஏ.தைமியா, மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
|