காயல்பட்டினம் நகர்மன்றத்தின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட்டத்தில் - நகரில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளுக்கு, குறைந்தது மூன்றாண்டு காலம், ஒப்பந்ததாரர் உத்தரவாதம் (DEFECTS LIABILITY PERIOD) தரவேண்டும் என நகர்மன்றத் தலைவர் தீர்மானம் கொண்டு வந்தார்.
நீண்ட விவாதத்திற்கு பிறகு - இனி நிறைவேற்றப்படும் பணிகளுக்கு, இரண்டு ஆண்டு காலத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது (தொடர்பான தீர்மான எண்கள்: 901, 902, 906).
நகரின் பிரதான சாலையான ஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு, 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பேவர் பிளாக் முறையில் நிறைவேற்றப்படவுள்ள இப்பணிக்கான தொழில்நுட்ப ஆவணம் (TECHNICAL BID) - ஒப்பந்ததாரரின் பொறுப்பு காலம் (DEFECTS LIABILITY PERIOD) , ஓர் ஆண்டு என - கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட நகர்மன்ற தீர்மானத்திற்கு மாற்றமாக தெரிவிக்கிறது.
மேலும் - கடந்த ஆண்டு ஒப்புதல் கொடுக்கப்பட்ட 22 பேவர் பிளாக் சாலைகளில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட M40 ரக பேவர் பிளாக்
கற்களே, அதிக போக்குவரத்து மற்றும் பிரதான சாலையான ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலும் பயன்படுத்தப்படும் என டெண்டர் ஆவணங்கள்
தெரிவிக்கின்றன.
சமீப காலமாக காயல்பட்டினம் நகராட்சியில் விடப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் மதிப்பீடு சராசரியை விட 40 சதவீதம் அதிகமாக உள்ளது என காயல்பட்டணம்.காம் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். |