காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில், நவம்பர் 14 குழந்தைகள் நாள் விழா, குறும்படம் திரையிடல், மாஜிக் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் நவம்பர் 14இ 2015 அன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. துளிரின் சிறப்பு குழந்தைகளும், அவர் தம் பெற்றோர் மற்றும் குடும்ப குழந்தைகளும், சிறப்பாசிரியர்களும், பணியாளர்களும் இவ்விழாவில் மகிழ்வுடன் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் தின விழாவில் பிரபல குறும்பட இயக்குனரும், மாஜிக் கலைஞருமான ஆர்த்தி மங்களா சிறப்பு அழைப்பாளராக சென்னையிலிருந்து வந்து கலந்துகொண்டார். விழா நிகழ்விற்கு துளிர் நிறுவனர் வக்கீல்.அஹ்மத் தலைமையேற்றார். செயலர் சேக்னா லெப்பை முன்னிலை வகித்தார். நிர்வாக ஓருங்கிணைப்பாளர். சித்தி ரம்ஜான் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் ஆர்த்தி மங்களா குழந்தைகளை மகிழ்விக்கும் நிகழ்ச்சிகளை வழங்கி, குழந்தைப் பாடல்களை பாடியதோடு, மாஜிக் நிகழ்ச்சிகளையும் செய்து காட்டினார். இடையிடையே 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குறும்படங்களையும் திரையிட்டு அதன் மூலம் பல்வேறு கருத்துக்களை குழந்தைகளுக்குப் புரிய வைத்தார்.
இறுதியில் குழந்தைகளிடம் நிகழ்ச்சி பற்றி கருத்துக் கேட்கப்பட்ட போது இந்நிகழ்ச்சி தங்களுக்கு பல்வேறு விஷயங்களை புரிந்து கொள்ள உதவியது என்றும் மனமகிழ்ச்சி கொள்ளச்செய்து தங்களை குழந்தைகள் தினத்தில் குதூகலப்படுத்தியது என்றும் தெரிவித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் ஆர்த்தி மங்களாவிற்கும் அவரது தந்தை சுப்ரமணியத்திற்கும் துளிரின் சார்பில் பொன்னாடையும் நினைவு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர்கள் சிறப்பு குழந்தைகளை மகிழ்விக்க கிடைத்த இந்த வாய்ப்பிற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர். குழந்தைகள் உட்பட கலந்துகொண்ட அனைவருக்கும் காயல்பட்டினம் அரசர் பேக்கரி சார்பில் இனிப்பு பண்டம் வழங்கி அந்நிறுவனத்தின் சார்பில் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |