பயோ காஸ் திட்டப்பணிகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளையில் வழங்கப்பட்ட புகார் மீது, தீர்ப்பு வெளியானப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதிக்கு மாற்றமாக பயோ காஸ் திட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன என ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், ஆகஸ்ட் 31 அன்று நேரடியாக மனு கொடுக்கப்பட்டது.
மனு கொடுத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் - இது குறித்து எந்த நடவடிக்கையும் மாசு கட்டுப் பாட்டு வாரியம் மேற்கொள்ளாததால்,
அக்டோபர் 5 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுக்கு தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் வழங்கியுள்ளது.
அதில் - ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது இது குறித்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உள்ளதால், அவ்வழக்கில் தீர்ப்பு வெளியானப்பின் - இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பயோ காஸ் திட்ட வழக்கில் வாதங்கள் செப்டம்பர் 9 அன்று நிறைவுற்று, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |