காயல்பட்டினத்தில் இறக்கும் முஸ்லிம் மக்களை, அவரவர் ஜமாஅத் பள்ளிவாசல் மையவாடிகளில் அடக்குவர். நகரின் பெரும்பாலான பகுதிகளில் தோண்டப்படாமலேயே தொடர்ந்து புதிய சாலைகளை அமைத்ததன் விளைவாக, நகரின் பல வீடுகளும், சில பள்ளிவாசல்களின் மையவாடிகளும் தரைமட்டத்தை விட தாழ்வான நிலைக்குச் சென்றுவிட்டன.
இதனால், மழைக்காலங்களில் இறப்பு ஏற்படும்போது, அந்த பள்ளிவாசல்களின் மையவாடியில் தரைக்கும் மேலாக தண்ணீர் தேங்குவதால், மண்ணறை தோண்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நேரங்களில், இறந்த சிலரின் உடல்கள் தங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த மையவாடியில் அடக்கம் செய்ய இயலாமல், மேட்டுப் பகுதியிலுள்ள வேறு பள்ளிவாசல் மையவாடிகளில் அடக்கப்பட்டுள்ளன.
“இங்குதான் அடக்க வேண்டும்” என்ற நிலையிலிருப்போர், தரைக்கு மேல் நிறை மணலைப் பரத்தி, அதில் மண்ணறையைத் தோண்டி அடக்கம் செய்த நிகழ்வுகளும், உண்டு. இதுகுறித்து கவலை எடுத்துக்கொண்ட - நகரின் சமூக ஆர்வலரும், காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவரும், நகரில் இறப்போரை அடக்கம் செய்வதில் நிறைவான சேவையாற்றி வருபவருமான கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, தாழ்வான மையவாடிகளில் தரைமட்டத்திற்கு மேல் உயர்த்தி, அவசரகால மையவாடிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக முன்வைத்த செய்தியை, காயல்பட்டணம்.காம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
எனவே, மழைக்காலங்களில் இறப்போரை அடக்கம் செய்வதற்காக என - தரைமட்டத்திலிருந்து உயர்வாக சிறப்பு மையவாடியைக் கட்டமைக்க நகரின் சில பள்ளிவாசல்களில் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
இவ்வகைக்காக, நன்கொடை கோரி காயல்பட்டினம் ஆறாம்பள்ளி நிர்வாகத்தால் பள்ளி வளாகத்தில் விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ளது.
குருவித்துறைப் பள்ளியில், மழைக்கால சிறப்பு மையவாடி அமைப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டு பொதுமக்களுக்கு வேண்டுகோளும் வைக்கப்பட்டிருந்தது. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக பெறப்பட்ட நன்கொடைத் தொகையை விட செலவு அதிகரிப்பதால், பொதுமக்களிடமிருந்து நிதி எதிர்பார்க்கப்படுவதாக, பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இவ்வகைக்காக நன்கொடையளிக்க விரும்புவோர், +91 94434 82800 என்ற எண்ணில் தன்னையோ - அல்லது பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரை நேரிலோ தொடர்புகொள்ளுமாறு, பள்ளியின் இணைச் செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆறாம்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |