ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் 7ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், திரளான காயல்பட்டினம் மக்களுடன் - முனைவர் செ.மு.முஹம்மதலி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இதுகுறித்து, அம்மன்றத்தின் செய்தித்துறை பொறுப்பாளர் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் ஏழாவது பொதுக்குழு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நவம்பர் 06 வெள்ளிக்கிழமையன்று, பழைய ஏர்போர்ட் ரோடு,[அல் நூர் மருத்துவமனை அருகில்], K.F.C. பூங்காவில் சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
நிகழ்வு நாளன்று காலை 10.00 மணி முதல் வரத்துவங்கிய மன்ற உறுப்பினர்கள் வருகைபதிவேட்டில் தங்கள் வருகையை பதிவு செய்து மெகா பரிசின் கூப்பனை பெற்று அமர்ந்தார்கள்.
ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஏழாவது பொதுக்குழு கூட்டம் அபூதபீ காயல் நல மன்றத்தின் கவுரவ தலைவர் அல்ஹாஜ் I. இம்தியாஸ் அஹ்மது அவர்களின் தலைமையில், மன்றத்தின்தலைவர் ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை, மற்றும் துபை காயல் மன்றத்தலைவர் J.S.A. புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி, (இயக்குனர் :- S-IAS அகாடமி; நிறுவனர்:- இஸ்லாமிய தொண்டு இயக்கம்; ஆசிரியர்:- இனிய திசைகள் மாதாந்தரி) கலந்துகொண்டார். மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ்நஹ்வி. S.A. இஸ்ஹாக்லெப்பை ஆலிம் மஹ்ழரி நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். ஹாஃபிழ் K.M.இப்திஹாருத்தீன் கிராஅத் ஓத நிகழ்வுகள் இனிதே துவங்கின.
மன்றத்தின் அழைப்பினை ஏற்று குடும்ப சகிதம் வருகை தந்த அனைத்து நிர்வாக குழு,பொதுக்குழு உறுப்பினர்கள், துபை காயல் நல மன்றத்தின் செயற்குழுஉறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அனைவர்களையும் மன்றத்தின் துணைத்தலைவர் ஜனாப். S.A.C. ஹமீது அவர்கள் வரவேற்றுப் பேசியதுடன் சிறப்பு விருந்தினரை பற்றி அறிமுகஉரை தந்து அவர்கள் நடத்தும் IAS, IPS அகாடமியின் சிறப்பு குறிக்கோள்கள் மற்றும் வேண்டுகோள்களை முன்வைத்தும் சச்சார் கமிசனின் அறிக்கை மற்றும் தற்போதைய நமது சமுதாய மக்களின் அரசின் ஆளுமை நிர்வாகத்தில் பின்தங்கி இருக்கும் கவலைக்குரிய நிலைமை போன்றவற்றை மேற்கோள் காட்டி பேசினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய டாக்டர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி, காயல் மாநகரம் தனக்கு புதியது இல்லை என்றும் காயல் மக்கள் வைரங்களே என்று வைர வியாபாரத்தை நினைவு கூர்ந்தும், ஒரு ஜும்மாவிற்கு பின் தான் நீண்ட சிறப்புரை காயலில் நிகழ்த்தியதும், காயிதே மில்லத் கல்லூரிக்கு முதன் முதலில் காயலர்களே நன்கொடை கொடுத்து ஊக்கபடுத்தியத்தையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் தற்போது வேலைவாய்ப்புகள் வளைகுடா நாடுகளில் மிக குறைந்து, இந்திய அரசு வேலைகள் அதிகமாக இருந்தும் நமது சமுதாய மாணவர்கள் அதை சரியாக பயன்படுத்த தவறுவதை மிக கவலையுடன் சுட்டிக்காட்டி, இந்தியாவின் ஆட்சி அதிகாரம், அரசியல்வாதிகளைவிட அரசை இயக்கும் IAS, IPS, IFS, போன்ற ஆளுமை சார்ந்த பணிகளில் தான் அதிகம் என்றும் அதில் நமது சமுதாயம் மிக விரைவாக இடம்பிடித்து சமுதாயத்தை பாதுகாப்பது காலத்தின் கட்டாயம் என்று விரிவாக எடுத்துரைத்தார்.
சாதரணமாக மற்ற சமுதாய மக்கள் நம்மை விட குறைவாக இருந்தும் அவர்கள் அரசை இயக்கும் ஆளுமை பதவியில் அதிகம் இருந்து பல சாதனைகளை செய்யும் போது நம்மால் ஏன் முடியாது என்று வினவினார்!
அவர்கள் நடத்தும் S-IAS அகாடமி இந்தியாவின் பல அகாடமிகளுக்கும் சென்று மிக கவனமாக குறிப்புகள் எடுத்து தற்போதுள்ள கணினி உலகத்திர்க்கேற்றாற்போல் 35 வருடம் இந்த துறையில் நல்ல அனுபவமுள்ள நடப்பு, மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள், நீதிபதிகளை கொண்டு சென்னையில் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பள்ளி நிர்வாகத்தின் கட்டிடத்தில் மிக சிறப்பாக இயங்கி கொண்டிருப்பதை எடுத்து கூறினார்.
முழுவிருப்பம் மற்றும் கடின உழைப்பு கொண்ட தகுதியான அனைத்து சமுதாய மாணவர்கள், குறிப்பாக 70%இஸ்லாமிய மாணவர்களுடன் தமிழகத்தின் பல இடங்களில் நுழைவு தேர்வுகள் மூலம் மொத்தம் 85 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் நலிந்த, வறுமை மிக்க, ஜக்காத் நிதி பெரும் தகுதி வாய்ந்தவர்கள் என்றும், ஒரு மாணவருக்கு 10 மாதம் கொண்ட இந்த பயிற்ச்சிக்கு ரூ1,10,000 செலவாகுவதாகவும், கொடை உள்ளம் நிறைந்த காயலர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து இம்மாணவர்களை தத்தெடுத்து நமது சமுதாய முன்னேற்றத்திற்கு உதவவேண்டும் என்று வேண்டினார்.
அபூதபீ காயல் நல மன்றம் பல சமூக பணிகளில் முன்னோக்கி செல்வதை சுற்றிக்காட்டி உறுப்பினர்கள் மென்மேலும் சிறப்புற பணியாற்ற வேண்டும் என்று பண்போடு கேட்டுக்கொண்டு, வல்ல ரஹ்மான் நம் யாவருக்கும் ஈருலக பாக்கியத்தை தந்தருள்வானாக என்று துஆ செய்து அமர்ந்தார்.
நினைவுப் பரிசு:
சிறப்பு விருந்தினர் டாக்டர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி, அவர்களுக்கு, எம் மன்றத்தின் கவுரவ தலைவர் I. இம்தியாஸ் அஹ்மது, மன்றத்தின் தலைவர் ஜனாப்V.S.T. ஷேக்னா லெப்பை, ஆகியோர் அபூதபீ மன்றத்தின் சார்பாக சிறப்பு பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினர்.
மன்ற ஆண்டறிக்கை:
மன்றம் இதுவரை ஆற்றிய உதவிகளையும், மன்றத்தின் செயல்பாடுகளையும் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மன்ற நடவடிக்கைகள் குறித்து மன்றத்துணைச்செயலாளர் ஜனாப் K. ஹுபைப் அவர்கள் விரிவாக விளக்கினார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
மன்றத்தின் தலைவர்:
ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை உறுப்பினர்களை வரவேற்று துவக்கிய தலைமையுரையில் உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையுடன் கூடிய செயல்பாடுகளை வலியுறுத்தியும்,மற்ற காயல் நல மன்றங்களுடன் இணைந்து நடத்திய ரமலான் உணவு பொருள்கள் விநியோகம், கல்வி மற்றும் மருத்துவ உதவிகள்போன்றவைகளை நினைவு படுத்தி, கடந்த ஆண்டை போன்று இவ்வாண்டும் செயற்குழு உறுப்பினர்கள் மிகச்சிறப்பாக செயலாற்றிடவும், கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள சந்தா தொகைகளை உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற உதவிட வேண்டும் என்று கேட்டு கொண்டதோடு மன்றத்தால் நடத்தப்படும் கூட்டங்களில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
மேலும் சிறப்பு விருந்தினரின் வேண்டுகோளை ஏற்று அதை வரும் செயற்குழுவில் கலந்து ஆலோசித்து நமது மன்றம் மூலம் இயன்ற உதவி மற்றும் ஆதரவுகள் தருவதாக உறுதியளித்து சிறப்பு விருந்தினரின் வழிகாட்டலின்படி முழு விருப்பத்துடன் கூடிய தகுதி வாய்ந்த மாணவரை நமதூரிலிருந்து ஒவ்வொரு வருடமும் IASஅகடமி தேர்ந்தெடுத்து காயலின் நீண்ட நாள் தேவையான ஒரு IAS. அதிகாரியை உருவாக்குவதன் மூலம் நிறைவேற்றி தரும்படி கோரிக்கை வைத்தார்.
மக்கள் தொடர்பு செயலர் A.R. ரிபாய்:
அனைத்து உறுப்பினர்களும் தங்களின் மேலான கருத்துகள்,ஆலோசனைகள் தந்து மன்ற வளர்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைக்குமாறு கேட்டு கொண்டார். மன்ற உறுப்பினர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், அவசர உதவி மற்றும் நலமன்ற செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள மன்ற உறுப்பினர்களை செயற்குழு மற்றும் பொதுகுழு என இரண்டு குழுக்காளாக Whatsapp’யில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதை சுற்றிக்காட்டி, அதில் மன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் ஆர்வமாக ஈடுபட கேட்டுகொண்டார்.
செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் (பாதுல் அஷ்ஹாப்):
ஏதும் குறை இருப்பின் தாமாக வந்து நிர்வாகிகளை சந்தித்து தெளிவு பெற்று மன்ற வளர்ச்சிக்கு ஒத்துழைக்குமாறு கேட்டு கொண்டார். மன்றத்தின் வளர்ச்சி தாங்கள் முன் வைக்கும் குறைகள் மற்றும் ஆலோசனைகளில்தான் இருப்பதாக கூறி அனைவர்களையும் கருத்துபரிமாற்றத்திற்க்கு அழைப்புவிடுத்தார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
பணிநிமித்தம் மற்றும் வேலைவாய்ப்புக்காக அபூதபீ வந்துள்ள புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
வினாடி-வினா போட்டி:
அஸர் தொழுகைக்குப் பின் அழகிய வினாடி-வினா போட்டி நடைபெற்றது. எட்டு நபர்கள் கொண்ட எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு மருத்துவம் மற்றும் பொதுஅறிவு ஆகிய இரண்டு தலைப்புகளில் தலைப்பில் டாக்டர் H.M. ஹமீத் யாசிர் மருத்துவம், மற்றும் பொதுஅறிவுக்கான வினாடி-வினாவை காயல் வினாடி வினா வல்லுனர் L.T.இப்ராஹிம் ஆகியோர்களின் தொகுப்பில் 6 சுற்றுக்களாக அமைத்து நடத்தப்பட்டது. போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இப்போட்டியை A.R. ரிபாய் மற்றும்V.S.T.ஷேக்னா லெப்பை ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
போட்டியின் நிறைவில் அபூதபீ காயல் நல மன்றத்தின் கவுரவ தலைவர் அல்ஹாஜ் I. இம்தியாஸ் காக்கா தலைமையிலான அணி முதற்பரிசையும் துபை காயல் நலமன்ற செயற்குழு உறுப்பினர் ஜனாப் நூஹு சாஹிப் காக்கா தலைமையிலான அணி இரண்டாவது பரிசையும் பெற்றன.
சிறுவர் சிறுமிகளின் விளையாட்டு போட்டிகள் V.S.T ஷேக்னா லெப்பை அவர்களுடைய ஒருங்கிணைப்பில் மிக சிறப்பாக நடைபெற்றது.
நன்றி உரை:
இறுதியாக மன்ற துணைத்தலைவர் ஜனாப். N.M. சுப்ஹான் பீர் முகம்மது இக்கூட்டம் சிறப்புற நடந்தேற அருள் செய்த அல்லாஹ்வுக்கும், கலந்து சிறப்பித்த மன்றத்தின் அனைத்துறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள்,சிறப்பழைப்பாளர்கள், பரிசுப்பொருள்கள்களுக்கு அனுசரணை செய்தவர்கள், மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்து தந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.
விழாவின் இறுதியாய் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் F.சாகுல் ஹமீது அவர்கள் துஆ இறைஞ்ச - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மதிய சாப்பாடு, மாலை தேனீர்,சமோஸா சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
https://picasaweb.google.com/106080912367452201392/KwaadGBM06112015#slideshow/6214085392338240642 இந்த லிங்கை சொடுக்கினால் அணைத்து புகைப்படங்களையும் காணலாம்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
(துணைத்தலைவர் - அபூதபீ கா.ந.மன்றம்)
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (6ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |