பள்ளிக்கூடம் செல்லும் மாணவியருக்கு - அவர்களின் வாராந்திர விடுமுறை நாட்களில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக, காயல்பட்டினம் தைக்கா தெருவில், மஹான் ஸாஹிப் அப்பா தைக்கா வளாகத்தில் 1988ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிறுவனம் மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம்.
திறப்பு விழா:
இதன் புதிய கட்டிட திறப்பு விழா 18.11.2015 புதன்கிழமையன்று நடைபெற்றது.
டீ.எஸ்.ஏ.முத்துவாப்பா ஹாஜி முன்னிலையில், குத்பிய்யா மன்ஸில் நிறுவனர் எம்.இசட்.ஜலீல் முஹ்யித்தீன் காதிரீ - மஜ்லிஸுன் நிஸ்வான் புதிய கட்டிடத்தைத் திறந்துவைத்து, துஆ பிரார்த்தனை செய்தார். மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ வாழ்த்துரையாற்றினார்.
பெண்கள் நிகழ்ச்சி:
பெண்கள் நிகழ்ச்சி, அன்று 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்ற நிர்வாகி கே.ரஹ்மத் நிஸா வரவேற்புரையாற்றினார். இதில் ஸலவாத் மஜ்லிஸ், பால் காய்ச்சும் வைபவம், மார்க்க அறிஞர் உரை, நன்றியுரை, துஆ ஆகியன இடம்பெற்றன. மத்ரஸா மாணவியர், அவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பெண்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
ஆண்கள் நிகழ்ச்சி:
ஆண்கள் நிகழ்ச்சி, அன்று 18.45 மணிக்குத் துவங்கி, 20.30 மணி வரை நடைபெற்றது. மஹ்ழரா அரபிக்கல்லூரியின் குர்ஆன் மக்தப் ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். எம்.என்.எல்.கலீல் ரஹ்மான், எம்.ஒய்.மஹ்மூத், கலீஃபா கே.ஏ.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் - இறைத்துதிப் பாடல், இறைத்தூதர் புகழ்பாடல்கள் பாடப்பட்டன.
ஜெ.ஏ.முஹம்மத் லரீஃப் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், மத்ரஸா உருவான வரலாறு, புதிய கட்டிடத்தின் வரலாறு ஆகியவற்றை நினைவுகூர்ந்து பேசினார்.
புதிய கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு முன்னின்று ஒத்துழைப்பளித்தமைக்காக, காயல்பட்டினம் ‘மாஷாஅல்லாஹ்’ தாவூதுக்கு, ஹாஃபிழ் பாளையம் முஹம்மத் லெப்பை சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
இஷா தொழுகைக்கான வேளை வந்ததும், அங்கேயே அதான் ஒலிக்கப்பட்டு, கூட்டாக தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையைத் தொடர்ந்து, ராத்திபத்துல் ஜலாலிய்யா மஜ்லிஸ் நடத்தப்பட்டது. துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இவ்விழாவில், புதுப்பள்ளி ஜமாஅத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை, மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்ற நிர்வாகிகள், புதுப்பள்ளி மற்றும் மஹான் ஸாஹிப் அப்பா தைக்கா ஆகியவற்றின் நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர்.
மத்ரஸா அறிமுகவுரை விபரம்:
விழாவின்போது, ஜெ.ஏ.முஹம்மத் லரீஃப் ஆற்றிய மத்ரஸா அறிமுகவுரை வருமாறு:-
இறைவா உன் புகழ்போற்றி...
நிறைவான மார்க்கம் தந்த நின்தூதர் புகழ்பாடி, அவர்தம் வழியினை பேணிக்காத்து நமக்களித்த ஸஹாபாக்கள், தாபீஈன்கள், வலிமார்கள் - இறைநேசச் செல்வர்களை, நன்மார்க்க சீலர்களை நினைவுகூர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் எனதன்பின் ஸலாமைத் தெரிவித்து அறிமுக உரைக்கு வருகிறேன், அஸ்ஸலாமு அலைக்கும்.
கண்ணுக்கு இமைபோன்ற பெண்ணே
நகக்கண் பார்த்து நீ நடக்க வேண்டும்
மண்ணில் பெண்ணோடு பிறந்த இந்த ஞானம்
அதைப் பேணாத பெண்ணுக்கு ஈனம்
என்ற நாகைக் கவிஞர் சலீமின் வரிகளை நினைவு கூர்ந்து பார்க்கிறேன்
ஒர் ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பாள் என்பது பழமொழி. ஆனால் இந்தப் பகுதியின் வெற்றிக்கு பின்னால் பல பெண் கண்மணிகள் இருக்கிறார்கள். தாயின் பாதத்தில் சுவர்க்கம் இருக்கிறது என தாஹா நபியவர்கள் பகன்றார்கள் ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு சுவர்க்கம் செல்லும் பாதையினைக் காட்டிக் கொடுக்கவேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நாயகம் அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.
பொறுப்புடன் கடமைகள் பெரிதம்மா
இந்த பொன்னான சமூகத்தில் உனக்கம்மா
விருப்பிடன் அவைகளை நிறைவேற்றி
நாளையச் சரித்திரச் சோலையில் கமழம்மா
என்ற எஸ்.எம்.பி.மஹ்மூது ஹூசைனின் கவிவரிகளை நினைவு கூறுகிறேன்.
“கல்விச்சாலை அமைத்தவனும், ஊர் வாழ கிணறு வெட்டியனும் கால்மெல்லாம் வாழ்வான்” எனும் முதுமொழிக்கேற்ப காயல்பட்டினத்தின் மேற்றிசையில் ஒர் உதயம், இந்த பகுதியின் காலச்சுவட்டில் புதிய சரித்திரம் பல சரித்திர விற்பனைர்களை தாங்கி நிற்கும் இப்பகுதியின் புதிய வரலாறு இன்று ஹிஜ்ரீ 1437 ஸஃபர் பிறை 05, மாதிஹூர் ரஸூல் ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் 322ஆவது நினைவு நாள். காமில் ஒலி அஷ்ஷெய்க் அப்துல் காதிர் தைக்கா ஸாஹிப் (ரழி) அவர்களின் 246ஆவது பிறந்த நாள். தைக்கா ஸாகிபு அப்பா அவர்களின் அருமந்தப் புதல்வர் முஹம்மது ஸாலிஹ் அப்பா அவர்களின் 114ஆவது நினைவு நாள்.
மத்ரஸா உருவாக்கம்:
இந்த நல்ல நாளில் இத்திரை போற்றும் முத்திரை காவியமாம் வித்ரிய்யா தந்த வித்தகு வேந்தர் மாதிஹூர் ரஸூல் ஸதக்கத்துல்லாஹ் அப்பா, அரபு இலக்கியங்கள் போற்றிப் புகழும் அரபுக் காவியங்கள் தந்த மாஹான்கள் உமர் வலிய்யுல்லாஹ்; அவர்களது மகனார் ஷெய்க் அப்துல் காதிர் தைக்கா ஸாஹிப் வலிய்யுல்லாஹ் ஆகியோரின் மரபு வழித்தோன்றல்களால் உருவாக்கப்பட்ட மணிமண்டபம்தான் நீங்கள் வீற்றிருக்கும் இந்த மஜ்லீஸுன் நிஸ்வான் எனும் மகளிர் மன்ற கட்டிடம்.
காலச் சக்கரங்கள் மிக வேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது. நம் கண் முன் வாழ்ந்தவர்கள் இன்றில்லை. அவர்கள் காட்டிச்சென்ற நல்லொழுக்கப் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்று நாம், நாளை நம் சந்தியினர் எடுத்துச் செல்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. கதிரவன் காலையில் தோன்றும் காலமெல்லாம் வான்பிறை மேற்றிசையில் வந்து போகும் நாள் வரையெல்லாம், இந்த உலகம் உள்ளளவும் இந்த மத்ரஸா நீடித்து நிலைபெற இறைவா நீயே அருள் செய்வாய்.
1985ஆம் ஆண்டு நூற்றுண்டு பாரம்பரியமிக்க மழஹ்ருல் ஆப்தீன் எனும் மார்க்கக் கல்விக் கூடம், காயல்பட்டினத்தின் மேல் பகுதியில் மீண்டும் மறுமலர்ச்சி கண்டு மார்க்கப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்தது. அப்போதிருந்த இளைஞர்கள் அந்தப் பணிகளை சிரமேற்கொண்டு திறம்பட செயல்படுத்தினார்கள். சின்னஞ்சிறு மக்களிடையே அடிப்படை மார்க்கக் கல்வியை ஊட்டி வளர்த்தார்கள். அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கும் மார்க்கக் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று நல்ல நோக்கத்தில் 1988ஆம் ஆண்டு - மறைந்த மரியாதைக்குரிய பாளையம் இப்ராஹீம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த மஜ்லிஸுன் நிஸ்வான் மார்க்கக் கல்விக் கூடம்; அதாவது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க நிறுவனத்தின் பெண்கள் பிரிவு.
இடமளித்து உதவியோர்:
இதற்குண்டான இடத்தை சாகிப் அப்பா தைக்கா பெண்கள் பகுதியில் இடம் தந்து சேவை தொடர அன்று உதவியர்கள் மர்ஹூம் பீ.ஏ.கபீர் காக்கா அவர்கள் துணைவியாரும் - பாளையம் இப்ராகிம் காக்கா அவர்களின் சகோதரியுமான மர்ஹூமா பாளையம் மஹ்மூதா லாத்தா அவர்கள். அவ்விருவரும் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், இந்த அமைப்பினரின் நன்றிக்குரியவர்கள்; நினைவுகூரத்தக்கவர்கள்.
சற்றேறக்குறைய 25ஆண்டுகளுக்கும் மேலாக சன்மார்க்கப் பணியையும், சமூகப் பணிகளையும் பல்வேறு சிரமங்களுக்கிடையில் ஆற்றி வருகின்ற இந்த நிஸ்வான் மன்றத்தினர் பாரட்டுக்குரியவர்கள். இவர்களுக்கு அல்லாஹ் பெரும் சிறப்பையும், பேரருளையும், ஈருலக நல்வாழ்வையும் தந்தருள்வானாக, ஆமீன்.
மத்ரஸா நிகழ்முறை:
நான்கு உஸ்த்தாது மார்கள், 40 மாணவிகளைக் கொண்டு ஸாஹிப் தைக்கா பெண்கள் பகுதியில் ஒர் ஒலைக் கூரைக்குள், இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைக் கல்வி பயிற்சிக் கூடம் நடந்து வந்தது. அதன் பின்னால் 70 மாணவியருக்கு மார்க்கக் கல்வி வழங்கும் நிறுவனமாக வளர்ந்தேறியது. சுமார் 14 வருடங்கள் இந்த கூரைப் பகுதியில் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் இப்பணி நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் மார்க்கப் போதகர்களாகப் பணியாற்றிய ஆலிமாக்கள், ஸஃபிய்யா உம்மா, கதீஜத் ரஹ்மா, சம்ஸுன் நிஸா, செய்யது தாஹிரா, ஜரீனா ஆகியோர் இந்த அமைப்பின் நன்றிக்குரியவர்கள். மூன்று வயது முதல் 15 வயது வரையிலான மாணவியர் நமது ஊரின் அனைத்துப் பகுதிலிருந்தும் இங்கு வந்து கற்றுத் தேர்ந்து வருகின்றனர்.
மத்ரஸாவிற்குப் புகழ் சேர்க்கும் மாணவியர்:
ஆண்டுதோறும் முப்பெரும் விழாக்களை நடத்தி, இந்த மாணவியருக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்தனர். பேச்சுப்போட்டி, வினாடி வினா, போன்றவற்றை நடத்தி, பல்வேறு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்துள்ளார்கள். பல்வேறு திறமை மிக்க பெண் பேச்சாளர்களை அழைத்து வந்து நல்லுபதேசங்களை வழங்கியுள்ளார்கள்.
நன்றிக்குரியோர்:
தற்போது 100.க்கு மேற்பட்ட மாணவியருக்கு மார்க்கக் கல்வி வழங்கி வருகிறார்கள். 4 முழு நேர ஆசிரியையர், 12க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியையர் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது பணியாற்றி வருகிறார்கள்.
மார்க்கப் பணி மட்டுமல்லாமல் இப்பகுதிக்குத் தேவையான மருத்துவ முகாம்கள், அரசுப்பணிகள், சமூகச் சேவைகள் ஆற்றி வருவது நம்மின் பாராட்டுக்குரியது. எவ்வித பிரதிபலனும் எதிர்பாரமல் இறைவனுக்காக இந்தக் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் அன்பு சகோதரிகள் கே.ரஹ்மத் நிஸா, எம்.எஸ்.ஸஃபிய்யா, என்.கே.பஷீரா,எஸ்.ஓ.ஆயிஷா, எஸ்.ஏ.சி.சாமு ஃபாத்திமா, எஸ்.ஓ.பி.ஆபிதா, ஏ.எஸ்.எல்.ஜீனத் கதீஜா, எஸ்.ஐ.கதீஜா ஆயிஷா உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் இப்பகுதி மக்களின் நன்றிக்குரியவர்கள், பாரட்டுக்குரியவர்கள். இந்த அருந்தவப் பணிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் இவர்களின் தாய் - தந்தையருக்கும் நன்றி கூறிக் கொள்கிறோம்.
காலத்தால் அழியாத ஒரு மார்க்கக் கல்விக் கூடத்தை தைக்கா தெரு, மகுதூம் தெரு, புதுக்கடைத் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி - ஒரு பாதுகாப்பான இடத்தில் இதனைக் கட்டியிருப்பது பாரட்டுக்குரியது. சில கட்டங்களில் மழைக்காலங்களிலும், இடநெருக்கடியில் தவிர்த்தபோதும் - புதுக்கடைத் தெரு, மஃபதுன் நிஸ்வான் பெண்கள் தைக்காவைத் தந்துதவிய அதன் நிர்வாகிகள் இந்த அமைப்பின் நன்றிக்குரியவர்கள்.
புதிய கட்டிடத்திற்கு நிதியளித்தோர்:
ஆண்டுதோறும் விழாக்கள் நடத்துவதற்கு இடம் தந்துதவிய ஸாஹிப் அப்பா தைக்கா நிர்வாகிகளும் நன்றிக்குரியவர்கள். 50 லட்சம் மதிப்பில் உருவான இந்த கட்டிடம் மதரஸா மாணவியர் மூலம் சிறுகச் சிறுக சேர்த்த நிதியோடும், உள்ளுர் - வெளியூர், வெளிநாட்டைச் சேர்ந்த தனவந்தர்கள் தந்த நிதியைக் கொண்டும் வளர்ந்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் மஸ்லிஸுன் நிஸ்வான் மனமார்ந்த நன்றியை சமர்ப்பணம் செய்யக் கடமைப்பட்டுள்ளது.
மேலும் சில சந்தர்ப்பங்களில் மதரஸா நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோதும், இடமில்லாமல் தவித்தபோதும் மதரஸா பணிகள் தொய்வின்றி நடைபெற ஊக்கமளித்ததோடு, தங்களின் தோட்ட வளாகத்தைத் தந்துவிய டாக்டர்.எஸ்.ஓ.செய்தகமது அவர்கள் குடும்பத்திற்கும், புதுக்கடைத்தெரு, வீட்டைத் தந்துதவிய கே.பீ.எஸ்.ஜெஸீமா லாத்தா குடும்பத்திற்கும் மொகுதூம் கலீபா சேட் குடும்பத்திற்கும், நன்றி கூற கடமைப்பட்டியிருக்கிறோம்.
அந்தச் சோதனையான காலத்தில், இதன் நிர்வாகிகள் கூடி எடுத்த முடிவே இந்த அழகான கட்டிடம் உருவாகக் காரணமாய் அமைந்துவிட்டது. இவ்வளவு குறுகிய காலத்தில் இதனை உருவாக்கித் தர அருள்புரிந்த எல்லாம்வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், புகழ்ச்சியும் - அல்ஹம்துலில்லாஹ்!
அடிக்கல் நாட்டு விழா:
இந்த கட்டிடத்திற்கு 03.10.2014 அன்று அடிக்கல் நாட்டிய குதபிய்யா மன்ஜல் ஸ்தாபகர் சங்கைக்குரிய எம்.இசட்.ஜலீல் முஹ்யித்தீன் காதிரீ மற்றும் அவர்களது மகனார் ஜெ.எம்.அப்துற்றஹீம் ஆகியோர் பெரிதும் உதவி வருகிறார்கள். அவர்களுக்கும் இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
புதிய பெயரில் மத்ரஸா கட்டிடம்:
இந்த மஜ்லீஸுன் நிஸ்வானின் புதிய கட்டிடத்திற்கு - மேலப்பள்ளியில், அதாவது ஷெய்கு ஸலாஹுத்தீன் பள்ளியில் மறைந்து வாழும் மார்க்க ஒழுக்கத்திற்கும், அதன் உயர்வான தன்மைக்கும் ஒளிவிளக்காக இலங்கும் சொர்க்கத்துப் பெண் என்று நம்மால் அழைக்கப்படும் முஹம்மத் ஆயிஷா உம்மா எனும் பெண் வலிய்யுல்லாஹ்வின் பெயரைப் பொறித்து மகுடம் சூட்டியுள்ளார்கள்.
அந்த சொர்க்கத்துப் பெண் போல நம் சமுதாயப் பெண் சந்ததியினர் உருவாக உழைக்கும் இந்த மஜ்லிஸுன் நிஸ்வான் அமைப்பினர், காலமெல்லாம் இறையருள் பெற்று, தாங்கள் எடுத்துக்கொண்ட இப்பணி தொய்வின்றி தொடர நம் அனைவரும் இறைவனிடம் வேண்டுவோம். எனக் கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெற்றுக் கொள்கிறோம்.
கட்டுமானப் பணிக்கு உதவியவருக்கு நன்றி:
இந்த கட்டிடம் வளர்ந்தேற மிகப்பெரிய ஒத்துழைப்பை நல்கிய ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத் அவர்களுககு நன்றிக்கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இவர்களின் இந்தப் பணிக்கு - பெரிதும் துணைபுரிந்து வரும் இப்பகுதி வாழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் மஜ்லீஸுன் நிஸ்வான் மனமார்ந்த நன்றியை சமர்ப்பனம் செய்கிறது. வரும் காலங்களில் இப்பகுதி பெண்களுக்கு தேவையான பொதுக் காரியங்களில் ஈடுபட இம்மன்றத்தினர் முன்வந்திருப்பது பாரட்டுக்குரியது.
இவ்வாறு அந்த உரை அமைந்திருந்தது.
தகவல்களுள் உதவி:
இப்னு ஆப்தீன்
படங்களுள் உதவி:
MOFA MALIK
மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |