தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலை ஆகியன விரைந்து சீரமைக்கப்படும் என்றும், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீர் வழிந்தோட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பீ.சண்முகநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறையின் சார்பில் 15.11.2015. அன்று நடைபெற்ற மழை வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது. மழை வெள்ள நிவாரணப் பணிகளின் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தொழிலாளர் நலன் வேலைவாய்ப்புத்துறை செயலர் குமார் ஜெயந்த் கலந்துகொண்டார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வெள்ள நிலவரம் மற்றும் மேற்கொண்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பேசும்போது தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார்.
மேலும், பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்புகள், வீடுகள் சேதம் மற்றும் இதர சேதங்களுக்கான நிவாரண உதவித்தொகைகளை உயர்த்தியும், உடனடியாகவும் வழங்கி வருகிறார்.
மழை நேரங்களில் அரசு அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் இருந்து கண்காணிக்க வேண்டும். விளாத்திக்குளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் விவசாயத்திற்கு தகுந்த மழை பெய்துள்ளது. திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் மழைநீர் ஊருக்குள் புகுந்து வடியாமல் உள்ளது. வெள்ளநீர் கால்வாயில் வழிந்தோடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தாழ்வான பகுதிகளில் இருந்து மோட்டார்கள் மூலம் நீரை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும்.
திருச்செந்தூர் முக்கியமான சுற்றுலாதலமாகும். தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை மற்றும் திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலைகளை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சீராக தங்குதடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அனைத்து இடங்களிலும் தேங்கி நிற்கும் மழை நீரை விரைந்து வெளியேற்றிட வேண்டும். தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருந்தால் கொசு உற்பத்தியாகி பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, சுகாதாரத்துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கவேண்டும். வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் பேசும்போது தெரிவித்ததாவது:-
01.10.2015 முதல் 14.11.2015 வரை பெய்த மழையில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சம் மாண்புமிகு முதலமைச்சர் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் மற்றும் திருவைகுண்டம் பகுதிகளில் உயிரிழந்த 6 ஆடுகளுக்கு நிவாரணத் தொகை ரூ.16,000/- வழங்கப்பட்டுள்ளது. 145 பகுதி சேதமடைந்த வீடுகளுக்கும், 35 முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான 403 குளங்களில் 82 குளங்கள் முழுவதும் நிரம்பியும், 47 குளங்கள் 75 சதவிதத்திற்கு அதிகமாகவும், 274 குளங்கள் 75 சதவீதத்திற்கு குறைவாகவும் நீர் நிரம்பியுள்ளது.
மேலும், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியமா;த்தப்பட்டுள்ளனர். பொது விநியோகக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியமா;த்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் புகும் மழை நீரை வெளியேற்ற மோட்டார்கள் ஜெ.சி.பி இயந்திரங்கள், மரங்கள் விழுந்தால் அப்புறப்படுத்தும் மோட்டார் ரம்பங்கள் மற்றும் 45 ஜென்செட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
பேரிடர் மேலாண்மை அலகின் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளது. எனவே, மழையினால் ஏற்படும் சேதம் தொடர்பாக பொது மக்கள் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், வாட்ஸ்அப்க்கு 9486454714-லும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.
இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்டினிஸ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாநிலங்களவை உறுப்பினர் எல்.சசிகலா புஷ்பா, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் சு.முருகையா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.சித்திரை ராஜூ, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், கோவில்பட்டி கோட்டாட்சியர் கண்ணபிரான், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |