காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 18, 2001 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 31]
வியாழன், ஐனவரி 18, 2001
காயல்பட்டணம் கடற்கரை ஆக்கிரமிப்பு! அதிகாரிகள் நேரடி நடவடிக்கை!
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
வரலாற்றுச் சிறப்புமிக்க காயல்பட்டணத்தில் எழில்மிக்க கடற்கரையின் 90 சதவீதம் வெளிமாவட்ட மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மீனவ குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டு விட்டன.
எஞ்சியுள்ள பகுதியையாவது காப்பாற்றி பொதுமக்கள் அமரும் பகுதியை அழகுபடுத்தி பூங்கா அமைக்க காயல்பட்டணம் பேரூராட்;சி முயற்சி மேற்கொண்டது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.டீ.கே.ஜெயசீலன் ரூ3 லட்சமும், சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் திருமதி.எஸ்.ஜெனிபர் சந்திரன் ரூ 2 லட்சமும் ஒதுக்கியுள்ளனர். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சங்கரலிங்கம் ரூ 1.50 வழங்கியதில் கடற்கரையில் ஒளிவெள்ள விளக்கு அமைக்கப்பட்டது.
பூங்கா அமைக்கும் பணிக்கு ஆக்கிரமிப்பு குடிசைகள் இடையூராக இருந்ததால் அப்பணி தடைபட்டது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான மரங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் இந்நகர் வந்து தொழில் செய்ய ஆரம்பித்தனர். இதனை பேரூராட்சி கடுமையாக எதிர்த்தது. அமைச்சர் ஜெனிபர் சந்திரன், கலெக்டர் மாலிக் பெரோஸ்கான் மற்றும் வருவாய், மீன்வளத்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் பேரூராட்சியினர் முறையிட்டனர்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் கிங்ஜ்லிலேய்ன், திருச்செந்தூர் சப் கலெக்டர் சுப்ரமணியன், வட்டாட்சியர், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் ஜேக்கப், துணை ஆய்வாளர் கிருஷ்ணன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் தெய்வநாயகம், கவுன்ஸிலர் காயல் மகபூப், கிராம நிர்வாக அதிகாரி தர்மேந்திரன் ஆகியோர் காயல்பட்டணம் கடற்கரை சென்று பார்வையிட்டு பூங்கா பணிக்கு இடையூராக உள்ள குடிசைகளை அப்புறப்படுத்தவும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்துள்ள கட்டுமரங்கள் அனைத்தையும் வெளியேற்றவும் உத்தரவிட்டனர். இந்த ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் 20-1-2001க்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே காயல்பட்டணம் கொம்புத்துறையில் இருபது ஏக்கர் நிலத்தில் 800க்கும் மேற்பட்ட பிளாட்கள் போடப்பட்டு 4000க்கும் மேற்பட்ட கடியபட்டினம் மீனவர்கள் குடியேற உள்ளனர். இதனை தடுக்க மீன்வளத்துறையை கேட்டுக் கொண்டும், இப்படி இந்நகருக்கு துரோகம் செய்து காயல்பட்டணம் முஸ்லிம்களை சிறுமைபடுத்தும் செயலை செய்ய வேண்டாம் என பிளாட் போடுபவர்களை கேட்டுக் கொண்டும், கொம்புத்துறையில் 61 பைபர் படகுகள் சிங்கித்துறையில் 43 வல்லங்கள், சுங்கத்துiயில் 8 கட்டு மரங்களைத் தவிர வேறு புதிதாக மீன்பிடி கலன்களை பதிவு செய்யக்கூடாது என மீன்வளத்துறையை கேட்டுக் கொண்டும் காயல்பட்டணம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
|