சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 121-வது செயற்குழு கூட்டம் ஷரஃபியாவிலுள்ள ஹில்டாப் உணவக உள்ளரங்கத்தில் சென்ற 26/07/2019 வெள்ளி மாலை 07:30 மணிக்கு நடந்தேறியது.
இச்செயற்குழுவிற்கு மன்றத்தலைவர் சகோ.நூர்தீன் நெய்னா தலைமை ஏற்றார். சகோ.அப்துல் பாசித் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். சகோ.செய்யிது முஹம்மது அலி வரவேற்புரை நல்கினார்.
தலைமையுரை:
சென்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதன் நிமித்தம் நடந்தேறிய மன்றப்பணிகள், இன்றைய கூட்டப்பொருள் குறித்த விபரங்கள் மற்றும் நகர் சார்ந்த ஏனைய செய்திகளையும் தலைமையுரையாக தந்தார் சகோ.நூர்தீன் நெய்னா.
நிதிநிலை:
மன்றத்தின் பொது இருப்பு, சிறப்பு திட்டங்களுக்கான ஒதுக்கீடு மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் பற்றிய நிதி விபரங்களை விரிவாக சமர்ப்பித்தார் மன்றப்பொருளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
பிரிவுபசாரம்:
பல ஆண்டுகளாக ஜித்தாவில் பணிபுரியும் நம் மன்றத்தின் மூத்த உறுப்பினர் சகோ.எஸ்.எஸ் ஜாஃபர் ஸாதிக் அவர்கள் பணி முடித்து தாயகம் செல்லவிருப்பதால் அவரை வாழ்த்தி, மன்றத்துடனான அவரது தொடர்பு மற்றும் சேவை குறித்த செய்திகளை சீரிய முறையில் எடுத்துரைத்தனர் மன்ற ஆலோசகர்கள் சகோ.அஹ்மத் முஹ்யித்தீன் மற்றும் சகோ.செய்யித் மீரான்.
மன்றத்தின் துணைச் செயலாளர் சகோ.செய்யித் அஹ்மத் மற்றும் மூத்த உறுப்பினர் சகோ.அப்துல் மஜீத் ஆகியோர் சகோ.ஜாஃபர் ஸாதிக் அவர்களின் சீரிய சேவையைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
சகோ.ஜாஃபர் ஸாதிக் அவர்களின் சேவையைப் பாராட்டி மன்றத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஏற்புரை:
மன்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுகாறும் இணைந்து பணியாற்றிய சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட சகோ.எஸ்.எஸ் ஜாஃபர் ஸாதிக், அவ்வாய்ப்பினை நல்கிய இறையை போற்றி, இந்நற்பணிகளை இன்ஷாஅல்லாஹ் தாய்மண்ணிலும் தொடர்வேன் என உறுதியளித்தார். நமது மன்றம் நம் ஊருக்கும் சமுதாயத்திற்கும் மேலும் பல சேவைகளாற்றி அதன் பணிகள் சிறக்க இறையை பிரார்த்தித்து பிரியா விடைபெற்றார்.
கல்வி உதவித்தொகை:
பயனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கல்வி மனுக்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டது. B.E., BPT (Physiotherapy), Radiology, Hotel Management, B.L., மற்றும் B.Ed., படிப்பிற்காக பன்னிரெண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டது.
கலந்துரையாடல்:
உலக காயல் நல மன்றங்களின் கல்விக் கூட்டமைப்பான இக்ரஃ மற்றும் மருத்துவக் கூட்டமைப்பான ஷிஃபா ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றிய விபரங்கள் கலந்துரையாடப்பட்டது.
மேலும் தலைவரால் எடுத்து வைக்கப்பட்ட கூட்டப்பொருள் மீதான உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது. அதனடிப்படையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
1. அடுத்த செயற்குழு கூட்டம் செப்டம்பர் மாதத்தில் புனித மக்காவில் வைத்து நடத்துவது.
2. அதற்கடுத்த கூட்டம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஜித்தாவில் வைத்து பொதுக்குழுவாக நடத்துவது.
3. ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறைக்காக தாயகம் செல்லவிருக்கும் நம் மன்ற உறுப்பினர்கள் இக்ரஃ மற்றும் ஷிஃபா கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு நம்முடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
அடுத்த செயற்குழு மற்றும் பொதுக்குழு ஏற்பாட்டிற்காக ஐவர் குழு நியமிக்கப்பட்டது.
நன்றியுரை:
இக்கூட்டம் இனிதே நிறைவுற அருள்புரிந்த வல்ல இறைவனுக்கு முதலில் நன்றியை உரித்தாக்கி, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கூட்ட அனுசரணையாளருக்கும் நன்றி கூறினார் சகோ.செய்யிது முஹம்மத் ஸாஹிப்.
சகோ.சட்னி முஹம்மது லெப்பை அவர்களின் இறைவேண்டலுக்குப் பின் கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
செய்திப் பிரிவு,
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
26.07.2019
|