காயல்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் தென்மாவட்டங்களி் வடகிழக்குப் பருவமழை கடந்த செப்டம்பர் மாத கடைசியில் துவங்கி, நிகழும் நவம்பர் மாதத்தில் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, நகரின் தாழ்வான சாலைகளில் வழமை போல மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
பல்லாண்டுகளாக நகரில் பெரும்பாலும் அனைத்து சாலைகளும் சீர்கெட்டுள்ள நிலையில், இரண்டாம் குடிநீர் திட்ட குழாய் பதிப்பு போன்ற காரணங்களைக் காட்டியும், பணி அலட்சியத்தாலும் நகராட்சி இதுவரை அப்பகுதிகளில் புதிய சாலைகளை அமைத்திட ஆர்வம் காண்பிக்கவில்லை.
இவ்வாறிருக்க, அதிகம் மழை நீர் தேங்கும் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகி, பொதுமக்களுக்குப் பெரும் இடையூறு அளித்துள்ளதையடுத்து, அப்பகுதிகளில் தற்காலிகமாகவேனும் பள்ளங்களை நிரப்பித் தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, சதுக்கைத் தெரு – பஞ்சாயத்து வீதி குறுக்குச் சாலை, சதுக்கைத் தெரு – நெய்னார் தெரு குறுக்குச் சாலை, கி.மு.கச்சேரி தெரு, அலியார் தெரு, சித்தன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கருங்கல் சரல் பரத்தப்பட்டு, பள்ளங்களில் நிரப்பப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அப்பகுதிகளில் மழை நீர்த்தேக்கம் சற்று குறைந்துள்ளபோதிலும், பொதுமக்கள் நடந்தோ – வாகனங்களிலோ கடந்து செல்வதற்கு ஏற்ற நிலையில் அவை இல்லை.
|