காயல்பட்டினத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. பாதசாரிகளைத் துரத்துவதும், சில பல நேரங்களில் கடித்து விடுவதும், கால்நடைகளைச் சரமாரியாகக் கடித்துக் குதறுவதும் அன்றாடம் வாடிக்கையாகிவிட்டது.
இதுகுறித்து பலமுறை நகராட்சிக்கும் – அரசுத் துறைகளுக்கும் முறையீடுகள் வைக்கப்பட்டும் நிரந்தரத் தீர்வு எதுவும் காணப்படாத நிலையில், “மெகா / நடப்பது என்ன?” குழுமம் சார்பில் நகராட்சியைக் கவனப்படுத்தும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். அதன் அசைபடப் பதிவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக தெரு நாய்களினால் தொல்லை நிலவுவது குறித்து - நிரந்தர தீர்வு காணாமல், கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே - நகராட்சி மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்தது.
இது குறித்து - அரசின் கவனத்தை ஈர்க்க, ஆர்ப்பாட்டம் ஒன்று - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) மூலம், 18.10.2019. வெள்ளிக்கிழமையன்று - வள்ளல் சீதக்காதி திடல் அருகில் - நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு துவங்கிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மெகா அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹைதீன் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஹாஜி கே.ஏ.நூஹு - இறைமறையில் இருந்து வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், தெரு நாய்களினால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மெகா அமைப்பின் துணை செயலாளர் ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி, செயற்குழு உறுப்பினர் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் மூத்த உறுப்பினர் ஹாஜி எம்.என்.அஹமத் சாஹிப் ஆகியோர் விளக்கமாக பேசினர்.
உரைகளுக்கு இடையில் - அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் - பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் - மாலை 6 மணிக்கு சரியாக நிறைவுற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் முழுமையான அசைப்படக்காட்சிகள், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு கீழே:
https://www.youtube.com/watch?v=wpGNloBe4a8&feature=youtu.be
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|