காயல்பட்டினம் உட்பட – தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிக் குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து, அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு & அதன் சமூக ஊடகக் குழுமமான “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் – பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோட்டார் கொண்டு மழை நீரை உறிஞ்சியகற்றவும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவேற்பாடுகளைச் செய்து தரவும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால், நகரின் பல பகுதிகள் - மழைநீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக - நகரின் தாழ்வான பகுதிகளான மாட்டுக்குளம், தேங்காபண்டகசாலை, காட்டு தைக்கா தெரு, பாக்கர் காலனி பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள குடிசைகளில் வாழும் மக்கள் வீட்டிற்குள் நீர் புகுந்து உணவு சமைக்கமுடியாத சூழலும் நிலவுகிறது.
மழைநீரை வெளியேற்ற மோட்டார் பயன்படுத்துவது, JCB கொண்டு நீரை அப்புறப்படுத்துவது, உணவுக்கு ஏற்பாடு செய்வது போன்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் காயல்பட்டினம் நகராட்சி திருப்தியாக செய்யவில்லை.
நகரின் இந்நிலையை, புகைப்படங்கள் மற்றும் அசைப்படங்கள் மூலமாக, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS கவனத்திற்கு இன்று காலை கொண்டுசென்றுள்ளது.
[#NEPR/2019120101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|