நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகராட்சிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அதன் சொந்தச் சின்னமான ஏணி சின்னத்தில், 6 வார்டுகளில் போட்டியிடும் என, அதன் நகர பொதுக்குழுக் கூட்டத்தில் - மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் பொதுக்குழுக் கூட்டம், 02.12.2019. திங்கட்கிழமையன்று, 17.00 மணியளவில் – கட்சியின் நகர கிளை அலுவலகமான காயல்பட்டினம் சதுக்கைத் தெரு தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமையில், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ முன்னிலையில் - உள்ளாட்சித் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டமாக நடைபெற்றது.
என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்றுப் பேசினார். காயல்பட்டினம் நகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான கள நிலவரம் குறித்து, மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் கருத்துரையாற்றினார். தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறினர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
கடந்த 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட திராவிடச் செயலாளர் மறைந்த என்.பெரியசாமி அவர்கள், காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில் போட்டியிட இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 6 வார்டுகளை ஒதுக்கீடு செய்து, அவரே கைச்சான்றிட்டுக் கடிதம் வழங்கினார். ஆனால், அந்தத் தேர்தல் நடைபெறவில்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஏற்கனவே வழங்கிய படி அதே ஆறு வார்டுகளை வழங்கிட, திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் நேரில் கோரிக்கை வைத்து, வேண்டுகோள் கடிதத்தையும் வழங்கியிருக்கிறோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை – இது அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சி என்பதால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து வருகிறது. நகரின் ஒற்றுமை, நகர்நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி – காயல்பட்டினத்தில் பல்வேறு அமைப்புகள் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண்பது குறித்து கலந்தாலோசனைகளை நடத்தி வருகின்றன. அவர்களுடன் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
அதே நேரத்தில், முன்பு நடந்த சில நிகழ்வுகளையும் கவனத்தில் கொண்டே நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சுயேட்சையாகக் களத்தில் நின்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அரசியல் கட்சிகளில் சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு. அதுபோல, நகராட்சித் துணைத் தலைவராக இருந்த நிலையில் தவறு செய்த போதும், அவர் சுயேட்சை என்பதால் கேட்பதற்கு நாதியற்ற நிலை ஏற்பட்டதுமுண்டு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை, இந்த நகருக்கு நன்மையை நாடக் கூடிய தகுதியான நல்லவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தவுள்ளோம். அவர்கள் வெற்றி பெற்ற பின் ஒருவேளை தவறிழைத்தாலும், தட்டிக் கேட்கவும் – நடவடிக்கை எடுக்கவும் கட்சித் தலைமை இருக்கிறது. இதோ நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்ற உறுப்பினர்தான். ஆனால், நான் ஒரு தவறு செய்தால், என்னை என் கட்சித் தலைமை தட்டிக் கேட்கும். இங்கே நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில், அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டுப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களைத்தான் தவறுகளின்போது தட்டிக் கேட்க இயலுமே தவிர, சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவரை யாரும், எதுவும் கேட்க இயலாது என்பதை இந்நகர மக்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.
இந்தச் சூழல்களையெல்லாம் கருத்திற்கொண்டு, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி காயல்பட்டினத்தில் 6 வார்டுகளில் போட்டியிடப் போகிறது. 3 வார்டுகளில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. டிசம்பர் 7ஆம் நாள் வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது ஒரு வரலாற்றுப் பேரியக்கம். இந்திய முஸ்லிம்களின் உணர்வோடு ஒன்றிய இயக்கம். இந்தக் காயல்பட்டினம் நகரின் நலனுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் வழங்கிய சேவைகள் ஏராளம். அதுபோல, இந்நகரின் பெரியவர்களும் – சகோதரர்களும் கட்சியின் வளர்ச்சிக்காகவும், சமுதாய வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வந்து கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, இந்தக் காயல்பட்டினத்தில்தான் இக்கட்சி போட்டியிட முடியுமே தவிர, பக்கத்திலிருக்கும் ஆறுமுகநேரியிலோ, திருச்செந்தூரிலோ போட்டியிடுவது சாத்தியமற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உள்ளனர். அவர்களால் அவர்கள் சார்ந்த தொகுதிகளுக்கும், முஸ்லிம் சமுதாயம் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நிறைய பலன்கள் கிடைத்து வருகின்றன. தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு, பிரதிநிதிகளைப் பெறவிருக்கிறோம். இதன் மூலம் எங்கள் சேவை தமிழகத்தின் மூளை முடுக்குகள் எங்கும் ஊடுருவிப் பரவும்.
இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், ஜமாஅத்துகளின் ஆதரவையும் நாங்கள் முறைப்படி கோரவுள்ளோம். இறையருளால் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் இந்த நகரின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் என்றும் உறுதுணையாக இருப்பார்கள் என்றும், ஒருவேளை அவர்களுள் யாரேனும் தவறிழைத்தால், முறைப்படி சுட்டிக்காட்டும்போது – அதைக் கருத்தில் ஏற்றி, அவர்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும் கட்சித் தலைமை ஆயத்தமாக உள்ளது என்ற உறுதிமொழியை உங்களுக்கு நாங்கள் இப்போதே வழங்குகிறோம்.
எனவே, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடவுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களை இந்த நகர மக்களும், கூட்டணிக் கட்சிகளின் அங்கத்தினரும் முழு மனதுடன் ஆதரித்து, அவர்களுக்காகக் களப்பணியாற்ற வருமாறு உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், கே.வி.ஏ.டீ.முத்து ஹாஜரா, கிதுரு ஃபாத்திமா, நஃபீஸா ஆகியோர் வார்டு தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை மாநில பொதுச் செயலாளரிடம் கையளித்தனர்.
கே.வி.ஏ.டீ.கபீர் நன்றி கூற, ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் மாவட்ட – நகர நிர்வாகிகள், நகர கிளை உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|