ஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 22.11.2019. வெள்ளிக்கிழமையன்று காயலர் சங்கம நிகழ்ச்சியாக நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
குழந்தைகளுடன் குடும்பங்கள் குதூகலம்!
துபை காயல் நல மன்றம் நடத்திய 44-வது காயலர் சங்கமம் - 2019!
கடந்த 22.11.2019 வெள்ளிக்கிழமை துபை அல் ஸஃபா பூங்காவில் துபை காயல் நல மன்றத்தினரின் 44வது காயலர் சங்கமம் ஒன்று கூடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
பெண்கள், குழந்தைகள் எனக் குடும்பங்கள் திரளாகப் பங்கு பெற்ற அந்நிகழ்ச்சியில் தனியாக இருப்பவர்களும் தளராமல் கலந்து கொண்டனர்.
காலை 11 மணியளவில் குழந்தைகளுக்கான கிராஅத் போட்டியுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. வருகிறவர்களுக்கு சூடான தேனீரும், சுவையான சுண்டலும் பரிமாறப்பட்டன.
அழகிய உச்சரிப்பில் அமுதூட்டும் வண்ணம் குழந்தைகள் குர்ஆன் ஓதியது அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. குழந்தைகளின் குர்ஆன் ஆர்வம் பெற்றோர்களின் மார்க்க சிந்தனையை உணர்த்தியது.
ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு பொதுக்குழுக் கூட்டம் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரீ அவர்கள் தலைமையில் ஆரம்பமானது.
ஹாஃபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கீ அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் சாளை சலீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், நிகழ்ச்சியை நெறிப்படுத்தியும் தந்தார்.
பின்னர் மன்றத் தலைவர் தலைமையுரையாற்றினார்.
“அல்லாஹ்வின் அருளால் ஆண்டிற்கு இருமுறை இங்கே ஒன்று கூடுகிறோம். அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் காயல் சொந்தங்கள் இங்கே வந்துள்ளனர். நமதூரைச் சார்ந்த பலரையும் இங்கே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தக் கூட்டம் நடப்பதற்கு பலருடைய உழைப்பு இருக்கிறது.
இன்று அமீரகத்தில் வேலைகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சார்ட்டட் அக்கவுண்டண்டுகளுக்கே வேலை கிடைப்பதில் சிரமம் உள்ளது. பலர் வேலையிழந்துள்ளனர். வேலையில்லாதோருக்கு நம் நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதற்கு நாம் உதவ வேண்டும். அமீரகத்தில் இருப்பவர்களும் மன்றத்திற்காக பணம், நேரம், உழைப்பைக் கொடுக்க முன்வர வேண்டும்.
புதிய உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்களாகச் சேர்வதற்கு முன்வந்து பெயர் கொடுக்க வேண்டும். இப்பொழுது கூட்டத்தின் வருகைப்பதிவுக்கு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். ‘மொபைல் ஆப்’ உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. வேலைவாய்ப்புக்கு மன்ற உறுப்பினர் ஜமீல் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று உருவாக்கியிருக்கிறார்.”
பின்னர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எஸ்.கே. ஸாலிஹ் அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார்.
காயல் நலப் பணிகளுக்கு மன்றம் எவ்வாறெல்லாம் உதவலாம் என்பது குறித்தும், உடல் நலம் பேண சரியான வாழ்வியல் முறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் தனது உரையில் ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
அதன் பிறகு காயல் களறிச் சாப்பாடு பரிமாறப்பட்டது. விருந்து உபசரிப்பில் விஞ்ச முடியுமா நம்மூரை என்ற அடிப்படையில் நெய்ச் சோறு, களறிக் கறி, பருப்பு கத்தரிக்காய், குளோப் ஜாமூன் ஆகியவை பரிமாறப்பட்டன. இதற்காக, மன்றத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அல்ஹாஜ் விளக்கு ஷெய்க் தாவூத் அவர்களின் முயற்சியில் தாயகத்திலிருந்து சமையல் நிபுணர் மொகுதூம் காக்கா வரவழைக்கப்பட்டார்.
சுவையான விருந்துக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. குழந்தைகளுக்கான பல்சுவை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. துணைத் தலைவர் சாளை ஷெய்க் ஸலீம், செயற்குழு உறுப்பினர் பி.ஏ. ரியாஸ், பாஸுல் ஹமீது, முஜீப் ஆகியோர் இந்த விளையாட்டுப் போட்டிகளைப் பொறுமையுடன் நடத்தினர். குழந்தைகள் குதூகலமாக அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சுவையான பல அம்சங்களைக் கொண்ட அறிவியல் திறன் வினாடி-வினா போட்டியை வெகு சிறப்பாக நடத்தினார் செயற்குழு உறுப்பினர் எம்.யூ. ஷேக். கேள்விகளைத் திறம்பட தயாரித்தவரும் அவரே!
பெரியவர்களுக்கான நடைப்போட்டியும் சாக்கு ஓட்டப் பந்தயமும் எலுமிச்சைப் பழத்தைக் கரண்டியில் ஏந்தி ஓடும் போட்டியும் நடைபெற்றன.
நாங்களும் சளைத்தவர்களல்லர் என்று பெண்களும் தங்களுக்குள் குழு பிரித்து சுவையான பல போட்டிகளை நடத்தி, வீட்டுக்குத் தேவையான பல பயனுள்ள பரிசுகளை வழங்கினர்.
அனைவருக்கும் முன்பாக வரவேற்புக் குழுவினர் பூங்கா வந்து வருபவர்களை வரவேற்று அவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர்.
அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தின் உபயத்தில் இயந்திரம் மூலமாக அதிவேகத்தில் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு டோக்கன்களும் வழங்கப்பட்டன. இதனைத் திறம்பட அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தின் பொது மேலாளர் சகோ. ஜமீல் புகாரீ வழிநடத்தினார்.
பின்னர் மாலை நேரத் தேனீரும் காயல் மஞ்ச வாடாவும் பரிமாறப்பட்டன. வாடாவின் சுவை மக்களை வாடா வாடா என்றழைத்தன. சிறார்களுக்கு ஸ்ட்ராபெர்ரி பாலும், பிஸ்கட்டும் வழங்கப்பட்டன.
கிராஅத், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும் வினாடி வினா போட்டியிலும் ஓட்டப்பந்தயங்களிலும் வெற்றி பெற்ற பெரியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்தோடு கலந்துகொண்ட சுமார் 80 சிறார்கள் அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் முற்கூட்டியே வருவதை ஊக்குவிப்பதற்காக காலை 11 மணிக்கு முன்பு வருபவர்களுக்கும் (இவர்களுக்கு மூன்று குலுக்கல் வாய்ப்புகள்), ஜுமுஆவுக்கு முன்பு வருபவர்களுக்கும் (இவர்களுக்கு இரண்டுகுலுக்கல் வாய்ப்புகள்), ஜுமுஆவுக்குப் பிறகு வருபவர்களுக்கும் (இவர்களுக்கு ஒரு குலுக்கல் வாய்ப்பு) என்று மூன்று பரிசுக் குலுக்கல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்ட இறுதியில் இதற்கான பரிசுக் குலுக்கல்கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்கள், இதர பரிசுப் பொருட்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முறைப்படுத்தி, பொறுப்பாளிகளை Follow up செய்து அனைத்து ஏற்பாடுகளையும் திறம்படச் செய்திருந்தார் மன்றப் பொதுச் செயலாளர் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன்.
நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளுக்கு ARISTO STAR, TOSHIBA ELEVATORS, HALI MANAGEMENT CONSULTANTS (சாளை சலீம்) ஆகிய நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன.
நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த அந்தி சாயும் நேரத்தில் அனைவரும் பிரியா விடை பெற்று பிரிந்தனர்.
கூட்ட நிகழ்விடத்திற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையும் இல்லாமல் செய்து தந்த இப்றாஹீம் காக்கா, விருந்து உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்து தந்த விளக்கு ஷெய்க் தாவூத் ஹாஜி, இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக அவ்வப்போது கூடிய செயற்குழு உறுப்பினர்கள், இங்கே சுழன்று சுழன்று பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி தந்த ஸஃபா பூங்கா நிர்வாகத்தினர், வாகனம் மற்றும் பணியாளர்களைத் தந்துதவிய ரஹ்மானியா டிரேடர்ஸ் மற்றும் அரிஸ்டோ ஸ்டார் நிறுவனத்தார், வாகனங்களை மேற்பார்வை செய்த முத்து முஹம்மத், முத்து மொகுதூம், செய்யத் இப்றாஹீம் மற்றும் ஹுசைன் ஃபாரூக், கூட்டத்தில் கலந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், அழைப்பை ஏற்று மகிழ்வுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அபூதாபி சகோதரர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நிழற்படங்கள் எடுத்த புகைப்படக் கலைஞர் சுபுஹான் பீர் முஹம்மத், ஒலிபெருக்கி ஏற்பாடுகளை எந்தப் பிசிறும் இல்லாமல் செய்த செயற்குழு உறுப்பினர் காதர், கூட்டம் நடத்துவதற்கு பாய்கள், இன்னபிற பொருட்கள் தந்து உதவிய ஈடிஏ 'டி' பிளாக் நிர்வாகத்தினர், உறுப்பினர்களை அன்புடன் அணுகி அவர்களின் பங்களிப்புகளைப் பாங்காக இன்முகத்துடன் பெற்ற முத்து ஃபரீத், முனவ்வர், முஸஃப்பிர், உறுப்பினர்களின் பெயர்களைப் பதிவு செய்து இயந்திரம் மூலம் அதிவேகத்தில் டோக்கன்கள் வழங்கிய ஜமீல் புகாரீ மற்றும் அரிஸ்டோ ஸ்டார் ஊழியர்கள், அன்பளிப்புகளுக்கு அனுசரணை அளித்தவர்கள் ஆகியோருக்கு மன்றம் தனது நன்றியைக் காணிக்கையாக்குகிறது.
இறுதியாகவும் உறுதியாகவும் இம்மன்றப் பணிகள் சிறப்புற நடைபெறவும் இந்நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெறவும் எல்லா வகைகளிலும் பாடுபடும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகட்டும்.
நிகழ்ச்சியின் நிழற்படங்களைக் கீழ்க்கண்ட இணைப்பில் முழுமையாகக் காணலாம்:
https://photos.app.goo.gl/1bVVvV1LswYaYsW38
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.S.அப்துல் ஹமீத்
(மக்கள் தொடர்பு & செய்தி / ஊடகத்துறை பொறுப்பாளர்)
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
|