காயல்பட்டினத்தில் அண்மைக்காலமாகப் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சுலைமான் நகர் (மாட்டுக்குளம்), சல்லித்திரடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து, அம்மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ள தகவலை, காயல்பட்டினம் “மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு / நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்” நிழற்பட – அசைபட ஆதாரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தது. அதன் எதிரொலியாக, மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) அப்பகுதிகளுக்கு நேரடியாக வருகை தந்து கள ஆய்வு செய்து சென்றுள்ளார். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் துவங்கியதில் இருந்து - நகரின் பல்வேறு பகுதிகளில் - குறிப்பாக தாழ்வான பகுதிகளில் - மழைநீர் தேங்கி, பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கொசுக்கள் தொல்லையும் அதிகமாக நகரில் உள்ளது.
தேங்காபண்டகசாலை, சுலைமான் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பிரச்சனை குறித்து பலமுறை நகராட்சிக்கு எடுத்துரைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள விஷயமும், பருவமழையை சந்திக்க போதுமான நடவடிக்கைகளை காயல்பட்டினம் நகராட்சி எடுக்கவில்லை என்ற விஷயமும், ஒரேயொரு JCB கொண்டும், மோட்டார் இல்லாமலும் நகராட்சி பணியாற்றி வருவது குறித்தும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS அவர்களுக்கு மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), புகைப்படங்கள், அசைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பிவைத்தது.
மேலும் - காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளை நேரடியாக பார்வையிட அவரிடம் வேண்டுகோளும் வைக்கப்பட்டது.
நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது - காயல்பட்டினத்தில் நீர்தேங்கியுள்ளது குறித்து புகார்கள் வந்துள்ளதை நினைவுகூர்ந்த ஆட்சியருக்கு, இன்றும் - சுலைமான் நகர் மற்றும் சல்லிதிரடு மக்கள் அனுபவித்து வரும் சிரமங்கள் - அசைப்படங்களாகவும், புகைப்படங்களாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - இன்று மாலை, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு பி.விஷ்ணு சந்திரன் IAS - சுலைமான் நகர் சுற்றுவட்டார பகுதிகளை, துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுடனும் நேரில் பார்வையிட்டார். அவ்வேளையில் - அப்பகுதி மக்கள், தாங்கள் சந்தித்து வரும் இன்னல்களை எடுத்துரைத்தனர்.
அவற்றைப் பொறுமையாகக் கேட்ட கூடுதல் ஆட்சியர் - நகராட்சி அதிகாரிகளிடம், கூடுதல் JCB கருவிகள், மோட்டார்கள் கொண்டும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த உடனடியாக உத்தரவிட்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|