காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இன்றும் காலையிலிருந்து மழை தொடர்கிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காயல்பட்டினத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கி, குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துவிட்டது. கடந்த மூன்று நாட்களில் மழை நீர்த்தேக்கம் குறித்து நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியே பகிர்ந்த படங்களும், காயல்பட்டணம்.காம் சார்பில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட சில படங்களும் வருமாறு:-
தொடர் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி லூர்தம்மாள் குடியிருப்பை நேரடியாகப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்டத்தில் பரவலாக மழை நன்றாகப் பெய்துள்ளதாகவும், அனைத்து ஆறுகளும், குளங்களும் நிறைந்துவிட்டதாகவும் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தென் தாலுகா பகுதிகளில் மழை அதிகமாகப் பெய்துள்ளதாகக் கூறிய அவர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மழை பாதிப்பு குறித்து முறையீடுகள் வந்துள்ளதாகவும், பாதிப்புகளைக் கணக்கிட கண்காணிப்பு அதிகாரிகள் அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, நகரின் மழைப் பாதிப்புகளைப் படங்களாகவும், அசைபடங்களாகவும் பதிவு செய்த மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) – அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் இணைந்து, நகரின் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் நேரடித் தொடர்பு எண்ணுக்கு முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று 08.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து பெறப்பட்ட மழைபொழிவுப் பட்டியல் படி, காயல்பட்டினத்தில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
|