சவுதி அரேபியா மேற்கு மாகாணம் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 43-வது பொதுக்குழு கூட்டம் 18.10.2019 வெள்ளிமாலை 6:00 மணியளவில் ஷரஃபிய்யா ஏர்லைன்ஸ் உள்ளரங்கத்தில் நனிசிறப்போடு நடைபெற்றது.
மன்ற செயல்பாடுகள்:
பொதுக்குழுகூட்டம், மன்றத்தலைவர் ஜனாப் நூர்தீன் நெய்னா அவர்கள் தலைமையில் ஜனாப் யாசீன்மௌலானா, ஜனாப் குளம் அஹமத் முஹைதீன், ஜனாப் செய்யத் இப்றாகிம், ஜனாப் சட்னி செய்யது மீரான், வழக்கறிஞர் அரவக்குறிச்சி ஃபழ்லுல் ஹக் ஆகியோர் முன்னிலையில் இனிதே துவங்கியது.
முதலாவதாக இளவல் ஸிபக்கத்துல்லாஹ் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி கூட்டத்தினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜித்தா, மக்கா, மதீனா மற்றும் யான்பு பகுதியிலிருந்து வந்திருந்த காயலர்கள் அனைவரையும் தனது வரவேற்புரை மூலம் வாழ்த்தி வரவேற்றார் மன்ற செயற்குழு உறுப்பினர் ஜனாப் அப்துல் பாசித் அவர்கள்.
அதனைத் தொடர்ந்து மன்றத்தின் செயல்பாடுகளை தனக்கேயுரிய நடையில் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு தெளிவுபட விளக்கினார் மன்ற செயலாளர் ஜனாப் ஹாமீத் ரிஃபாய் அவர்கள். அவர் தனதுரையில் கல்வி உதவி, மருத்துவ உதவி, எதிர்பாராத விதாமாக ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்கான உதவிகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் என நம் மன்றம் செய்து வரும் பல்வேறு நற்பணிகளை விளக்கிக் கூறினார்.
வந்திருந்தோரை உற்சாகமூட்டும் விதமாக இஸ்லாமிய பாடல்களை தனது இனிய குரல் வளத்தால் பாடினார் பாடகர் யாகூத்துல் அர்ஷ் அவர்கள்.
மன்றத்தின் ஆலோசகர் ஜனாப் செய்யத் இப்றாகிம் அவர்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நலப்பணிகளை பற்றிய சிற்றுரையை வழங்கினார்.
கல்லாமையை இல்லாமலாக்க வேண்டும் என்ற நன்னோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காயல் நல மன்றங்களின் கல்விக்கான கூட்டமைப்பான இக்ராஃ கல்வி அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து அதன் பொறுப்பாளர் ஜனாப் ஒய்.எம். முஹம்மது ஸாலிஹ் தெளிவுபட விளக்கினார். இக்ராஃவின் கல்வி மேம்பாட்டு பணிகளான கல்வி உதவித் தொகை வழங்குதல், மாணக்கார்களுக்கான சீருடை வழங்குதல், அரசு போட்டித் தேர்வு பயிற்சிகள், குடிமைப் பணித் தேர்வு பயிற்சிகள் நடத்துதல் போன்ற பணிகள் பற்றிய விபரங்களைக் கூறினார்.
நோயில்லா ஆரோக்கியமான காயலாக மாற வேண்டும் என்ற சீரிய நோக்கில் உருவாக்கப்பட்ட காயலர்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிஃபாவின் மருத்துவ உதவிகள், மருத்துவ முன்னேற்பாடுகள், மக்கள் மருந்தகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார் மன்றத் தலைவர் ஜனாப் நூர்தீன் நெய்னா அவர்கள். மேலும் அவர் தனதுரையில் மக்கள் மருந்தகத்தின் சார்பாக சேவையின் அடிப்படையில் மிகக் குறைந்த விலையில் பரிசோதனை நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருதைக் குறிப்பிட்டார். மேலும் ஷிஃபா மற்றும் KMT மருத்துவமனை இணைந்து அமைக்கவிருக்கும் டயாலிசிஸ் சென்டர் பற்றிய விபரங்களையும், இவ்வருடம் நம் மன்றத்தின் சார்பாக இதுவரையிலும் 60 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டதையும் தனதுரையில் குறிப்பிட்டார்.
முன்னாள் மன்ற தலைவரும் தற்போதைய மன்றத்தின் ஆலோசகருமான ஜனாப் குளம் அஹமத் முஹைதீன் அவர்கள் சவுதி அரேபியாவில் பணி முடித்து ஊர் திரும்புவதால் இப்பொதுக்குழுவின் சார்பாக பிரிவுபசாரம் வழங்கப்பட்டது. அதன் ஏற்புரையில் “பிரிதல்” என்ற உணர்வுப்பூர்வமான தனது கவிதையை வாசித்து ஏற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மக்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக ஸதக்காவின் அவசியத்தை கவிதை வடிவில் சுட்டிக் காட்டினார்.
மன்றத்தின் பொருளாளர் ஜனாப் ஆதம் அவர்கள் மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை சமர்பித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் அரவக்குறிச்சியைச் சார்ந்த வழக்கறிஞர் ஃபழ்லுல் ஹக் அவர்கள் சிற்றுரை ஒன்றை வழங்கினார். காயல்பட்டினத்தின் வரலாற்றைப் படித்து தான் வியந்ததையும் அதன் தொன்மையையும் சிலாகித்து கூறினார். அத்துடன் வரலாற்று பின்புலம் மிக்க உங்கள் ஊர் கீழடிக்கும் மேலாக பழமை வாய்ந்த ஊராக இருக்கும் என நினைக்கின்றேன். உங்கள் ஊரையும் தோண்டினால் நிறைய வரலாறுகளை வெளிக் கொண்டு வரலாம் என்று கூறினார்.
தமிழ்நாடு முஸ்லிம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ள அவர், வழக்கறிஞர்களின் தேவை நம் சமுதாயத்திற்கு அவசியம் எனவும் உங்கள் ஊரிலிருந்து நிறைய வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும் எனவும் அதற்காக தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். அத்தோடு காயல்பட்டினத்தின் சார்பாக சட்டக்கல்லூரி ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடரந்து பல்சுவை போட்டிகள் நடை பெற்றது. முதலில் மன்றத்தின் செயலாளர் ஜனாப் சீனா மொஹ்தூம் முஹம்மது அவர்கள் கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
தமிழ் பேசு தங்கக்காசு நிகழ்ச்சியை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் ஆதம் அபுல்ஹசன் அவர்கள் ஒருங்கிணைத்தார். மாறி வரும் சூழலில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவது என்பது அருகி வரும் நிலையில் அன்றாடம் உபயோகிக்கும் ஆங்கிலம் கலந்த தமிழை ஆங்கிலம் கலக்காமல் பேசுவது எவ்வாறு என்பதே போட்டி. சிந்தனைக்கு விருந்தாகவும் சிரிப்பிற்கு பஞ்சமில்லாமலும் நிகழ்ச்சி நடந்தேறியது.
இதனிடையே குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை மன்ற செயற்குழு உறுப்பினர்கள் ஜனாப் அரபி ஷுஐப், மற்றும் ஷமீம் ஆகியோர் நடத்தினர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மன மகிழ்வான இந்த நல்லதொரு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜித்தா காயல் நலமன்றத்தின் சார்பாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் நன்றியினை தெரிவித்தார்.
இறுதியாக ஜனாப் தோல்சாப் முஹம்மது லெப்பை அவர்களின் துஆ மற்றும் கஃப்பாராவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்!
வந்திருந்த அனைவருக்கும் களறி கறியுடன் இரவு உணவு வழங்கப்பட்டது.
தகவல் மற்றும் படங்கள்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
18.10.2019.
|