சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 122-வது செயற்குழுவின் முதல் அமர்வு மக்காவில் ஹில்டன் உணவக உள்ளரங்கத்தில் சென்ற 20/09/2019 வெள்ளி மாலை 07:30 மணிக்கு நடந்தேறியது.
செயற்குழு கூட்டத்தை சகோ.சீனா மொகுதூம் முஹம்மது தொகுத்து வழங்கினார். இச்செயற்குழுவிற்கு மன்ற ஆலோசகர் சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் தலைமை ஏற்றார். சகோ.எஸ்.ஐ.முஹம்மது முனீப் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். சகோ.மஹ்மூதுல் ஹக் வரவேற்புரை நல்கினார்.
தலைமையுரை:
மன்றத்தின் பணிகள் பற்றியும், செயற்குழுவில் கலந்து கொண்டுள்ள சிறப்பு விருந்தினர்கள் குறித்தும் இன்னும் மன்றம் சார்ந்த பிற செய்திகளையும் தலைமையுரையாக தந்தார் சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம்.
மன்ற செயல்பாடுகள்:
சென்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதன் நிமித்தம் நடந்தேறிய பணிகள், தற்போதைய மன்ற செயல்பாடுகள், இன்றைய கூட்டப்பொருள் குறித்த விபரங்கள் மற்றும் மன்றம் குறித்த அறிமுகம் - விளக்கம் என நகர் சார்ந்த ஏனைய செய்திகளையும் விரிவாக எடுத்துரைத்தார் மன்றச்செயலர் சகோ.எம்.டபிள்யு.ஹாமீது ரிஃபாய்.
இக்ரஃ குறித்து:
உலக காயல் நல மன்றங்களின் கல்விக் கூட்டமைப்பான “இக்ரஃ”வின் கல்வி உதவிகள் மற்றும் இதர பணிகள் பற்றியும், TNPSC தேர்வுகள் , அதன் அணுகுமுறைகள், IAS படிப்பு குறித்த மேல் விபரங்கள் மற்றும் உயர் படிப்பு சார்ந்த பிற விளக்கங்களையும் கூறினார் நம் மன்றத்தின் இக்ரஃ பொறுப்பாளர் சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ்.
ஷிஃபா குறித்து:
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவக் கூட்டமைப்பான ஷிஃபாவின் மருத்துவ உதவிகள் - இதர பணிகள் குறித்தும், ஷிஃபா மற்றும் சில காயல் நற்பணி மன்றங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள DIALYSIS CENTER - அதற்கான பிரத்தியேக கட்டிடம் நம் KMT மருத்துவமனையில் அமையவிருப்பது பற்றியும், மக்கள் மருந்தகத்தின் எதிர்கால திட்டமான OWN MEDICAL LAB பற்றிய செய்திகளையும் விரிவாக தந்தார் மன்றத்தலைவர் சகோ.எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா.
பிரிவுபசாரம்:
பல ஆண்டுகளாக ஜித்தாவில் பணிபுரியும் நம் மன்றத்தின் மூத்த உறுப்பினர் மற்றும் முன்னாள் தலைவர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் அவர்கள் பணி முடித்து தாயகம் செல்லவிருப்பதால் அவரை வாழ்த்தி, மன்றத்துடனான அவரது தொடர்பு மற்றும் சேவை குறித்த செய்திகளை சீரிய முறையில் எடுத்துரைத்தனர் மன்ற ஆலோசகர்கள் சகோ.சட்னி செய்யிது மீரான், சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் மற்றும் மன்றத் துணைச்செயளர் சகோ.செய்யிது அஹ்மது ஆகியோர்.
சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் அவர்களின் சிறந்த சேவையைப் பாராட்டி மன்றத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஏற்புரை:
மன்றத்தில் நீண்ட காலம் பயணித்து இவ்வழகிய பணிகளை செய்ததில் நான் மனங்குளிர்கிறேன் என்றும், நம் மன்றத்தின் ஒரே முழக்கம் நமதூர் ஏழைகளின் துயர் துடைப்பதே என்றும் இதுகாறும் இணைந்து பணியாற்றிய சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹியித்தீன் அவர்கள், அவ்வுயரிய பணிகளை செய்ய வாய்ப்பினை நல்கிய இறைவனை போற்றி, இந்நற்பணிகளை இன்ஷாஅல்லாஹ் தாய்மண்ணிலும் தொடர்வேன் என உறுதியளித்தார். நமது மன்றம் நம் ஊருக்கும் சமுதாயத்திற்கும் மேலும் பல சேவைகளாற்றி அதன் பணிகள் சிறக்க இறைவனைப் பிரார்த்தித்து பிரியா விடைபெற்றார்.
சிறப்பு விருந்தினர்:
மக்கா இஸ்லாமிய அழைப்பு மைய்யத்தில் அறிஞராக பணி புரியும் சகோ.அல்ஹாஃபிழ் முஹம்மது ஜியாது மற்றும் மக்கா இஸ்லாமிய கலாச்சார மையத்தின் முன்னாள் அரசு ஊழியர் அறிஞர் சகோ.முஹம்மது பின் ரியால் அஸ்ஸீலானி மற்றும் ஜெய்ப்பூர் காயல் நல மன்ற செயலர் சகோ.ஸ்டார் முஹம்மது ஹஸன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மன்றத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்த அவர்கள் வியப்புற்று இச்சேவையால் ஏற்படும் நன்மைகளை விளக்கி மன்றத்தின் பணிகள் தடையின்றி நடந்தேற பிரார்த்தித்து பாராட்டி அமர்ந்தனர்.
மன்ற அழைப்பை ஏற்று கலந்து கொண்ட முன்னாள் அரசு ஊழியர் அறிஞர் சகோ.முஹம்மது பின் ரியால் அஸ்ஸீலானி அவர்களுக்கு மன்றத்தின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
சகோ.அமீர் சுல்தான் நன்றியுரை வழங்கினார். இரவு உணவு பரிமாற்றத்துடன் முதல் அமர்வு இனிதே நிறைவுற்றது.
இரண்டாம் அமர்வு:
நம் மன்ற செயற்குழுவின் இரண்டாம் அமர்வு.21/09/2019 சனிக்கிழமை மாலை 07:30 மணிக்கு ஜித்தாவில் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் இல்லத்தில் நடந்தேறியது.
இக்கூட்டத்திற்கு மன்றத்தலைவர் சகோ.எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா தலைமை ஏற்றார். சகோ.அரபி எம்.ஐ.முஹம்மது ஷுஐப் கிராஅத் ஓதினார்.
இரண்டாம் அமர்வில் விவாதிக்கப்படவேண்டிய அனைத்தையும் கூட்டப்பொருளாக முன் வைத்தனர் மன்றத்தலைவரும், செயலரும்.
நிதிநிலை:
மன்றத்தின் பொது இருப்பு, சிறப்பு திட்டங்களுக்கான ஒதுக்கீடு மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் பற்றிய நிதி விபரங்களை விரிவாக சமர்ப்பித்தார் மன்றப்பொருளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவி:
ஷிஃபா மூலம் பெறப்பட்ட மருத்துவ மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. பித்தப்பை, வலிப்பு, கிட்னி டயாலிசிஸ், கேன்சர், இருதயம், ஹிர்னியா, தைராய்டு, முதுகு டிஸ்க், மனநோய், கண்புரை, விபத்து மற்றும் தொடர் சிகிச்சை என இருபத்திமூன்று மருத்துவ தேவையுடையோருக்கான உதவிகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் பரிபூரண நலம் பெற ஏகனிடம் பிரார்த்திக்கப்பட்டது.
கல்வி உதவி:
பயனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கல்வி மனுக்கள் முறையே பரிசீலிக்கப்பட்டது. B.Ed, B.Sc.(Radiology), B.Sc,(Hotel management), BPT (Physiotherapy), B.E.mechanical, BDS (dental) மற்றும் Dip.Automobile என பத்து மேற்படிப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டது.
கலந்துரையாடல்:
உலக காயல் நல மன்றங்களின் கல்விக் கூட்டமைப்பான இக்ரஃ மற்றும் மருத்துவக் கூட்டமைப்பான ஷிஃபா ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டப்பொருள் மீதான உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்துரையாடலும் நடைபெற்றது. அதனடிப்படையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
1. இன்ஷாஅல்லாஹ் அடுத்த பொதுக்குழு கூட்டம் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதியன்று நடத்துவதென்று தீர்மானிக்கப்பது.
2. பொதுக்குழுவை ஏற்பாடு செய்வதற்காக ஐவர் குழு நியமிக்கப்பட்டது.
நன்றியுரை:
இச்செயற்குழுவின் இரண்டு அமர்வுகளும் இனிதே நிறைவுற அருள்புரிந்த வல்ல இறைவனுக்கு முதலில் நன்றியை உரித்தாக்கி, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கூட்ட அனுசரணையாளருக்கும் நன்றி கூறினார் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம்.
சகோ.தோல்சாப் முஹம்மது லெப்பையின் இறைவேண்டலுக்குப் பின் கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
செய்திப் பிரிவு,
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
21.09.2019.
|