சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தன் 73ஆவது செயற்குழுக் கூட்டம் 05.07.2019. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று முடிந்துள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 73-வது செயற்குழு கூட்டம் கடந்த 05.07.2019 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் மன்றத்தின் முன்னாள் தலைவர் சகோ. முஹம்மது நூஹு அவர்கள் இல்லத்தில் சகோ. SMA சதக்கத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் SMA சதக்கத்துல்லாஹ் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபில் சதக் ஷமீல் அவர்கள் இறைமறை ஓதிக் கூட்டத்தை துவக்கி வைத்தார். கூட்டத்தைத் தலைமையேற்று நடாத்தித் தந்த சகோதரர் SMA சதக்கத்துல்லாஹ் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது.
இரங்கல்:
மன்ற செயற்குழு உறுப்பினர் சகோ. சதக் ஷமீல் அவர்களின் பெரியப்பா, நெல்லையில் பல்லாண்டு காலமாக மருத்துவ சேவையாற்றி வந்த காயல்பட்டணத்தைச் சார்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் M.A. முஹம்மது தம்பி (எ) தம்பி டாக்டர், மன்ற செயற்குழு உறுப்பினர் சகோ. KSM அப்துல் காதர் அவர்களின் தந்தை ஜனாப் செய்து இஸ்மாயீல், மன்ற செயற்குழு உறுப்பினர் சகோ. இப்ராஹீம் பைசல் அவர்களின் தாய்மாமா ஜனாப் பிரபு செய்து அஹமது கபீர் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பாவங்களை மன்னித்து அவர்களது அமல்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஜன்னத்துல் ஃபிரதெளஸை வழங்கிடுவானாக. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அல்லாஹ் அவர்களுக்குப் பொறுமையைத் தந்தருள பிரார்த்தனை செய்யப்பட்டது.
ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:
நடப்பு ஆண்டு (2019 – 1440H) ரமலான் உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நல உதவிகள் பற்றி சகோ. சூஃபி அவர்கள் கூறுகையில், கடந்த ஏழு வருடங்களாக புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டும் (2019) ரமழான் நோன்பை முன்னிட்டு ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் 363 ஏழைக் குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட (30 வகையான) நோன்பு கால அத்தியாவசிய உணவுப் பொருட்களும், கூடுதல் திட்டமாக இந்த அனைத்து குடும்பத்தினரும் பெருநாளன்று இரவு ஒரு உரித்த நாட்டுக் கோழி பெற்றுக் கொள்ளும் வகையில் அதற்கான டோக்கனும் ரமலான் நோன்புக்கு முந்தைய தினங்களில் பயனாளிகளின் இல்லம் சென்று வழங்கி முடிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!
இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சகோதரர் SB முஹம்மது முஹைதீன் மற்றும் சகோதரர் அபூபக்கர் சித்தீக், மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் ஏ.தர்வேஷ் முஹம்மது மற்றும் சோனா எம்.எம்.டி.ஷாஹுல் ஹமீது ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃ அகாடமி:
“இக்ராஃ அகாடமி” பற்றிய அறிமுகத்தைச் சகோதரர் கூஸ் முஹம்மது அபூபக்கர் அவர்கள் வழங்கினார்கள். நகரின் கல்வி சார்ந்த நல உதவிகளையும், கல்விக் கடன்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வரும் இக்ராஃ அமைப்பு, தமது சேவையை விரிவு படுத்தும் நோக்கில், நமதூர் அரசு பொது நூலகத்துடன் இணைந்து, 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகள் சார்ந்த தேர்வுகளில் (TNPSC) பயிற்சி அளிக்கும் முகமாக “இக்ராஃ அகாடமி” எனும் பெயரில் துவங்கி, அரசு தேர்வுகள் எழுதுவதற்கான பயிற்சியினை ஆரம்பித்துள்ளனர். இந்த பயிற்சி வகுப்பு, தேர்ந்த வல்லுநர்களால், மிகச்சிறப்பான முறையில் நடத்தப்படுகின்றது.
சமூக நல்லிணக்கத்தின் அடிப்படையில், இந்த பயிற்சி வகுப்பு எல்லா சமுதாயத்தினரும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புக்கான செலவுகளை காயல் நல மன்றங்கள் மூலம் நன்கொடையாகப் பெற இக்ராஃ அமைப்பினால் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எமது மன்றம் சார்பாக நிதி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டது.
Kayal Schools Welfare Projects:
உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects மூலம் கடந்த காலங்களில் பல நல உதவிகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, கடந்த செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நகரில் இயங்கி வரும் ரஹ்மானியா மழலையர் பள்ளி மாணவர்கள் சிலருக்கு பள்ளி சீருடை வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.
பார்வையாளர்கள் கருத்து:
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட மன்ற செயற்குழு உறுப்பினர் சகோ SB முஹைதீன் அவர்களுடைய மாமனார் சகோ. டூட்டி ஷாகுல் ஹமீத், சகோ. செய்து முஹம்மது, சகோ. ஸாலிஹ் ஹாஜியார் ஆகியோர் தம்மை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தங்களின் கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
இக்கூட்டம் நடத்த சகோ. முஹம்மது நூஹு அவர்கள் இடம் வழங்கினார். சகோ. நயீமுல்லாஹ், சகோ. SAC ஸாலிஹ், சகோ. வாவு கிதர் முஹம்மது, சகோ. SB முஹைதீன், சகோ. PSJ ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து, மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இறுதியாக சகோதரர் நுஸ்கி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில, துஆவோடு இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
புகைப்படம்:
ஊடகக் குழு, RKWA.
|