ஹாங்காங்கில் காயலர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 11ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 29-06-2019 அன்று ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் அதன் செயலாளர் பிரபு ஷுஐப் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் 11ம் ஆண்டு
பொதுக்குழுக்கூட்டம் 29-06-2019 சனிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின்
ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஜனாப் ஏ.எஸ். ஜமால், ஜனாப் எஸ். பாக்கர் சாஹிப், ஜனாப் அரபி ஹாஜா, மற்றும்
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.கே.முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் தலைமை வகித்தனர். ஜனாப் பி.எஸ்.ஏ. செய்யது அஹமது மற்றும் ஜனாப் எம்.எஸ்.சலாஹுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்ட நுழைவாயிலில் உறுப்பினர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.
கிராஅத் மற்றும் வரவேற்புறை :
ஹாஃபிழ் கே.எம்.ஹெச். அப்துல் வதூத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளை துவக்கி
வைத்தார். அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஐ. சவூத் கூட்ட நிகழ்வுகளை
நெறிப்படுத்தி வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பேரவையின் கடந்த பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேரவை செயலாளர் பிரபு ஷுஐப் பேசினார்.
வரவு – செலவு கணக்கறிக்கை :
அதனைத் தொடர்ந்து நடப்பு பருவத்திற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை பேரவை
பொருளாளர் எல்.ஏ.கே. புஹாரி சமர்ப்பிக்க கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
ஆண்டறிக்கை :-
பின்னர் பேரவையின் 11ஆம் ஆண்டறிக்கையை, பேரவைத் தலைவர் எஸ்.எம்.கே.
முஹம்மது இஸ்மாயில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலிருந்து சில முக்கிய அம்சங்கள் :-
• தொழில் செய்திட திறமையிருந்தும் பொருளாதார நலிவு காரணமாக தொழில் செய்ய
இயலாத நமதூர் மக்களிடமிருந்து தொழிற்கருவிகள் உதவி கோரி பெறப்பட்ட மனுக்கள்
பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களின் உண்மை நிலை குறித்து ஆய்ந்தறியப்பட்டு,
நிதியாதாரம் ஒதுக்கி தொழிற்கருவிகளும், உபகரணங்களும் வழங்கப்பட இருக்கின்றன.
• மருத்துவ உதவி கூட்டமைப்பான ஷிஃபா அமைப்பிற்கு வருடாந்திர நிர்வாகச்
செலவினங்களுக்கு தலா ரூ20,000 வழங்கியது. ஷிஃபாவின் மருத்துவ உதவி
விண்ணப்பங்களுக்கு ரூ1,60,000 உதவித் தொகை வழங்கியது.
• நமதூர் மக்களுக்காக கல்வி பணியாற்றி வரும் இக்ரா கல்வி சங்கத்திற்கு வருடாந்திர
நிர்வாகச் செலவினங்களுக்கு தலா ரூ30,000 வழங்கியது. இக்ராஃ கல்விச் சங்கத்தின்
2018-19 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ50,000 வழங்கியது.
• தாய்லாந்து காயல் நல மன்றத்தின் முயற்சியில் நமதூர் இறை இல்லங்களில்
பணியாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு சிறப்பு நிதி உதவியளிப்பு ரமழான்
மற்றும் துல்ஹஜ் மாதங்களில் நடந்துவருகிறது. கடந்த ஆண்டு இத்திட்டத்தில் நமது
பேரவையும் பங்கெடுத்து அதற்காக ரூ 50,000 நிதி வழங்கியது.
• நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடுவதற்காக தேவையான நிதியாதாரத்தைத்
திரட்டிட துவங்கப்பட்ட உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டத்தின் அனைத்து
உறுப்பினர்களும் இனைந்து உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
• கடந்த வருடம் தமிழக டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு, நமதூர் சார்பாக காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிவாரண
உதவிகளை கூட்டாக வழங்கிட ஏற்பாடு செய்து நமது மன்றத்திற்கு அனுப்பிய
கோரிக்கையை ஏற்று, காலசூழலின் அவசரம் கருதி நமது மன்ற உறுப்பினர்களிடமிருந்து துரிதமாக ரூபாய் 3 லட்சம் வசூல் செய்து ஐக்கிய பேரவையினரிடம் வழங்கியது. கஜா புயலால் அல்லல்பட்ட மக்களுக்கு தயங்காமல் உதவி கரம் நீட்டிய உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
தலைவர் உரையை தொடர்ந்து, பேரவையின் தையல் தொழில் அமைப்பு KUF HONG KONG GARMENTS & TAILORINGயின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை பேரவை
முன்னாள் தலைவர் ஹாஃபிழ் ஏ. எல். இர்ஷாத் அலி சமர்ப்பித்தார். பின்னர், பேரவையின்
தொழில் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், அதன் எதிர்கால திட்டங்கள், வரவு-செலவு
கணக்கறிக்கை மற்றும் உள்ளூர் நிர்வாக மாற்றம் குறித்தும் உறுப்பினர்கள் கேள்விகள்
எழுப்ப, அதற்கான விளக்கங்களை நிர்வாகிகள் அளித்தனர்.
அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம். சுல்தான் நன்றி கூறினார்.
நிறைவாக கவ்லூன் மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாஃபிழ் எம்.ஏ.கே. ஷூஅய்ப் நூஹ் ஆலிம்
மஹ்ழரி அவர்களின் இறை வேண்டுதலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.
கூட்டத்தில் பேரவையின் உறுப்பினர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். பங்கேற்ற
அனைவருக்கும் சுவையான பரோட்டா, இடியாப்பம், கோழிக்கறி மற்றும் சவ்வரிசி வழங்கி
உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|