காயல்பட்டினத்தில், சமூகப் பாதுகாப்புக்கும் – அதைக் கருத்திற்கொண்டு செயல்படும் சமூக ஆர்வலர்களது பாதுகாப்புக்கும் சமூக விரோதிகளால் அண்மைக் காலமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் சாலையில் தறிகெட்டு வாகனத்தை இயக்கிச் சென்றவரைச் சுட்டிக்காட்டிக் கேட்டதற்காக சமூக ஆர்வலர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால், தவறைக் கண்டாலும் கண்டுங்காணாமல் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு சமூக ஆர்வலர்கள் உள்ளாகியுள்ளனர்.
இந்நிலை இனியும் நகரில் நீடிக்கக் கூடாது என்று கருதி, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளிவாசலுக்குட்பட்ட இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சங்கத்தில் சங்க உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த நிகழ்வறிக்கை:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.
காயல்பட்டணம் இளைஞர் ஐக்கிய முன்னணியில், ஜனாப் S.E. முஹம்மது அலி சாஹிப் அவர்களின் தலைமையில், 18.11.2019 திங்கள் கிழமை இரவு 8 மணியளவில் நடைபெற்ற, குருவித்துறைப் பள்ளி முஹல்லாவாசிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1. காயல்பட்டணம் சொளுக்கார் தெருவில், 14.11.2019 வியாழக்கிழமை இரவில், அத்தெருவில் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒருவராலும், அவரது சகாக்களாலும், சொளுக்கு S.M. அப்துல் காதர் அவர்கள் தாக்கப்பட்ட விரும்பத்தகாத சம்பவத்தை அறிந்து இக்கூட்டம் தனது வருத்தத்தை உரித்தாக்கிக் கொள்கிறது.
2. இச்சம்பவம் நடந்த அன்று இரவில், இப்பகுதிக்கு அறிமுகம் இல்லாத சிலர், பெண்கள் செல்லும் பாதையில் நின்றுக்கொண்டிருந்ததால் சமூக அக்கறையுடன் சொளுக்கு S.M. அப்துல் காதர் அவர்களை விசாரித்துள்ளார். இதைக்கூட பொறுத்துக் கொள்ளமுடியாமல், விசாரித்தவர் தாக்கப்பட்ட இச்சம்பவத்தை அறிந்து இக்கூட்டம் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் உரித்தாக்கிக் கொள்கிறது.
3. விரும்பத்தகாத இச்சம்பவத்தைத் தொடர்ந்து உரியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தாக்கப்பட்டவரும், அவரது குடும்பத்தினரும் காவல்துறையை அணுகி புகார் அளித்திருப்பதையும், காவல்துறையும் இது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதையும் இக்கூட்டம் வரவேற்கிறது.
4. காயல்பட்டணம் குருவித்துறைப் பள்ளி முஹல்லாவில் பொது அமைதி மற்றும் சுமூகச் சூழ்நிலை தொடர்ந்து நிலவ, பள்ளி நிர்வாகம் மற்றும் ஜமாஅத்தினர் இணைந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பேணுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
5. சொளுக்கார் தெருவில் 14.11.2019 அன்று நடைபெற்ற விரும்பத்தகாத இச்செயலுக்கு காரணமானோர்களை தனது வாடகை வீட்டில் இருந்து காலிசெய்து, நல்ல சூழ்நிலை உருவாக உதவிடுமாறு வீட்டின் உரிமையாளரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
6. குருவித்துறைப் பள்ளி முஹல்லாப் பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்குச் சொந்தமான வீடுகளை வாடகைக்கு விடும்போது , வாடகைதாரர்கள் வெளியூர்வாசிகளாக இருந்தால், அவர்களின் சொந்த ஊர் ஜமாஅத்தின் நற்சான்று கடிதத்தையும் , வாடகைதாரர்களின் அரசு ஆவண நகல்களையும் பெற்று விசாரித்த பின்பே, வாடகைக்கு வீடுகளை வழங்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
7. வாடகைதாரர்களிடமிருந்து பெறப்படும் ஆவணங்களின் நகல்களை, பள்ளி நிர்வாகத்தினரிடம் வீட்டின் உரிமையாளர்கள் ஒப்படைக்கும்படியும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வூரில் வாடகை வீடுகளில் வசிக்க விரும்பும் வெளியூர்வாசிகளில் நமக்கு அடையாளம் தெரியாதவர்களை அறிந்துகொள்ளவும், வாடகை வீட்டில் குடியிருப்போருடன் சுமூக உறவைப் பேணவும் முற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உதவிடும் என இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.
8. குருவித்துறைப் பள்ளி முஹல்லாவாசிகளுக்கு இக்கூட்டம் முன்வைத்துள்ள முற்கண்ட வேண்டுகோள் தீர்மானங்களை, நகரின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் பொது வேண்டுகோளாக முன்வைக்க காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு இக்கூட்டம் பரிந்துரை செய்கிறது.
9. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயலாக்கம்பெறும் முயற்சிகளை மேற்கொள்ள, கீழ்கண்ட பத்து பேர் கொண்ட குழுவினர் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1. மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் S.H. பாதுல் அஸ்ஹாப் ஆலிம் அவர்கள்,
2. மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.A. ஹபீபுரஹ்மான் ஆலிம் அவர்கள்,
3. மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.S. காஜா முயீனுத்தீன் ஆலிம் அவர்கள்,
4. அல்ஹாஜ் குளம் M.I. மூஸா நெய்னா அவர்கள்,
5. ஜனாப். M.J. செய்யது இப்ராஹீம் அவர்கள்,
6. ஜனாப். மன்னர் A.R. பாதுல் அஸ்ஹப் அவர்கள்,
7. மௌலவி S.Y.S. செய்யது முஹம்மது சாஹிப் ஆலிம் அவர்கள்,
8. அல்ஹாஜ் சொளுக்கு A.J. முஹியத்தீன் அவர்கள்,
9. ஜனாப், M.A.K. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள்,
10, ஜனாப். M.M.S. அபூபக்கர் அவர்கள்,
இவண்,
செயலாளர்,
இளைஞர் ஐக்கிய முன்னணி,
காயல்பட்டணம்.
19.11.2019.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சொளுக்கு A.J.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
|