காயல்பட்டினம் உட்பட – தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிக் குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து, அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் – அதன் சமூக ஊடகக் குழுமமான “நடப்பது என்ன?” குழுமம் மூலம் “NE ஒருங்கிணைந்த நிவாரணம்” எனும் தலைப்பில் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொதுநல அமைப்பினர், தன்னார்வலர்களை இணைத்து, அனைவரின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக, நேற்று (டிசம்பர் 01 ஞாயிற்றுக்கிழமை) “நடப்பது என்ன?” நிர்வாகிகளும், தன்னார்வலர்களும் இணைந்து காயல்பட்டினம் காட்டு தைக்கா தெரு தருவை, புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகளைப் பகிர்ந்து வந்தனர்.
இன்று 13.00 மணியளவில் இரண்டாம் கட்ட உணவுப் பகிர்வு மழைநீர்த் தேக்கத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் சுலைமான் நகர் (மாட்டுக்குளம்), சல்லித்திரடு பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவுப் பொதிகள் பகிரப்பட்டுள்ளன.
|