கடந்த ஒன்றரை வருடத்தில் 5 காயலர்கள் உள்ளிட்ட எழுவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளதென, 08.05.2011 அன்று நடைபெற்ற பெங்களூரு காயல் நல மன்ற பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது. புதிய இலச்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் 08.05.2011 அன்று, பெங்களூரு லால்பாக் மைதான புல்வெளியில் சிறப்புற நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்!
கூட்ட நிகழ்வுகள்:
மன்ற உறுப்பினர் மக்கீ இஸ்மாஈல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற துணைச் செயலாளர் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அவை செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதிய இலச்சினை அறிமுகம்:
கூட்டத்தில், மன்றத்திற்கான புதிய இலச்சினை வெளியிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கூட்டத் தலைவர் மக்கீ இஸ்மாஈல் அதனை வெளியிட, மன்றத் தலைவர் அப்துர்ரஹீம் அதனைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மன்ற இலச்சியுடன் வடிவமைத்து உருவாக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டது. உறுப்பினர்கள் இணைந்து கேக் வெட்டி, சுவைத்து மகிழ்ந்தனர்.
அதனையடுத்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இலச்சினை உருவாக்கியவருக்கு நன்றி:
எம் மன்றத்திற்கு புதிய இலச்சினையை தனது படைப்புத்திறன் மூலம் அற்புதமாக உருவாக்கித் தந்த மன்ற உறுப்பினர் ஷிஹாபுத்தீனுக்கு மன்றம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டிற்கு வாழ்த்து:
வரும் ஜூலை மாதம் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு சிறப்புற நடந்தேற மன்றம் வாழ்த்துகிறது. மேலும், மாநாட்டு வேலைகளை இணநைது செய்திட மன்றத்தின சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 3 - உம்றா, ஹஜ் செல்லும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து:
புனித கஃபத்துல்லாஹ்விற்கு உம்றா சென்றுள்ள மன்ற உறுப்பினர் முஹம்மத் இப்றாஹீம் மற்றும் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள மன்ற உறுப்பினர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் எம் மன்றம் மனதார வாழ்த்துவதோடு, அவர்களின் நற்கருமங்கள் அனைத்தும் இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 4 - CFFCக்கு நிதி:
காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக குழுவான Cancer Fact Finding Committee - CFFCக்கு மன்றம் சார்பில் உறுப்பினர்களிடமிருந்து நிதி வசூலித்து அளிப்பதென முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 5 - எழுவருக்கு வேலைவாய்ப்பு:
கடந்த ஒன்றரை வருடத்தில், மன்றத்தின் சார்பில் 5 காயலர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மன்றத்தின் மூலம் பெங்களூருவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது. இது விஷயத்தில் உறுதுணை புரிந்த மன்ற உறுப்பினர்கள் ஜெய்த் நூருத்தீன், ஜபரூத், ஜாகிர் ஹுஸைன் ஆகியோருக்கு மன்றம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
வேலை தேடும் காயலர்களுக்கு அவர்களின் படிப்புக்கேற்ற வேலையைப் பெற்றுக்கொடுப்பது என்ற மன்றத்தின் முக்கிய குறிக்கோளை நோக்கி தொடர்ந்து பயணிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 6 - மன்ற பிரதிநிதிகள்:
மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியாக காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர் அஹ்மத் சுலைமான், சென்னை பிரதிநிதியாக பி.எஸ்.எல்.முத்து முஹம்மத் (இ.டி.ஏ. ஸ்டார் - சென்னை) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். அவர்களின் பணிகள் வெற்றிபெற மன்றம் மனதார வாழ்த்துகிறது.
தீர்மானம் 7 - நேர்முகத் தேர்வுக்கு வழிகாட்டும் கையேடு:
பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக நடத்தப்படும் நேர்முகத் தேர்வுகளை எப்படி சந்திப்பது என்பது பற்றிய விபரங்கள் அடங்கிய கையேட்டுப் பிரதி ஒன்றை தயாரிப்பதென்ற மன்றத்தின் குறிக்கோளை 6 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் ஆயத்தம் செய்து நகர மக்களிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 8 - அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழு குறித்த தேதி மற்றும் இடம் உறுப்பினர்களுக்கு விரைவில் அறியத்தரப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், உறுப்பினர்கள் தமது மூன்று மாத சந்தா தொகைகளை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. சிற்றுண்டி பதார்த்தங்களை ஆயத்தம் செய்த மன்ற உறுப்பினர்கள் எஸ்.ஓ.எச்.குலாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர், கே.கே.எஸ்.ஸாலிஹ் ஆகியோருக்கு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
இறுதியாக, வாவு முஹம்மத் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வல்ல அல்லாஹ், நகர்நலன் கருதி நாம் மேற்கொள்ளும் சிறு முயற்சிகளுக்கும் கூட நிறைவான நற்பலன்களைத் தந்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |