காயல்பட்டினம் நகரின் மாசுக்கட்டுப்பாடு குறித்து குவைத் காயல் நல மன்ற பொதுக்குழுவில் நீண்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளது. அதன் முடிவில், நகர பொதுநல அமைப்புகளுக்கு அம்மன்றத்தின் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து குவைத் காயல் நல மன்றம் சார்பில் அதன் செயலாளர் எல்.டி.அஹ்மத் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது குவைத் காயல் நல மன்ற பொதுக்குழுக்கூட்டம் 13.05.2011 அன்று குவைத் ஃபஹாஹீல்Fahaheel கடற்கரையில் நடைபெற்றது. மன்றத்தலைவர் எஸ்.எம்.ஹசன் மவ்லானா தலைமை தாங்கினார். மாணவர் எம்.ஏ.கே.ஷேக் நூர்தீன் கிராத் ஓதினார்.
நகர மாசுக்கட்டுப்பாடு குறித்து விவாதம்:
பின்னர், நகரின் மாசுக்கட்டுப்பாடு மற்றும் புற்றுநோய் பரவல் தடுப்பு முயற்சிகள் குறித்து உறுப்பினர்கள் நீண்ட நேரம் விவாதித்தனர்.
CFFC சார்பில் அனுப்பித் தரப்பட்டுள்ள அறிக்கையை இந்திய தூதரகத்தில் சமர்ப்பிப்பதற்காக மன்ற நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து மன்றத் தலைவர் விளக்கிப் பேசினார். இதுவரை இருந்த இந்திய தூதர் மாற்றலாகிச் சென்றுவிட்டதால், புதிய தூதர் நியமிக்கப்பட்டதும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.
இது ஒருபுறமிருக்க, இந்திய நிபுணர்கள் சிலரிடம் இதுகுறித்து கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்திய தலைநகர் புதுடில்லியிலும், தமிழ்நாட்டிலும் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் இந்த ஆய்வறிக்கையை அனுப்பி வைப்பது மிகுந்த பலனைத் தரும் என்றும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனில், நீதிமன்றத்தை அனுகலாம் எனவும் அப்போது அந்நிபுணர்கள் தெரிவித்ததாக மன்றத் தலைவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இத்தகவல்கள் குறித்து CFFCக்கும், உலக காயல் நல மன்றங்களுக்கும் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், இதுபோன்ற விவகாரங்களில் தீவிரமாக ஈடுபடும் வைகோ மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உதவிகளையும் நாடினால் பயன் தரும் எனவும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மற்றும் மக்கள் சேவாக்கரங்கள் அமைப்புகளையும் இது விஷயத்தில் ஒருங்கிணைத்து செயல்படலாம் எனவும் உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்களை CFFC குழுமத்திற்கு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மன்ற உறுப்பினரின் தாயார் மறைவுக்கு இரங்கல்:
மன்ற உறுப்பினர் கத்தீப் மொகுதூமின் தாயார்
காலமானதற்கு இரங்கல் தெரிவித்தும், அன்னாரின் மறுமை வாழ்க்கை வெற்றி பெற துஆ செய்யப்பட்டது.
தீர்மானம் 2 - சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு:
நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்றுள்ள மாணவர் எஸ்.டி.அஃப்ரஸ் அஹ்மத், மாணவி சொளுக்கு எம்.ஏ.சி.உம்மு ஸரீஹா மற்றும் உளவியல் பாடத்தில் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்ற மாணவி ஆர்.முத்துமாரி ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - நலத்திட்ட உதவி:
எம்.பி.ஏ. படித்துவரும் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவி ஒருவருக்கு, அவரது இரண்டாவது செமஸ்டர் பருவத்திற்கு வழங்கியது போல மூன்றாவது செமஸ்டருக்கும் ரூ.5,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - பள்ளிச்சீருடை / பாடக்குறிப்பேடு ஒருங்கிணைந்த இலவச வினியோகத்திற்கு உதவி:
நமதூரில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு பள்ளிச்சீருடைகள், பாடக்குறிப்பேடுகளை இலவசமாக வழங்குவதற்காக, வழமைப்போல் இந்த வருடமும் Rs 5,000/- இக்ராஃவிற்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - இந்திய தூதரகத்தில் CFFC ஆய்வறிக்கை சமர்ப்பணம்:
நகரில் புற்றுநோய் பரவல் குறித்த காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக அமைப்பான Cancer Fact Finding Committee - CFFC சார்பில் அனுப்பித் தரப்பட்டுள்ள ஆய்வறிக்கையை, மாற்றலாகிச் சென்றுள்ள இந்திய தூதருக்குப் பகரமாக புதிய தூதர் நியமிக்கப்பட்டதும், இந்திய தூதரகத்தில் சமர்ப்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்ற உறுப்பினர் ஹாமித் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இரவு உணவுக்குப் பின் கூட்டம் முடிவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, குவைத் காயல் நல மன்ற செயலாளர் எல்.டி.அஹ்மத் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |