புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று (மே 16) மதியம் 12.15 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழக விழா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மதியம் 12.10 மணிக்கு விழா அரங்குக்கு ஜெயலலிதா வந்தார். அவரை தலைமை செயலாளர் மாலதி பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா பிறகு விழா மேடைக்கு சென்று அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சராக பதவி ஏற்க இருந்தவர்கள் மேடைக்கு சென்று தங்களுக்கு உரிய இருக்கைகளில் அமர்ந்தனர்.
12.40 மணிக்கு கவர்னர் பர்னாலா வந்தார். அவரை ஜெயலலிதா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். கவர்னர் பர்னாலாவுக்கு புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்க இருந்த 33 பேரையும் ஜெயலலிதா அறிமுகம் செய்தார். இதையடுத்து பதவி ஏற்பு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
அதன் பிறகு முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள வருமாறு ஜெயலலிதாவை தலைமை செயலாளர் மாலதி அழைத்தார். இதை தொடர்ந்து ஜெயலலிதா, முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் செய்து வைத்தார்.
அதன் பிறகு 12.52 மணிக்கு அமைச்சர்கள் பதவி ஏற்றனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராக வந்து பதவி ஏற்றுச் சென்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விசுவநாதன், கே.பி.முனுசாமி, சி.சண்முகவேலு, ஆர். வைத்திலிங்கம், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. சொ.கருப்பசாமி, பி.பழனியப்பன், சி.வி.சண்முகம், செல்லூர் கே.ராஜு, கே.டி.பச்சமால், எடிப்பாடி கே.பழனிச்சாமி, எஸ்.பி.சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம், எஸ்.பி. வேலுமணி. கே.டி.எம்.சின்னைய்யா, எம்.சி.சம்பத், பி.தங்கமணி, ஜி.செந்தமிழன், எஸ்.கோகுலஇந்தி, செல்வி ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.பி.உதயகுமார், என்.சுப்பிரமணியன், வி.செந்தில் பாலாஜி, என்.மரியம் பிச்சை. கே.ஏ.ஜெயபால், இ.சுப்பையா, புத்திசந்திரன், எஸ்.டி.செல்லபாண்டியன், வி.எஸ்.விஜய், என்.ஆர்.சிவபதி ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
பதவி ஏற்று முடித்ததும் அவர்கள் கவர்னர் பர்னாலாவுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் வணக்கம் தெரிவித்தனர். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் பர்னாலாவுடன், புதிய அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க. தோழமை கட்சிகளின் தலைவர்களான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு தேசியச் செயலாளர் ஏ.பி. பரதன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு, ஜி.ராம கிருஷ்ணன், எழுத்தாளர் சோ ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
சுமார் 12.45 மணிக்கு தொடங்கிய பதவியேற்பு நிகழ்ச்சி 1.45 மணிக்கு முடிவடைந்தது.
தகவல்:
www.chennaionline.com
|