தமிழக முதலமைச்சராக நேற்று (மே 16) பதவியேற்றுக்கொண்ட ஜெ.ஜெயலலிதாவின் முதல் நாள் செயல்பாடு குறித்து தமிழக செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக முதலமைச்சராக நேற்று (மே 16) பதவியேற்றுக்கொண்ட
ஜெ.ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்திலுள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியை தொடங்கினார்.
ஜெ.ஜெயலலிதா தமது முதற்பணியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டதுடன், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறிதிகளை நிறைவேற்றவும், அரசின் சிறப்பு திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் "சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை" எனும் பெயரில் புதிய துறை ஒன்றை தொடங்கவும் உத்தரவு பிறப்பித்து கையொப்பம் இட்டார்.
ஜெ.ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட திட்டங்கள் வருமாறு:-
1. படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாய் நிதி உதவியோடு, மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும் எனும் வாக்குறிதியை நிறைவேற்றும் வகையில் ஆணை பிறப்பித்து அதற்குரிய கோப்பில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கையொப்பத்தை இட்டார்.
2. இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டு கோப்பில் கையொப்பமிட்டார்.
3. முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு மேற்காணும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பலன் பெரும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆணையிட்டு அதற்குரிய கோப்பில் கையொப்பமிட்டார்.
4. பொது விநியோக திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கிடவும் முதலமைச்சர் ஆணைப் பிறப்பித்து கையொப்பம் இட்டார்.
5. தமிழகத்தின் கடலோர மீன் வளத்தைப் பாதுக்காக்க வேண்டி ஒவ்வோர் ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலக்கட்டத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்.
6. அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளை பேணிப்பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்பில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கையொப்பமிட்டார்.
7. அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறிதிகளை நிறைவேற்றவும், அதற்க்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்பு திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றைத் தொடங்க தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையொப்பமிட்டார். இத்துறை "சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை" (Department of Special Programme Implementation) எனும் பெயரில் அழைக்கப்படும். இத்துறைக்கான தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறிதிகள் அனைத்தையும் விரைந்து செம்மையோடு நிறைவேற்ற வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உறுதிப்பாட்டை (commitment) எடுத்துக்காட்டும் வகையில், முதலமைச்சராகப் பதவியேற்றதும் முதற்பணியாக மேற்காணும் திட்டங்களை செயல்படுத்த ஆணையிட்டு அதற்குரிய கோப்புகளில் ஜெ.ஜெயலலிதா கையொப்பமிட்டார்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|