ஹாங்காங் நாட்டில், காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் கடந்த 15ஆம் தேதியன்று “ஒருநாள் இன்பச் சிற்றுலா” சென்று வந்துள்ளனர்.
இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் கடந்த 15.05.2011 அன்று, ஹாங்காங்கிலுள்ள இயற்கை எழில்கொஞ்சி விளையாடும் காம் டின் கன்ட்ரி க்ளப் புல்வெளி மைதானத்தில் “ஒருநாள் இன்பச் சிற்றுலா”விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
80 பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட சிற்றுலாக்குழுவினர் அன்று காலை 09.30 மணிக்கு புறப்பட்டனர்.
சிற்றுலா மைதானத்தை அடைந்ததும், அங்குள்ள புல்வெளியில் குழந்தைகள் ஓடியாடியும், மிதிவண்டியை ஓட்டியவாறும் விளையாடத் துவங்கிவிட்டனர். இளைஞர்கள் க்ரிக்கெட் மற்றும் இதர விளையாட்டுக்களை உற்சாகத்துடன் விளையாடத் துவங்கினர்.
தேர்தல் முடிவுகள் வந்து இரண்டாவது தினமாதலால், பேரவையின் மூத்த ஆண் உறுப்பினர்கள் அரசியல் விவாதத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
மகளிர், அங்கிருந்த விவசாயப் பண்ணைக்குள் சென்று, அங்கு செடிகளில் முளைத்திருந்த தக்காளிப் பழங்களை கைகொண்டு பறித்து, பறித்த எடைக்கேற்ப கட்டணம் செலுத்தி எடுத்துச் சென்றனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இதர காய்கறிகளையும் அவர்கள் ஆர்வமுடன் கொள்முதல் செய்தனர்.
இவ்வாறாக விளையாட்டிலும், இதர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த அனைவரும், மைதானத்திலுள்ள கூரை வேயப்பட்ட ஓய்விடத்தில் மதிய உணவிற்காக ஒன்றுகூடினர். பின்னர், அவரவர் இல்லங்களிலிருந்து ஆயத்தம் செய்து கொண்டு வந்திருந்த பல்வகை உணவுப் பதார்த்தங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர். மதிய உணவுக்குப் பின் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இவ்வாறாக இன்பத்துடன் பொழுதைக் கழித்து, மாலை 05.00 மணிக்கு சிற்றுலாவை முடித்தவாறு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இவ்வாறு “ஒருநாள் இன்பச் சிற்றுலா” குறித்து காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் படங்கள்:
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் சார்பாக,
M.செய்யித் அஹ்மத்,
கவ்லூன், ஹாங்காங். |