தூத்துக்குடி மாவட்டத்தில் 60 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 6 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 72 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகபட்சமாக திருச்செந்தூர் தொகுதியில் 16 பேர் போட்டியிட்டனர்.
தேர்தலில் போட்டியிட்ட 72 வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே தங்கள் டெபாசிட் தொகையைப் பெற்றுள்ளனர். மீதமுள்ள 60 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர். டெபாசிட் தொகையைப் பெறவேண்டும் என்றால் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6இல் ஒரு பகுதியைப் பெறவேண்டும்.
அவ்வாறு பார்த்தால் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் 2ஆம் இடத்தைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டுமே தங்கள் டெபாசிட் தொகையைப் பெற்றுள்ளனர். மற்ற வேட்பாளர்கள் யாருக்கும் டெபாசிட் கிடைக்கவில்லை. 6 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
விளாத்திகுளம் தொகுதியில் 9 வேட்பாளர்கள், தூத்துக்குடி தொகுதியில் 12 வேட்பாளர்கள், திருச்செந்தூர் தொகுதியில் 14 வேட்பாளர்கள், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 5 வேட்பாளர்கள், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 8 வேட்பாளர்கள், கோவில்பட்டி தொகுதியில் 12 வேட்பாளர்கள் என மொத்தம் 60 வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:
தினமணி (15.05.2011) |