நடைபெற்று முடிந்துள்ள 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் சாதனை புரிந்துள்ள மாணவ-மாணவியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், நலத்திட்ட உதவிகளை அறிவித்தும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நடப்பு பருவத்திற்கான 4ஆவது செயற்குழுக் கூட்டம் 11.05.2011 அன்று, ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ இல்லத்தில் நடைபெற்றது.
பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜனாப் ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பேரவை தலைவர் ஜனாப் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர் தலைமையுரையாற்றிய கூட்டத் தலைவர், இளைய தலைமுறையின் நிர்வாகத்தின் கீழ் பேரவையின் செயல்பாடுகள் துடிப்புமிக்கதாக உள்ளன என்று புகழ்ந்துரைத்தார். காயல்பட்டினத்திலுள்ள பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலிமையான முடிவுகள் மேற்கொள்ளப்படும் பொருட்டு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், நகரின் பொதுநல அமைப்புகளுடன் கலந்தாலோசித்து செயல்திட்டம் வகுத்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
செயற்குழு உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இக்ராஃ நிர்வாகச் செலவினங்களுக்கு பங்களிப்பு:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பாக செயல்பட்டு வரும் காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.15,000 நிதி வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - கல்வி உதவித்தொகை அனுசரணை:
உலக காயல் நல மன்றங்களின் ஒத்துழைப்புடன் இக்ராஃ செயல்படுத்தி வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில் 3 மாணவர்களுக்கு பேரவை உறுப்பினர்கள் மூவரின் கல்வி உதவித்தொகை அனுசரணைத் தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டதுடன், இதர உறுப்பினர்களும் இவ்வுயரிய செயல்திட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - பள்ளிச்சீருடை / பாடக்குறிப்பேடு ஒருங்கிணைந்த இலவச வினியோகம்:
முறைகேடுகளைத் தவிர்த்திடும் பொருட்டு, நகரிலுள்ள ஏழை மாணவ-மாணவியருக்காக வழங்கப்படும் - இக்ராஃ தலைமையில் நகரின் 7 பொதுநல அமைப்புகள் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிச்சீருடை / பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு வாயிலாக வினியோகம் செய்திட ரூ.25,000 தொகை ஒதுக்கீடு செய்வதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4 - இந்திய தூதரகத்தில் CFFC ஆய்வறிக்கை சமர்ப்பணம்:
காயல்பட்டின் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக அமைப்பான, Cancer Fact Finding Committee - CFFC மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கையை, அனைத்து காயலர்களின் கைச்சான்றையும் பெற்று, ஹாங்காங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் விரைவில் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது. (பேரவை சார்பில் 15.05.2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒருநாள் இன்பச் சிற்றுலா” நிகழ்வுகளின்போதே காயலர்களின் கைச்சான்றுகளைப் பெறும் நிகழ்வு துவக்கப்பட்டுவிட்டதும், இன்னும் அதிகளவில் கைச்சான்றுகள் பெறப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.)
தீர்மானம் 5 - CFFCக்கு நிதியுதவி:
காயல்பட்டின் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக அமைப்பான, Cancer Fact Finding Committee - CFFC மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகளுக்காக அக்குழுவினரை பேரவை மனதாரப் பாராட்டுவதோடு, நகரில் புற்றுநோய் தாக்குதலை முற்றிலும் ஒழித்திடுவதற்கான இந்த முயற்சிக்காக, கத்தர் காயல் நல மன்றத்துடன் இணைந்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ரூ.25,000 தொகை தவிர்த்து, அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தின்போது இது வகைக்காக இன்னும் கூடுதல் நிதி சேகரிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 6 - இரங்கல் தீர்மானம்:
ஹாங்காங்கில் வணிகம் செய்து வந்த - காயல்பட்டினத்தைச் சார்ந்த கத்தீப் ஏ.ஜே.செய்யித் அஹ்மத் அவர்களின் மறைவிற்கு பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் அன்னாரின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை ஒளிமயமானதாக்கி வைத்திட இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 7 - சாதனை மாணவர்களுக்கு பாராட்டு:
நடைபெற்று முடிந்தள்ள ப்ளஸ் 2 அரசுப்பொதுத்தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்,
நகரளவில் இரண்டாமிடம் பெற்ற மாணவர் எஸ்.டி.முஹம்மத் அஃப்ரஸ், மூன்றாமிடம் பெற்ற சொளுக்கு எம்.ஏ.சி.உம்மு ஸரீஹா ஆகியோருக்கும்,
உளவியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள ஆர்.முத்துமாரி என்ற மாணவிக்கும் பேரவை மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.
அத்துடன், அடுத்த கல்வியாண்டில் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என்ற பேரவையின் ஆசையை இக்கூட்டம் வெளிப்படுத்திக் கொள்கிறது.
தீர்மானம் 8 - வருடாந்திர பொதுக்குழு:
பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை 18.06.2011 அன்று, ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமூக அரங்கில் நடத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனாப் யு.ஷேக்னா நன்றி கூற, ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீயின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் சார்பாக,
தகவல்:
செய்யித் அஹ்மத்.
(துணைத்தலைவர்)
படங்கள்:
கபீர்,
(செயற்குழு உறுப்பினர்)
கவ்லூன், ஹாங்காங். |