காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தையொட்டி மேல் திசையில் அமைந்துள்ளது செய்கு ஹுஸைன் பள்ளி. இப்பள்ளிவாசல் கட்டிடம் நாளுக்கு நாள் சிதிலமடைந்து வந்தது. பள்ளி கட்டிடத்தின் இந்நிலையைக் கண்ணுற்ற காயல்பட்டினத்தைச் சார்ந்த பிரமுகர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அனுசரணையில் பள்ளிவாசலைப் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா 16.05.2011 அன்று காலை 12.00 மணிக்கு நடைபெற்றது. இ.டி.ஏ. நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குனர் ஹாஜி நூருல் ஹக் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். பள்ளி புதுக்கட்டிட அனுசரணையாளர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பள்ளியின் பரிதாப நிலை தன்னை பெரிதும் கவலைகொள்ளச் செய்ததாகவும், அதன் வெளிப்பாடாகவே இச்சிறிய பணியை தான் சிரமேற்கொண்டு செய்ததாகவும் தனதுரையில் தெரிவித்த அவர், என்னதான் பள்ளி கட்டிடத்தால் அழகுற்று இருந்தாலும், சுற்றுவட்டாரத்தில் குடியிருக்கும் மக்கள் இப்பள்ளிவாசலில் வழமையாகத் தொழ வந்து, வரிசைகளை நிரப்புவதன் மூலம் மட்டுமே முழு அழகு பெறும் என்றார்.
பின்னர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ உரையாற்றினார்.
சிதிலமடைந்துள்ள இந்த செய்கு ஹுஸைன் பள்ளிவாசல், நகரப் பிரமுகர் ராவன்னா அபுல்ஹஸன் ஹாஜி அவர்களின் கண்களைத் திறந்தது போல, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை முஹ்யித்தீன் பள்ளிவாசல் நம் நகரின் செல்வந்தர்கள் கண்களைத் திறக்க வேண்டும்...
அவ்விடத்தில் அப்பள்ளியின் முக்கியத்துவம், அதன் மூலம் சுற்றுவட்டார மக்களுக்கு செய்யப்பட்டு வரும் சமூக முன்னேற்றப் பணிகளைக் கருத்தில் கொண்டு, நமதூர் செல்வந்தர்கள் அப்பள்ளிக்குத் தேவையானவற்றை தாராள மனதுடன் செய்து கொடுக்க வேண்டும்... என்று அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இறுதியாக, பள்ளி பொருளாளர் இஸ்மத் நன்றி கூற, துனீஷியா நாட்டிலிருந்து காயல்பட்டினம் வந்திருந்த அஷ்ஷெய்க் ஆதில் முஹம்மத், நகரின் இஸ்லாமிய சுற்றுச்சூழல் குறித்து புகழ்ந்துரைத்ததோடு, பள்ளி திறப்பு விழாவிற்காக சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
விழாவில், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், பெரம்பூர் எல்.கே.எஸ். அதிபர் ரஃபீ அஹ்மத், ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், பல்லாக் சுலைமான், மவ்லவீ அப்துல் வதூத் ஃபாஸீ, ஹாஜி சுலைமான் (48), பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, ஹாஜி எம்.என்.மக்கீ (48), ஹாஜி எல்.எம்.இ.கைலானீ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலை சென்னை தி.நகர் எல்.கே.எஸ்.கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா திறந்து வைத்தார். அனைவரும் பள்ளி காணிக்கை தொழுகை தொழுத பின், லுஹர் தொழுகை ஜமாஅத்துடன் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் விழா நிகழ்வுகள் நிறைவுற்றன.
விழா ஏற்பாடுகளை பள்ளி தலைவர் ஹாஜி அலீ அக்பர் தலைமையில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர். |