திருச்செந்தூர் பேரவைத் தொகுதியில் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 640 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அ.தி.மு.க-வில் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 2009-ம் ஆண்டு தி.மு.கவில் இணைந்தார். அனிதாவின் வருகை தி.மு.க. மாவட்டச் செயலரான என். பெரியசாமிக்குப் பிடிக்கவில்லை. தனது செல்வாக்குக்கு அனிதாவின் வளர்ச்சித் தடையாக வந்துவிடுமே என பெரியசாமி அஞ்சினார். இதனால், அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.கவுக்கு வந்ததில் இருந்து அவருக்கும், பெரியசாமிக்கும் இடையே மெüன யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மாவட்டச் செயலர் என்ற வகையிலும், மூத்த தலைவர் என்ற வகையிலும் பெரியசாமியின் செல்வாக்குதான் கட்சியில் ஓங்கியிருந்தது. அவரது கருத்துக்குதான் கட்சித் தலைமை முக்கியத்துவம் கொடுத்தது.
இந்நிலையில், 2011 தேர்தல் முடிவுதான் கட்சியில் தனது செல்வாக்கை உயர்த்தும் என அனிதா ராதாகிருஷ்ணன் உறுதியாக நம்பினார். இதற்கான வேலைகளை கட்சியில் சேர்ந்ததில் இருந்தே அவர் செய்து வந்தார். இதுவே அவரது வெற்றிக்கு வித்திட்டது.
குறிப்பாக, மாவட்டச் செயலர் என். பெரியசாமியின் மகளும், அமைச்சருமான பெ. கீதா ஜீவன் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். கீதா ஜீவன் தோல்வியடைந்து, அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருப்பது பெரியசாமியின் ஆதரவாளர்களுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2001ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த தொகுதியில் களம் கண்ட அனிதா ராதாகிருஷ்ணன் அப்போது 11,193 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதைத் தொடர்ந்து கட்சியில் மாவட்டச் செயலர், அமைச்சர் என வேகமாக வளர்ச்சி அடைந்து அ.தி.மு.க-வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 2006 தேர்தலிலும் வெற்றி பெற்றார். அப்போது, 13,916 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
2006 தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தோல்வியடைந்த போதிலும் திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அதுமட்டுமல்ல தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தார். தி.மு.க-வுக்கு மாறிய நிலையிலும் அவரது செல்வாக்கு குறையவில்லை. 2009-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இப்போது 2011 தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் தி.மு.க-வில் அவரது செல்வாக்கு உயருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியில் எந்தவித பொறுப்பும் இல்லாமல் இருக்கும் அவருக்கு, விரைவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:
தினமணி (15.05.2011) |