தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 15ஆம் தேதி திறக்கப்பட வேண்டும் என்று நேற்று (10.06.2011) நடந்த தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி பரிமளா தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி திட்டம் இந்த ஆண்டில் அமல்படுத்த முந்தைய திமுக அரசு முடிவு செய்தது. ஆனால் அதிமுக அரசு பதவி ஏற்றதால் சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டு முந்தைய பாடத்திட்டம் செயல்படும் என்று அறிவித்தது. இதனால் புதிய புத்தகம் அச்சடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடந்த ஜூன் 1ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் வரும் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் சமச்சீர் கல்வி திட்டம் சம்பந்தமாக ஐகோர்ட் நேற்று அதிரடி தீர்ப்பு அளித்ததால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 15ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் திறக்கவேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி பரிமளா உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் தூத்துக்குடி எஸ்.ஏ.வி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பரிமளா தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி, கோவில்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி ராஜலட்சுமி, முதன்மை கல்வி அதிகாரி நேர்முக உதவியாளர்கள் குமாரதாஸ், ரத்தினம், கண்காணிப்பாளர் முனியப்பன், பள்ளித்துணை ஆய்வர்கள் சங்கரய்யா, விஜயன், சுற்றுச்சூழல் அலுவலர் பேச்சிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அனுப்பிய சுற்றறிக்கை வழங்கப்பட்டது. அந்த சுற்றறிக்கை படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15ஆம் தேதி திறக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
ஏற்கனவே பள்ளிகளில் உள்ள வகுப்பறை வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளது, இன்னும் தேவையான வசதிகள் என்ன, பள்ளிகளில் கோர்ட் வழக்குகள் விபரம் உள்ளிட்ட பள்ளியின் பல்வேறு விபரம் குறித்து அஜென்டா தலைமையாசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த விபரத்தை பூர்த்தி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் அனைத்தும் வரும் 15ஆம் தேதி திறக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி (பொ) பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.
நன்றி:
தினமலர் (11.06.2011) |