இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மாநாட்டு பொதுநிகழ்வுகளை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலும், கண்காட்சி உள்ளிட்ட குறிப்பிட்ட சில நிகழ்வுகளை நகரிலுள்ள உள்ளரங்கங்களில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
மாநாட்டில் இடம்பெறவுள்ள கண்காட்சியில் அரிய பல பொருட்களைக் கொணர்ந்து, பொதும்க்கள் பார்வைக்கு வைப்பதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுவிட்டன. அதன் முதற்கட்டமாக, கீழக்கரை நகரின் காழீ (டவுன் காஜீ) மவ்லவீ காதர் பக்ஷ் ஹுஸைன் சித்தீக்கீ வசமுள்ள மொகலாய மன்னர் அவுரங்கசீப் தன் கைப்பட எழுதிய தங்க முலாம் பூசப்பட்ட திருக்குர்ஆன் பிரதி உள்ளிட்ட அரிய பொருட்களை கண்காட்சிக்குத் தருமாறு கேட்டுக்கொள்ளும் பொருட்டு அவரது இல்லத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநாட்டு ஏற்பாட்டுக் குழு செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில் நேற்று மதியம் 03.00 மணியளவில் கீழக்கரை நகர காழீ இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் உடனிருந்தனர்.
|