ரியாத், சவுதிஅரேபியா - இறைவனின்; பேரருளால் ரியாத், தமிழ் தஃவா ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும், ஸுலய் தஃவா நிலையத்தின் அனுசரணையுடனும் இம்மாத சன்மார்க்க தஃவா நிகழ்ச்சி; சென்ற 01.07.1432 (03 ஜூன் 2011) அன்று வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகை முதல் இஷா வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் காயலர்கள் உள்பட பெரும்பாலோனர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக மன்னர் ஸுஊத் பல்கலைக்கழக மாணவர் அஷ்ஷைக் அப்துல்லாஹ் (மதானி) அவர்கள் "சிறிய பாவங்களில் அலட்சியமாக இருப்பதின் விபரீதம்" எனும் தலைப்பில் குத்பாப் பிரசங்கத்தை நிகழ்த்தினார். அவர் தமதுரையில் "நவீன யுகத்தில் நாளுக்கு நாள் கண்டுபிடிக்கப்படும் சாதனங்கள் மனிதனை பாவங்களின்பால் இழுத்துச் செல்வதில் எவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ளன என்பதையும், அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரேவழி இறையச்சமே" என எடுத்துரைத்தார்.
ஜும்ஆத் தொழுகையை அடுத்து ரவ்ழா தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷைக் ஹிஜாஸ் (அப்பாஸி) அவர்கள் நபித் தோழியர் வரிசையில் "அண்ணை ஸபிய்யா (ரலி) அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்" எனும் தலைப்பில் ஓர் சிற்றுரை நிகழ்த்தினார். இஸ்லாமிய வரலாற்றில் ஓர் எதிரியைக் கொண்ட முதல் வீராங்கனை அவர்களே என அவர் தமதுரையில் குறிப்பிட்டதோடு, அவர்களின் குடும்ப நிலை பற்றிய முக்கிய சில தகவல்களையும் முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வழமைபோன்று இளைஞர், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற அதேசமயம் பெண்கள் பகுதியிலும் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை அடுத்து பகலுணவும், ஓய்வும் வழங்கப்பட்டு மறு நிகழ்ச்சிகள் அஸர் தொழுகையின் மறுகனமே ஆரம்பமாகின.
ஆரம்ப நிகழ்வாக இஸ்லாமிய சட்டங்கள் சம்பந்தமான விடயங்களை உள்ளடக்கிய வினாத்தாள் கலந்துகொண்டோர் சகலருக்கும் வழங்கப்பட்டு, அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் நிகழ்ச்சியின் இறுதியில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தர்பியா நிகழ்ச்சிக்காக கலந்துகொண்டோர் குழுக்கு பதின்மர் என்ற அடிப்படையில் பல குழுக்களாக வகுக்கப்பட்டு, பயணங்களின்போது ஓத வேண்டிய சில திக்ருகள் மனனமிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டதோடு, அவற்றின் கருத்தும், அதனை ஓதுவதால் ஏற்படும் பயன்களும் தெளிவுபடுத்தப்பட்டன.
தர்பிய்யா நிகழ்ச்சி முடிவடையவே ஸுலய் தஃவா நிலையத்தின் தஃவா பிரிவின் தலைவர் அபூ மாஜித் பஹ்த் பின் இப்றாஹீம் அவர்கள் அல்-குர்ஆனையும், நபிவழியையும் கடைப்பிடிப்பதன் அவசியம் பற்றி சிற்றுரை நிகழ்த்தினார். அவரது உரையை அஷ்ஷைக் ரம்ஸான் (மதனி) அவர்கள் மொழிபெயர்த்தார்.
மறு நிகழ்ச்சியாக "அல்லாஹ்வின் அருள்களை அடைந்து கொள்வதற்கான வழிகளென்ன? " எனும் கருப்பொருளில் அஷ்ஷைக் தஸ்தீக் (மதனி) அவர்களின் விஷேட உரை இடம்பெற்றது. அவர் தமதுரையில் 'நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதற்கான பல வழிகளை இனங்காட்டியதோடு, பாவமொன்றைப் புரிந்துவிட்ட ஓர் உண்மை விசுவாசியினதும், உண்மை விசுவாசியல்லாத ஒருவனினதும் மனநிலை எவ்வாறானது" என்பதை ஹதீஸ் நிழலில்; விளக்கினார்.
நிகழ்ச்சிகளின் இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும், பரிசளிப்பும் நடைபெற்றதோடு அடுத்த மாதத்துக்கான மகளிருக்கான வினாத்தாள்களும் விநியோகிக்கப்பட்டு, கடந்த மாத கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதிய மகளிருக்கான பரிசுகளை அவர் அவர்களின் கணவர்மார்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்சிகள் யாவும் சிறப்பாக நிறைவுபெற வாய்ப்பளித்த வல்லவன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்....
தகவல்:
தமிழ் தஃவா ஒன்றியம் சார்பாக
ரியாதிலிருந்து அபு அஹ்மத் சோனா
காட்டு தைக்காத் தெரு |