இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மாநாட்டு பொதுநிகழ்வுகளை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலும், கண்காட்சி உள்ளிட்ட குறிப்பிட்ட சில நிகழ்வுகளை நகரிலுள்ள உள்ளரங்கங்களில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இம்மாநாட்டுப் பணிகளை பொறுப்பேற்று செயல்படுத்துவதற்காக, ஆலோசனைக்குழு, மாநாட்டு ஏற்பாட்டுக்குழு, வரவேற்புக்குழு, விழாக்குழு, மலர் வெளியீட்டுக்குழு, கண்காட்சிக் குழு, தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்துறை குழு, விருந்தோம்பல் குழு, தன்னார்வப் பணிக்குழு, மகளிர் அரங்க ஏற்பாட்டுக் குழு என பல்வேறு குழுக்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு விழாக்குழு, விருந்தோம்பல் குழு, தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்துறை குழு உள்ளிட்ட குழுக்களின் சார்பில் தனித்தனி தேதிகளில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், மாநாட்டு மேடை ஏற்பாடுகள், இருக்கை வசதிகள், விருந்தினர் உபசரிப்பு, தகவல் தொடர்பு, ஒளி-ஒலிப்பதிவுகள், பந்தல் அமைப்பு, விளம்பரங்கள் என பல்வேறு அம்சங்கள் குறித்து உத்தேச முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அனைத்துக் குழுக்களின் சார்பில் கலந்தாலோசிக்கப்பட்டவை குறித்து, அவற்றின் தலைவர்கள் கூடி இறுதி முடிவெடுக்கும் பொருட்டு இன்று மாலை 05.00 மணிக்கு, மாநாட்டு அலுவலகமான காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தின்போது, மாநாட்டிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வலைதளமும் துவக்கப்படவுள்ளது. கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச்சந்திப்பில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் செய்தியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். |