ஜூலை முதல் தமிழகத்தில் மின்வெட்டு இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் உரிய வகையில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு வெள்ளிக்கிழமை பதிலளித்து அவர் ஆற்றிய உரை:
தமிழகத்தில் தேவைக்கேற்ப மின் திட்டங்களை ஏற்படுத்தாததும், நிர்வாகச் சீர்கேடுகளுமே மின்வெட்டு ஏற்பட முக்கியக் காரணம். முந்தைய அதிமுக ஆட்சியில் மின் திட்டங்கள் தீட்டப்படாததுதான் மின்வெட்டுக்குக் காரணம் என உண்மைக்கு மாறான செய்தியை திமுக பரப்பி வந்தது.
முந்தைய அதிமுக ஆட்சியில், வடசென்னை அருகே வல்லூரில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையமும், தூத்துக்குடியில் அதே அளவு திறன் கொண்ட அனல் மின் நிலையமும் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் 95 மெகாவாட் திறன் கொண்ட எரிவாயு சுழலி மின் நிலையமும், 500 மெகாவாட் திறன் கொண்ட குந்தா நீரேற்று மின் நிலையம் அமைப்பதற்கான திட்டமும் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டங்களை திமுக அரசு தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும். மின் உற்பத்தி நிலையங்களை முந்தைய திமுக அரசு சரிவர நிர்வகிக்கவில்லை. இதனால் மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.
காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி:
தமிழகத்தில் 6 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான மின் தொடரமைப்பு வசதி இல்லை. காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை முழுமையாகப் பெற இயலவில்லை. தேவையான மின் தொடர் கட்டமைப்பு வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
பழுதடைந்த நிலையிலுள்ள மின் நிலையங்கள் உடனே சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை வழுதூர் எரிவாயு சுழலி மின் நிலையம் ஜூன் 01ஆம் தேதி முதல் இயக்கப்பட்டது. குத்தாலம் எரிவாயு சுழலி மின் நிலையமும் இந்த மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மின்வெட்டு குறையும்:
மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறை நிலையை மாற்றி அமைக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் மின் வாரியத்தின் நிறுவு திறன் மேலும் 10 ஆயிரம் மெகா வாட்டுக்கு அதிகமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும் வரும் ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் இப்போதுள்ள 3 மணி நேர மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறைக்கப்படும்.
புதிய சட்டசபை வளாகம் உரிய வகையில் பயன்படுத்தப்படும்:
அமைச்சர்கள் ஒரு புறமும், அதிகாரிகள் மறுபுறமும் இருந்து புதிய தலைமைச் செயலகத்திலும், புனித ஜார்ஜ் கோட்டையிலும் இருந்து செயல்பட்டால் அரசு நிர்வாகத்துக்கு குந்தகம் ஏற்படும். எனவே, இரண்டு வெவ்வேறு கட்டடங்களில் இருந்து செயல்பட முடியாது. நிர்வாக வசதிக்காக தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவில் அரசியல் காரணம் எங்கிருந்து வந்தது?
முழுமை அடையாத நிர்வாகத்துக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய கட்டடத்தில் இருந்து எவ்வாறு செயல்பட முடியும்? புதிய பிளாக் ஏ கட்டடம் பயன்படுத்தப்படாமல் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு விடும் என்று திமுகவினர் அங்கலாய்க்கத் தேவையில்லை. அந்தக் கட்டடம் உரிய முறையில் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.
நன்றி:
தினமணி (11.06.2011) |