தூத்துக்குடி மாவட்டத்தின் 21ஆவது ஆட்சியராக டாக்டர் ஆர்.செல்வராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றார். மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இதுவரை பணியாற்றி வந்த சி.நா.மகேஷ்வரன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து மாநில தகவல் ஆணையச் செயலராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.செல்வராஜ் தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
பணியிட மாறுதலாகிச் செல்லும் சி.நா. மகேஸ்வரன் பொறுப்புகளை புதிய ஆட்சியர் ஆர்.செல்வராஜிடம் ஒப்படைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏதாவது பிரச்னைகள், குறைகள் இருந்தால் உடனடியாக ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும். குறைகளைத் தீர்க்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.செல்வராஜ் தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்கள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.செல்வராஜ் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி. இவர், கடந்த 2005, 2006 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.
அதன் பிறகு சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராகவும், கோவை தமிழ்நாடு ஜவுளிக் கழகத்தில் மேலாண்மை இயக்குநராகவும், சென்னையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் துணைச் செயலராகவும் பணியாற்றினார்.
கடைசியாக மாநில தகவல் ஆணையத்தின் செயலராகப் பணியாற்றி இப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளார்.
நன்றி:
தினமணி (09.06.2011) |