கடந்த மே மாதம் 28, 29 தேதிகளில் காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) சார்பில் குட்டியாப்பள்ளி வளாகத்தில், “வெற்றியை நோக்கி” என்ற தலைப்பில் இஸ்லாமிய இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.
அம்மாநாட்டின் இரண்டாம் நாள் காலை காலை 10.00 மணியளவில், “கலாச்சார பிரச்சினைகளும், இஸ்லாமிய தீர்வுகளும்” என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை, சென்னை இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் வழிநடத்தினார்.
இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் உமரீ, சமூக ஆர்வலர் எஸ்.எம்.ஏ.பஷீர் ஆரிஃப், இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) செயலாளர் எஸ்.எச்.ஷமீமுல் அஸ்லாம் ஆகியோர் கருத்தரங்கில் பல்வேறு செய்திகளை பொதுமக்களுடன் பகிர்ந்துகொண்டனர். பொதுமக்களும் இக்கருத்தரங்கில் சமூகம் தொடர்பான தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இறுதியாக, டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் நிறைவுரையாற்றினார்.
கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள், நிறைவுரையில் வழங்கப்பட்ட தீர்வுகள் குறித்து, இவ்விவாதத்தில் அங்கம் வகித்த சமூக ஆர்வலர் பஷீர் ஆரிஃப் வழங்கும் தொகுப்பு பின்வருமாறு:-
“கலாச்சார பிரச்சினைகளும், இஸ்லாமிய தீர்வுகளும்” என்ற தலைப்பில், காயல்பட்டினம் உட்பட தமிழக சூழலில் முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்கும் ஒழுக்கம் சார்ந்த வரம்புமீறல்கள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றைக் களைந்திட தேவையான தீர்வுகள் என்பன விவாதிக்கப்பட்டன.
இவ்விவாத அரங்கின் முன்னணியாளர்களுடன் மாநாட்டிற்கு வந்திருந்தோரும் ஆழ்ந்த சமூக கரிசனத்துடன் பங்கேற்றனர்.
விவாத அரங்கில் விவாதிக்கப்பட்டவற்றை பின்வரும் தலைப்புகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.
பிரச்சினைகள்:
Ø மண முறிவுகள்...
Ø மண வாழ்வில் சிக்கல்கள்...
Ø தவறான தொடர்புகள்...
Ø பெற்றோருக்குக் கீழ்ப்படியா குழந்தைகள்...
மேற்குறிப்பிடப்பட்ட தலைப்புகளில், தவறான தொடர்புகள் குறித்தே பிரதானமாகவும், கூடுதலாகவும் இவ்வரங்கில் விவாதிக்கப்பட்டது.
காரணங்கள்:
Ø தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்களைக் காணல்...
Ø செல்லிட தொலைபேசி...
Ø வலைதள பயன்பாடு...
Ø தினத்தந்தி, தினகரன், தின மலர், மாலை மலர், மாலை முரசு போன்ற செய்தித்தாள்களில் வரும் ஒழுக்கம் சார்ந்த குற்றக் கதைகள்...
Ø பெற்றோர் - குழந்தைகள் உரையாடலின்மை...
Ø தொழில் நிமிர்த்தமாக தகப்பன் குடும்பத்தை விட்டும் நீண்ட காலம் பிரிந்திருத்தல்... அதன் விளைவாக குழந்தைகளுக்கு தந்தையின் கண்டிப்புடன் கூடிய அறிவுரைகள் கிடைக்காமற்போதல்...
Ø தனிமை...
Ø உடல் உழைப்புக்கு மீறிய சத்து மிகுந்த உணவுகளினால் தேவையற்று உடல் உணர்வுகள் தூண்டப்படல்...
Ø கலப்புக் கல்வி...
Ø கூடாநட்பு...
Ø பாதுகாவலற்ற பயணம்...
Ø பெண்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாக இருத்தல்...
Ø இளந்தம்பதியர் தொழில் நிமிர்த்தம் அதிக காலம் பிரிந்திருத்தல்...
Ø ஆண்களற்ற குடும்பத்தினரின் அத்தியாவசிய வெளித்தேவைகளுக்கு அந்நிய ஆண்களைச் சார்ந்திருத்தல்...
Ø கல்வி நிலையங்களில் நடக்கும் சமூக நிகழ்வுகளில் இடம்பெறும் ஆபாசங்களும், ஆண்-பெண் கலப்புகளும்...
தீர்வுகள்:
Ø குழந்தை வளர்ப்பு, விடலைப் பருவ மேலாண்மை, திருமணத்திற்கு முன் - பின் போன்ற அம்சங்களிலும், தலைமுறை இடைவெளி போன்ற அம்சங்களிலும் முறையான உளவளத்துணை (counseling) தேவை. ஷரீஅத் நீதிமன்றங்கள் உருவாக்கப்படல்...
Ø வன்முறை எதற்கும் தீர்வில்லை...
Ø இந்த ஒழுக்கக் கேடு பிரச்சினைகளை தனியாக அணுகாமல், அதனை சமூக, பொருளாதார, மருத்துவ, ஆன்மிக பரிமாணத்தில் அணுகுதல்...
Ø அல்லாஹ்வின் பண்புகள், நியதிகள், விருப்பு - வெறுப்பு வரம்புகள், தண்டனை, வெகுமதி, எதிர்பார்ப்புகள் போன்றவற்றை ஜனரஞ்சகமாக மக்களிடையே அறிமுகப்படுத்தல்... தொழுகையின் ஓதல்கள், திக்ர் எனும் இறைதியானம், இஸ்திக்ஃபார் எனும் பாவமன்னிப்பு, அன்றாடம் பல்வேறு சூழல்களில் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் உள்ளிட்டவற்றை பொருளுணர்ந்து ஓதல்...
Ø தொலைக்காட்சிக்காக செலவழிக்கும் நேரத்தை வெகுவாகக் குறைப்பது / தொலைக்காட்சிப் பெட்டியை முற்றிலும் ஒழிப்பது... மாற்றாக நல்ல நூற்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது...
Ø பெற்றோர் தம் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்தல், உரையாடுதல்...
Ø பொருளாதாரம் சார்ந்ததாக மட்டும் வாழ்க்கையைப் பாராமல், இவ்வுலக வாழ்க்கைக்கென நல்லதொரு இலட்சியத்தைக் கடைப்பிடித்து வாழல்...
Ø தொடர்பாடல் சாதனங்கள் (தொலைபேசி, வலைதளம் உள்ளிட்டவை...) பயன்பாட்டு விஷயத்தில் கண்காணிப்பையும், பாதுகாப்பான சூழலையும் உருவாக்குதல்...
Ø கலப்புக் கல்வியைத் தவிர்த்தல்...
Ø ஓய்வு நேரம் அதிகமாக உள்ள பெண்களின் ஆற்றலை மேம்படுத்தவும், பயன்படுத்தவும் நல்ல திட்டங்களையும், நிறுவனங்களையும் உருவாக்குதல்...
Ø கூடிய மட்டிலும் பெண்களை பணிக்கு அனுப்புவதைத் தவிர்த்தல்...
Ø ஜமாஅத், கொள்கை வேறுபாடுகளின்றி அனைவரும் இம்முயற்சிகளுக்குத் தோள் கொடுத்தல்...
Ø பெண்கள் தாம் அணியும் பர்தா உடையில் பிறரைக் கவரும் வேலைப்பாடுகள் - அலங்காரங்களைத் தவிர்த்தல்... (இவ்வகையான பர்தாக்கள் பர்தாவின் நோக்கத்தையே ஒழித்துவிடுகின்றன.)
Ø “வாசனைத் திரவியம், நறுமணம் பூசிக்கொண்டு வெளிச்செல்லும் பெண்கள் விபச்சாரிகள்” என்ற கருத்திலான நபிமொழியைக் கவனத்தில் கொண்டு செயல்படல்...
Ø ஒழுக்கக் கேடுகளையும், குற்றங்களையும் வரி வரியாக விவரிக்கும் செய்தித்தாள்களைத் தவிர்த்துவிட்டு, THE HINDU, THE INDIAN EXPRESS, தினமணி போன்ற தரமான செய்தித்தாள்களை வாங்கிப் படித்தல்...
மேற்கண்டவாறு விவாத அரங்க நிகழ்வுகள் அமைந்திருந்தன. |