தென்னிந்திய மக்களின் நீண்ட நாள் கனவான தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13ம் தேதி துவங்குகிறது. தூத்துக்குடியில் நடக்கும் விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கப்பல் போக்குவரத்தை துவக்கி வைக்கிறார்.
இலங்கையில் உள்நாட்டு சண்டை நடப்பதற்கு முன்பு வரையிலும் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து வெகு சிறப்பாக நடந்து வந்தது. தமிழகத்தில் இருந்து ஜவுளி, மளிகை பொருட்கள், கட்டட சாமான்கள் உட்பட பல பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் இலங்கையில் இருந்து பல பொருட்கள் தமிழகத்திற்கு வந்தது. இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் எனவும், இதன் காரணமாக தென்னிந்தியாவில் சுற்றுலாத் துறை மேம்பாடு அடைவதோடு, ஏராளமான அளவில் அந்நிய செலவாணி கிடைக்கும் என்றும் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இலங்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு போர் முடிவடைந்ததை தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இதனை தொடர்ந்து இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின் பெயரில் இரு நாடுகளுக்குமிடையே தூத்துக்குடி-கொழும்பு மற்றும் ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
துறைமுகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்:
இதேபோல் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் 106 மீட்டர் நீளமும் 36 மீட்டர் அகலமுள்ள பயணிகள் முனையம் அமைக்கப்பட்டது.
இந்த முனையத்தில் 300 சதுர மீட்டர் அளவுள்ள வருகை கூடம், கப்பலுக்கு செல்லும் பயணிகளுக்காக 710 சதுர மீட்டர் அளவுள்ள கூடம், குடிமை சார் ஆய்வு பணிகளுக்குத் தேவையான 4 அறைகள், சுங்கத்துறை பணிகளுக்கு தேவையான 4 தடுப்பு அறைகள், 70 சதுர மீட்டர் அளவுள்ள முக்கிய விருந்தினர்கள் அறை, உயர் வகுப்பு பயணிகள் தங்கும் அறை, மருத்துவ பரிசோதனை அறை, முதலுதவி அறை, சிறு குழந்தைகள் காப்பகம், பயணிகள் சோதனை செய்யும் கருவிகள், கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளிட்டவை சுமார் ரூ.2.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
மும்பையைச் சேர்ந்த பிளமிங்கோ என்ற நிறுவனத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தினை நடத்துவதற்கு ஷிப்பிங் கார்பரேசன் ஆப் இந்தியா அனுமதி வழங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்புவிற்கு செல்லும் கப்பலும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
வாரம் இருமுறை கப்பல் போக்குவரத்து:
பயணிகள் கப்பல் தூத்துக்குடியில் இருந்து வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு இயக்கப்படவுள்ளது. தூத்துக்குடியில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளி கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு கொழும்புவை சென்றடையும். இதேபோல் வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு கொழும்புவில் இருந்து புறப்படும் கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேரும்.
பயணக்கட்டணம்:
பயணிகள் கட்டணமாக எக்கனாமிக் வகுப்பு-ரூ.2990, டீலக்ஸ் வகுப்பு-ரூ.3450, சூப்பர் டீலக்ஸ்-ரூ.3680, முதல் வகுப்பு-ரூ.13800(இரண்டு பயணிகளுக்கு) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 10 சதவீதமும், 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு 50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 60 சதவீதமும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கப்பலில் ஆயிரத்து 100 பேர் வரை பயணம் செய்ய முடியும். தூத்துக்குடி துறைமுகத்தில் பயணிகளை ஏற்றும், இறக்கும் பணியை ராஜா ஏஜென்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்றுள்ளது.
துவக்க விழா:
தென்னிந்திய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து 13ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் நடக்கும் விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்கி வைக்கிறார். துவக்க விழா நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் மோகன்தாஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி துறைமுக சபையினர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
நன்றி:
தினமலர் (08.06.2011) |